Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடிட்டர்களைத் தேடி ஓடும் அரசியல் கட்சிகள்!  -அதிர்ச்சியில் அமைச்சர்கள் #ModiFightsCorruption

த்திய அரசு வெளியிட்டுள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே பலத்த மௌனத்தை உருவாக்கியிருக்கிறது. ' அமைச்சர்கள் பலரும் ஆடிட்டர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

மத்திய அரசின் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை நேற்று இரவு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டன. ' 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் இன்று இரவு 12 மணி முதல் செல்லாது' என அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த அதிர்வலை எழுந்தது. குறிப்பாக, தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களில் கரன்ஸிகளை வாரியிறைக்கும் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் அதிர்ந்து போனார்கள். 

" அடுத்து என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்" என விவரித்த அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர், " மத்திய அரசின் அறிவிப்பால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிட்டனர். ' மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தாராளமாக விநியோகம் செய்யுங்கள். அவர்கள் வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளட்டும். நமக்கு ஒரு சிரமமும் இல்லை. நாம் நேரடியாக வங்கிக்குச் சென்று மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை' என ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர் யோசனை தெரிவித்தார். தவிர, முக்கியமான பணிகளுக்காக பெறப்படும் பணம், மேலிடத்துக்கு அன்றாடம் கொண்டு செல்லப்பட்டுவிடுவதால், முக்கிய பிரமுகர்கள் மத்தியில் எந்தவித சலசலப்பும் இல்லை. நேற்று இரவு ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், தன்னுடைய உதவியாளரிடம் பேசும்போதும், ' என்னிடம் இருப்பதெல்லாம் அக்கவுன்ட்டட் மணிதான். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. இருக்கும் பணத்தையும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்' எனப் பேசியிருக்கிறார். 

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு முகாம்களிலும் அரசின் அறிவிப்பு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், முக்கியமான பணிகளுக்காக பெறப்படும் தொகைகள் பெரும்பாலும் பணமாக முடங்கிக் கிடப்பதைவிடவும், ரியல் எஸ்டேட், பங்கு பத்திரங்கள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, பணப் பரிவர்த்தனைகள் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் உள்பட தேவைப்படும் நேரங்களில் மட்டும், பணம் தேவைப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அந்தந்த நேரத்தில் மட்டுமே ஈடுபடுகின்றனர். தற்போது கையில் இருக்கும் பணத்தை எந்த வகைகளில் மாற்றிக் கொள்வது; ஆதரவாளர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும் பணத்தை எந்த வகைகளில் பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆடிட்டர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்" என்றார் விரிவாக. 

" ஆனால், நேற்று இரவில் இருந்தே அமைச்சர்கள் பலரும் பேய் அடித்தது போல்தான் அமர்ந்திருக்கிறார்கள். உடனடியாக, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் கண்டறியப்படுவோம் என்பதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து பேசி வருகின்றனர். கட்சிப் பணிகளுக்கான செலவு உள்பட சில பரிவர்த்தனைகளுக்காக கையில் வைத்துள்ள சில கோடி ரூபாய்களை மாற்றுவது குறித்துத்தான் யோசித்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் சிலர் மூலமாக வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்யவும் அச்சப்படுகின்றனர். எனவே, தங்களுடைய உறவினர்கள் சிலர் மூலமாக, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இடைத்தேர்தலை விடவும் பணத்தை எப்படி மாற்றுவது என்பது பற்றித்தான் விவாதிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு எந்தவித பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். ' தலைமை என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படுவோம்' எனப் பேசியுள்ளனர்" என்கிறார் ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர். 

இன்னும் இரண்டு நாட்களுக்கு எந்த பரிவர்த்தனையும் கிடையாது என்ற ஆளும்கட்சி நிர்வாகிகளின் முடிவால், பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என உறுதியாக நம்புவோம்.  

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ