Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மோடி அறிவித்தது ஏழை மக்கள் மீதான சர்ஜிகல் தாக்குதல்'

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பு ஏழை எளிய நடுத்தர உழைப்பாளிகள் மீதான சர்ஜிகல் என்னும் மெல்லிய தாக்குதல் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கறுப்பு பணப் புழக்கம் முற்றாக அனைத்து வகையிலும் முடக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பண முதலைகள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை முடக்குவதற்கு பெரும் அளவில் உதவிடாது என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுக் கால நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பல்வேறு துறைகளில் அடைந்த தோல்வியை மறைப்பதற்காகவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தன்னிச்சையான அறிவிப்பு நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வங்கிகளுக்கு இந்தியாவின் முதன்மையான 10 நிறுவனங்கள் உட்பட பெரும் முதலாளிகளின் நிறுவனங்களிலிருந்து வரவேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி வாராக் கடனை மீட்க முடியாத மோடி அரசு கறுப்புப் பணத்தை மீட்கிறோம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மீது சர்ஜிகல் தாக்குதலை நடத்தி அவர்கள் வாழ்வாதாரத்தை சீரழித்துள்ளது.

ஒரு சில பெரும் முதலாளிகளுக்கு மட்டும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் மோடி அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில் உற்பத்தி மிக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மோடி ஆட்சியில் நாட்டின் 8 முக்கிய தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது என மத்திய அரசின் தொழிலாளர் வாரியமே தெரிவித்துள்ளது. டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.70 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 5.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இலக்கு என மோடி அரசு நிர்ணயித்தது. ஆனால், அரசுக்கு வந்ததோ வெறும் ரூ.5000 கோடி மட்டுமே. இந்த வருவாய் இழப்பும் ஒரு பெரும் ஊழலே.
 
இப்படியாக பல்வேறு துறைகளில் தனது தவறான கொள்கை மற்றும் அணுகுமுறைகளினால் படுதோல்வி அடைந்துள்ள மோடி அரசு கறுப்புப் பணம் என்ற பெயரில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைச் செல்லத்தக்கது அல்ல என்று அறிவித்து சாதாரண மக்களை வஞ்சித்துள்ளது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணம் ரூ.80 இலட்சம் கோடியை நாட்டுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை மோடி அரசினால் ஒரு விழுக்காடு கூட காப்பாற்ற இயலவில்லை. ரூ.500 மற்றம் ரூ.1000 நோட்டுகளைச் செல்லாதது என்ற அறிவிப்பு கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்துள்ள பெரும் பணக்காரர்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த பணத்தை டாலர்களாகவோ அல்லது தங்கமாகவோ அல்லது வெளிநாட்டு வங்கியிலோ அல்லது பினாமிகளின் பெயரில் நிலமாகவோ பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.
 
இந்தியாவின் முதன்மையான பத்து நிறுவனங்கள் உட்பட பெரும் முதலாளிகளிடமிருந்து இந்திய வங்கிகளின் வாராக் கடனாக ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது. இந்த பணத்தை பெரும் முதலாளிகளிடமிருந்து மீட்க சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்னும் துல்லிய தாக்குதல் நடத்த இயலாத மோடி அரசு,  ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து ஏழை எளிய நடுத்தர உழைப்பாளிகள் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி அதனைப் பெருமையாக பேசுவது முதலாளித்துவ ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றது.
நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடவிருக்கும் நிலையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் தன்னிச்சையான அறிவிப்பு நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி அரசு உடனடியாக திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைபிடித்து, ஏழை நடுத்தர மக்களையும் வியபாரிகளையும் அடித்ததட்டு உழைக்கும் மக்களையும் வஞ்சித்து வரும் மோடி அரசுக்கு எதிராக மக்களின் கோப அலை பெரும் புயலாக வலுவடைந்து வருகின்றது. மோடி ஆட்சி விரைவில் செல்லாக்காசாகும் என்பது மட்டும் உறுதி" என்று கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ