Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தரையில் கிடந்த தங்கச்செயினை ஒப்படைத்த மாணவனுக்கு கல்வி இலவசம்!

கீழக்கரையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிடைந்த தங்கசெயினை ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு, செயினை தவறவிட்ட மாணவியின் பெற்றோர் ஒரு வருடத்துக்கான கல்விச் செலவை ஏற்றுக் கொண்டனர்.

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பளியில் பாத்திமா ரூஃபைலா என்ற மாணவி 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன், பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச் சென்ற மாணவி ரூஃபைலா, கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்கச் செயினைத் தவறவிட்டார். மாணவியின் தாய், ஆயிஷா, அந்த பள்ளி மைதானத்திற்கு போய் பல முறை தேடியும் காணாமல் போன தங்கச் செயின் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் அதே மைதானத்திற்கு விளையாடச் சென்றுள்ளனர். அப்போது மைதானத்தில் மாணவி ரூபைலா தொலைத்த தங்க செயின் சாய் ராம் என்ற மாணவனின் கண்ணில் தென்பட்டுள்ளது. அந்த தங்கச் செயினை மாணவன் சாய்ராம், உடனடியாக பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்தான்.

விசாரித்த போது, ரூஃபைலா என்ற மாணவி  தங்கச் செயினை தொலைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாய் ஆயிஷாவை பள்ளிக்கு அழைத்த நிர்வாகம் அவரிடம் செயினை ஒப்படைத்தது. தங்க செயின் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அதனை கண்டெடுத்த மாணவன் சாய் ராமுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு அளித்தார். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள  மாணவன் சாய்ராம் மறுத்து விட்டான். பள்ளி கரெஸ்பாண்டெண்ட் பணத்தை பெற்றுக் கொள்ள வற்புறுத்தியும் மாணவன் சாய்ராம் ரொக்கப்பரிசை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.

ஆனாலும் அந்த சிறுவனின் நேர்மையான குணத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டுமென கருதிய ஆயிஷா, சாய்ராமின் ஒரு வருட படிப்புச் செலைவ ஏற்றுக் கொள்வதாக கூறி ரூ.3 ஆயிரத்தை பள்ளிக்கட்டணமாக செலுத்தினார். இஸ்லாமியா பள்ளி நிர்வாகமும் மாணவனுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டியது.

இது குறித்து செயினைத் தவறவிட்ட மாணவியின் தாய் ஆயிஷா கூறுகையில், ''தங்கச் செயின் தொலைந்து போய் ஒரு வார காலமாகி விட்டது. இனி கிடைக்காது என்றே முடிவுக்கே வந்து விட்டேன். திடீரென்று பள்ளியில் இருந்து போன் வந்தது. 'உங்க மகள் தொலைத்த செயின் கிடைத்துள்ளது. வந்து வாங்கீக்கங்க ' என்றார்கள். பள்ளிக்கு சென்ற போதுதான் மாணவனின் நிலையும் தெரிய வந்தது. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து படிக்க வந்துள்ளான் என்றார்கள். உடனடியாக அவனுக்கு ரூ. 2 ஆயிரம் கொடுத்தேன். அந்த நிலையிலும் சிறுவன் வாங்க மறுத்து விட்டான். இந்த வயசுலையே இப்படியா என வியந்து போனேன். பையனோட பெற்றோர் எப்படி வளர்த்துருக்குறாங்கனு ஆச்சயிப்பட்டேன். அப்புறம்தான் அவனது ஒரு வருட பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தினேன். துபாயில் வசிக்கும் என் கணவரிடமும் விஷயத்தை சொன்னேன். அவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்'' என தெரிவித்தார்.

கீழக்கரையைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் சாய்ராம். தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறான். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவன். மாணவனிடம் பேசினோம் ''மைதானத்துல எது கிடந்தாலும் உடனே ஆசிரியரிடம் ஒப்படைத்து விடுவேன். அடுத்தவங்க பொருள் நமக்கு எதுக்கு? பெரியவான ஆனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவேன் என்றான்.

வருங்காலத்தில் தமிழகத்துக்கு ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ரெடி!

-எம். குமரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ