Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ஜிக்கல் தாக்குதல் சரி.. அது சாமானியனையும் தாக்குகிறதே..?!

500, 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்ற அறிவிப்பு  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ள நிலையில் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்  என்ன என்பது குறித்து பொருளாதார ஆலோசகர்களிடம் பேசினோம்.  அரசின் இந்த முயற்சியின் மூலம் முழுமையான பயனை எட்ட முடியாது. ஆனால் கணக்கில் வராமல் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்  பணத்தை ஓரளவுக்கு கட்டுக்குள்  கொண்டு வர முடியும்  என்றும், மோடியின் இந்த அறிவிப்பில் அரசியலும் உள்ளது என்கிறார்கள்  

சர்ஜிக்கல் அட்டாக் ! 

நிதி ஆலோசகர் உப்பிலியிடம் பேசியபோது , "மோடியின்  இந்த  அறிவிப்பு  சாதாரண மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்தாலும் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வியாளர்கள், கனிவமவள தொழில் அதிபர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.  

கணக்கில் வராத பணம் அனைத்தும் பெரும் முதலாளிகளிடமே உள்ளது. அதனைக்  கொண்டுவருவதற்கான சர்ஜிக்கல் அட்டாக் தான் இது. நாட்டில வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கை 2 சதவிகிதம்தான். மாத சம்பளம் வாங்குபவர்கள் மட்டும்தான் வரி செலுத்துவதாக புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன.பெரும் முதலாளிகளிடம் இருந்து வரி செலுத்துவது முழுமையாக இல்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . எனவே பதுக்கப்பட்டுள்ள பணத்தை வெளியே கொண்டு வரவே  இதனைச் செய்துள்ளார்.  இந்தியா - பாகிஸ்தான் மற்றும் நேபாளம் எல்லைகளில்  தீவிரவாதிகள் மட்டும் ஊடுருவவில்லை. கள்ள நோட்டும்தான்  ஊடுருவியுள்ளது . இந்த நடவடிக்கை அத்தகைய கள்ளநோட்டுக்களைத் தடுத்தால் இது வரவேற்க கூடியதுதான்"   என்றார்.

சாதாரண மக்களுக்குப் பாதிப்பு ! 

மோடியின் இந்த அதிரடி உத்தரவை நிதி ஆலோசகர்கள் வரவேற்று இருந்தாலும் பொதுக்காப்பீட்டு நிறுவனத்தைச்சேர்ந்த ஆனந்த்,  "இந்த நடவடிக்கை அவசியமில்லாதது. கறுப்புப் பணத்தை மீட்க  ஆயிரம் வழிகள் உள்ளது . மக்கள்  மத்தியில்  ஒரு மாஸ் கிரியேட் செய்யவே இந்த நடவடிக்கையை மோடி எடுத்துள்ளார் .கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யாரும் 500 , 1000 ஆக வைத்திருக்கவில்லை. அனைவருமே  தங்கமாக , நிலமாக, வீடாக   வாங்கி வைத்துள்ளார்கள் .  எனவே பாதிக்கப்படுவது பெரும்  முதலாளிகள் அல்ல. அது மட்டுமின்றி அப்படியே வைத்திருந்தாலும்  மாற்றுவதற்கு ஏற்ற வகையில்  போலியான கணக்கைத் தயார் செய்வதற்கான அவகாசத்தை மோடி கொடுத்துள்ளார். எப்படி இருந்தாலும் பதுக்கல்காரர்கள்   தப்பித்துக் கொள்வார்கள் 

கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்றால் பெரும் புள்ளிகளைச் சட்ட வளையத்துக்குள் கொண்டு வர, அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளது. அதன்படி அவர்களிடம் தீவிரமான, நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தினாலே போதுமானது. இதுபோன்ற சாதாரண மக்களை நெருக்கடியில்  தள்ளும்  நடவடிக்கைகள்  அவசியமில்லை. நாட்டு மக்களின் கவனத்தை  ஈர்க்கவே இந்த நடவடிக்கை என்றார்,

- கே புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ