Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத் தேவையைப் பூர்த்தி செய்யுமா புதிய நோட்டுக்கள்? - வங்கி ஊழியர்களின் அச்சம் #ATMAlert

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு. ' நாளை இரவுக்குள் ஏ.டி.எம் மையங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வந்து சேர்ந்துவிடுமா?' என அச்சத்தோடு கேள்வி எழுப்புகின்றனர் வங்கி ஊழியர்கள். 

மத்திய அரசு நேற்று வெளியிட்ட ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பால், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இன்று காலை முதலே அனைத்து இடங்களிலும் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. சிறு வணிகர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதில் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். ' நாளை காலை முதல் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மாற்றிக் கொள்ளலாம்' என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. " வங்கி ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். பணத்தை மாற்றிக் கொள்வதற்காக கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் வங்கிகளை முற்றுகையிடும்போது, அவர்களை சமாளிப்பதே மிகப் பெரிய சவால்தான். அதற்குள் போதுமான தொகை வந்து சேருமா என்ற கவலையும் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என ஆதங்கப்படுகிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து நம்மிடம்,

" ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நிதி அமைச்சகத்தில் இருந்து சில புள்ளி விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளி விபரங்கள் எதைச் சுட்டிக் காட்டுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ' 2011 முதல் 2016 வரையில் 40 சதவீதம் வரையில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் உயர்ந்துள்ளன' என்கின்றனர். அதில், '500 ரூபாய் 76 சதவீதமும் 1000 ரூபாய் 109 சதவீதமும்  உயர்ந்துள்ளது' என அறிக்கை சொல்கிறது. எவ்வாறு இந்தத் தொகை உயர்ந்தது என்பதைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. கள்ள நோட்டு மூலம் அதிகரித்தது என்றாவது சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சொல்லப்படவில்லை. அப்படியானால், சட்டபூர்வமாக அரசு அச்சடித்து வெளியிட்டுள்ள நோட்டுகளின் எண்ணிக்கை மட்டும்தானே உயர்ந்துள்ளது. இந்தியா என்பது பணப்புழக்கம் அதிகம் உள்ள ஒரு நாடு. இங்கு 64 சதவீத மக்கள் படித்தவர்கள். வங்கிக் கணக்குகள் இன்னும் பல பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை. இங்கு ஒரு லட்சம் நபர்களுக்கு 7 வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ளன. வெளிநாடுகளைப் போல் ஒரு லட்சம் நபர்களுக்கு 40 வங்கிக் கிளைகள் என்பதெல்லாம் இன்னமும் சாத்தியப்படவில்லை. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பீதியை மட்டுமே உருவாக்கும். அதுமட்டுமல்லாமல், 2010-ம் ஆண்டு உலக வங்கி அறிக்கையை நிதி அமைச்சகம் குறிப்பிடுகிறது. 

அதில், '1999-ம் ஆண்டு 20.7 சதவீதமாக இருந்த நிழல் பொருளாதாரம், 2007-ம் ஆண்டில் 27.2 சதவீதமாக உயர்ந்துவிட்டது' என்கிறார்கள். 1999 முதல் 2007-ம் வரையிலான எட்டு ஆண்டுகளில் ஐந்தாண்டுகள் பா.ஜ.கவின் ஆட்சிதானே இருந்தது. அப்போது நிழல் பொருளாதாரத்தை அவர்கள் ஏன் வளரவிட்டார்கள்? இதற்கு அவர்களிடம் என்ன விளக்கம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இப்படிச் செய்யாவிட்டால், 'பணவீக்கத்தை அதிகப்படுத்திவிடும்' என்கிறார்கள். பணவீக்கம் அதிகமானால், சாதாரண ஏழை நடுத்தர மக்கள் பாதிப்படைவார்கள். அதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் வராமல் சென்றுவிடும் என்பது சரிதான். ஆனால், எங்களுடைய கேள்வியெல்லாம், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்தாலே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திவிட முடியும். அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைப்பதன் மூலம்தான் விலைவாசி உயர்கிறது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 150 டாலர் விலையில் விற்கும்போது இருந்த பெட்ரோல் விலை, பேரலுக்கு 30 டாலராக குறைந்தபோதும் 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுதான் பணவீக்கத்துக்கு மிக முக்கியக் காரணம். 

பங்குச் சந்தையில் பங்குப் பத்திரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விளையாடுகிறது. அதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2004 முதல் 2008 வரையில் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தபோது பங்குப் பத்திரம் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு, பங்குப் பத்திரம் அமலுக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் தடுக்காதவர்களா, கறுப்புப் பணத்தை தடுக்கப் போகிறார்கள்? சி.பி.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜூலை 7-ம் தேதி அன்று மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். 'வராக்கடன் பட்டியலில் உள்ள 100 பேரின் பெயர்களைச் சொல்லுங்கள்' எனக் கேட்டார். மத்திய அரசு பதில் சொல்லவில்லை. அக்டோபர் மாதம் இறுதியில், உச்ச நீதிமன்றம், ' 500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலைக் கொடுங்கள்' என்று கேட்டது. ' இதனால் பெரும் செல்வந்தர்கள் பாதிக்கப்படுவார்கள்' என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மறுத்தது. ' வேண்டுமென்றால் உறையிலிடப்பட்ட கவரில் கொடுக்கிறோம்' என்கிறார்கள். இதைக் கண்டுகொள்ளாத பிரதமரா கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்? நமது போலீஸ் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்கிறார்கள். அவர்களுக்கு கள்ளப் பணம் எங்கு தயாராகிறது என்பது தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். கள்ளப் பணம் சாதாரண மக்கள் கைகளில்தான் புழங்குகிறது. பணம் செல்லாது என அறிவிப்பதன் மூலம் யாருக்கு நல்லது நடந்துவிடப் போகிறது? 

மேலும், ' கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் தானாகவே முன்வந்து செலுத்தியதில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கிடைத்ததாக' அரசு சொல்கிறது. பணத்தை பதுக்குபவர்களுக்கு தானாக முன்வந்து செலுத்தும் சலுகைகளைச் செய்வதன் மூலம், வரி ஏய்ப்பை இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். பணத்தை பதுக்கியவர்களுக்கு அபராதம் விதித்து, சிறையில் தள்ளினால்தான் மற்றவர்கள் வழிக்கு வருவார்கள். ' சுவிஸ் வங்கியில் பணத்தை முதலீடு செய்தவர்களைக் கண்டறிய, ஹெச்.எஸ்.பி.சி மூலம் ஒப்பந்தம் போட்டுவிட்டோம்' என்கிறார்கள். ஆனால், அங்கு பெறப்பட்ட கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்களை ஏன் அதிகாரபூர்வமாக வெளியில் சொல்லவில்லை? இவர்களின் இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற நடவடிக்கைகள் தொடரும்போது, ' 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது' என அறிவிப்பதன் மூலம், சாதாரண ஏழை மக்கள் எந்தப் பொருட்களையும் கடையில் வாங்க முடியாத அவலநிலைக்குத் தள்ளிவிட்டனர். 

' இன்றைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. ஆனால், நாளை முதல் வங்கியில் செல்லும்' என்கிறார்கள். இது என்ன வகையான முரண்பாடு? மக்கள் மத்தியில் கடும் பீதியை உருவாக்கிவிட்டனர். ' அதிரடி நடவடிக்கை' என்று பெயர் வாங்குவதற்கான ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்கிறோம். அன்றாடக் கூலிகள் முழுக்க பணத்தை வைத்துத்தான் புழங்குகிறார்கள். ' பெரும் முதலாளிகள் நெட் பரிவர்த்தனையில் ஈடுபடலாம்' என்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வங்கி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாக உள்ளார்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். டிசம்பர் 30-ம் தேதிக்குள் நோட்டை மாற்றிக் கொள்ள முடியுமா என்பதற்கு உறுதியாக பதில் சொல்ல முடியவில்லை. சொந்த நாட்டிலேயே நேற்று செல்லுபடியான நோட்டுக்கள் இன்று செல்லாது என்று சொல்வதன் மூலம், ஒரு பதற்றம் ஏற்பட்டுவிட்டது. நாளைக்கு பணத்தை மாற்றுவதற்காக வங்கியை முற்றுகையிடக் கூடிய சூழல் ஏற்படும். அதற்கேற்ப, வங்கிகளில் பணம் இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். ஆதார் அட்டையா, அடையாள அட்டையா என்பது பற்றி வங்கிகளுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை. நாளை இரவுக்குள் ஏ.டி.எம் மையங்களுக்குள் பணம் நிரப்பப்பட வேண்டும். அவை போதுமானவையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்படவே வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக. 

வங்கி ஊழியர்களின் கவலை ஒருபுறம் இருந்தாலும், ' அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. பணத்தை மாற்றுவது குறித்து மக்களுக்கு எவ்வித கவலையும் தேவையில்லை' என்கின்றனர் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். 

- ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close