Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏராளமான ஏழைகள் வாழும் இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தேவை தானா?

ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என நேற்று இரவு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்ததன் மூலம், கருப்பு பணம் முழுமையாக ஒழியும் என சொல்லப்படுகிறது. பெரும்பான்மையானோர் இதை வரவேற்றுள்ளனர். ஆனால், இதற்கு மாற்றாக ரூ.500, ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவது என்பது மீண்டும் கருப்பு பணத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும், புதிய ஊழல்களுக்கு வித்திடும் என்றும் சொல்லப்படுகிறது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டை செல்லாது என அறிவித்து விட்டு, ரூ.500, ரூ.2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய முரண்பாடு என சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இதற்கு தானா ரூ.500, ரூ.1000 நோட்டுகள்?

நம் நாட்டின் சமூகப்பொருளாதார அளவுகோள்கள் முரண்பாடான இரு பிரிவுகளை கொண்டவை. அதாவது பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அதாவது தினமும் ரூ.100 கூட சம்பாதிக்க முடியாதவர்கள். இவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதத்துக்கும் அதிகம். ஆனால் நம்மிடம் தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிகம் புழங்குகிறது. ஆனால் அதை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஏழைகள் அல்ல. மிக குறைந்த அளவில் உள்ள பணக்காரர்கள் தான் இந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் எதற்கு வசதியாக இருக்கிறது என்று பார்த்தால், முதன்மை வகிப்பது ஊழல் தான். கையாள மிகவும் வசதியாக இருக்கிறது என்பது தான் இதற்குக்காரணம். கடத்தல், கருப்பு பண பரிமாற்றாங்களுக்கு எளிதில் கொண்டு செல்லலாம் என்பதால் ஊழல்வாதிகளுக்கு பெரும் வசதியாக இருந்தது இந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள்.

ஊழல்வாதிகளை காப்பாற்றி வந்தது இவை தான்...!

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், கருப்புப் பொருளாதாரத்திற்கு எல்லாமுமாக இருப்பது இந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தான். உதாரணத்துக்கு 50 கோடி ரூபாயை 1000, 500 ரூபாய் நோட்டுகளாக இல்லாமல், 100, 50 ரூபாய் நோட்டுகளாக ஓரிடத்தில் இருந்து மற்றொடு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு சிக்கல் ஏற்படும்?. அது போன்ற சிக்கல்களையும், பிரச்னைகளையும் கொடுக்காமல் ஊழல்வாதிகளை காப்பாற்றி வந்தது இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான்.

இப்போதைய சூழலில் கணக்கில் வரும் பணத்தை வைத்திருப்பவர்கள், வர்த்தக பரிவர்த்தனை செய்யும் போது, கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை தான் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அதுதான் எளிது. கார்டை மட்டும் பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும். ஆனால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், எல்லா பரிவர்த்தனைகளையும் பணத்தை கொண்டு தான் செய்ய வேண்டி வரும். பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவிக்க... பதுக்க இந்த ரூ.500, ரூ.1000 மிக எளிதாய் இருக்கிறது. இதில் ரூ.100, ரூ50  நோட்டுகளை பயன்படுத்துவது என்பது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் ரூ.50, ரூ.100 நோட்டுகளாக நீங்கள் பணத்தை எடுத்துச்செல்லவோ, பதுக்கி வைக்கவோ பெரிய இடம் தேவைப்படும்.

எனவே இந்த சூழலில் இது போன்ற பெரு மதிப்பு கொண்ட நோட்டுகளை திரும்ப பெறுவது என்பது கருப்பு பண பரிமாற்றாத்துக்கு பெரும் தடையை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காக தான் நாடு முழுவதும் கடுமையான சிரமங்களுக்கிடையே மக்கள் இதை கொண்டாடுகிறார்கள். ஆனால் இதற்கு பதில் ரூ.2000 நோட்டை புதியதாக அறிமுகப்படுத்துவது தான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வருவது சரியல்ல..

இது தொடர்பாக பொருளாதார பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். "பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக பெரு மதிப்பு கொண்ட நோட்டுகளை திரும்ப பெறுவது என்பது பல நாடுகளும் பின்பற்றிய நடைமுறை தான். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஒரு காலத்தில் 10,000 மதிப்புடைய நோட்டுகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அதிகபட்சமாக 100 மதிப்புடைய நோட்டுகளே அச்சிடப்படுகின்றன. பிரிட்டனில் இப்போது புழக்கத்திலிருக்கும் அதிகபட்ச மதிப்புடைய நோட்டு 50 பவுண்டு மட்டுமே. கள்ள நோட்டு மற்றும் பல விதமான சட்டத்திற்குப் புறம்பான, எதிரான செயல்பாடுகளில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்தவே பிரிட்டன் இப்படியான நடவடிக்கைகளை எடுத்தது.

இந்தியாவில் தற்போது எடுக்கப்பட்டது அப்படியான முடிவு தானா என்பது, ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் விடுவதன் மூலம் சந்தேகத்துக்குள்ளாகி உள்ளது. இன்னும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்க்காத கிராமங்களும், கிராம மக்களும் இந்தியாவில் இருக்கின்றன. அவர்கள் 500 ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே அரிது. இந்தியாவில் பெரும் பகுதியினர் இப்படியான சூழலில் தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏராளமான ஏழைகள் வாழும் இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வருவது சரியானது என சொல்ல முடியாது," என்றனர்.

பெரு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அவசியமற்றவை

இந்தியாவில் அதிகம் உள்ள ஏழை மக்கள் பயன்படுத்துகிற, அவர்களுக்கு மிகுந்த தேவை இருக்கிற சில்லறைகள், 10,20,50 ரூபாய் நோட்டுகளுக்கு இப்போதும் பெரும் தட்டுபாடு நிலவுகிறது. இந்த சூழலில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டு, இப்போது மீண்டும் புதிய 500 ரூபாய் நோட்டையும், இதுவரை இல்லாத வகையில் ரூ.2 ஆயிரம் நோட்டையும் கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்த அளவிலே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்படும் என அரசு சொல்லியுள்ள போதும், இது அவசியம் தேவை தானா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஏராளமான ஏழைகள் உள்ள இந்தியாவுக்கு பெரு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் என்பது அவசியமற்றவை. அவை ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோத பண பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்குமே பயன்படும். அதைத்தான் செய்கிறதா அரசு?

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்