Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரூபாய் நோட்டுகளுக்குத் தயாராகும் ஏ.டி.எம்-கள் !

ங்களால் ஒருநாள் செல்போன் இல்லாமல் இந்த நவீனயுகத்தில் இருந்து விட முடியுமா? என்பது பொதுவாக நண்பர்கள், ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி.

அதேபோல், இரண்டு நாட்கள் நாடு முழுவதும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் எனப்படும் ஏ,டி.எம்-கள் செயல்படாவிட்டால், உங்களின் நிலை என்ன? என்பதை, இன்று மக்கள் அனைவரும் அனுபவித்து வருகிறார்கள்.

ஆம். "ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்"  பிரதமர் மோடி வெளியிட்ட திடீர் அறிவிப்பால், நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளன. ஏ.டி.எம். இயந்திரங்கள் 2 நாட்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இடைப்பட்ட இந்த 2 நாட்களில், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணியில் மத்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதற்கு வசதியாகவே இந்த 2 நாட்கள் ஏ,டி.எம் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

லிகுடிட்டி சந்தையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி இயக்குனர் உர்ஜித் படேல் உறுதியளித்துள்ளார். எனவே பத்திரங்கள், கமோடிட்டி சந்தை, தங்கம் போன்றவற்றின் வர்த்தகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் முழுவீச்சில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எஸ்.பி.ஐ. பணியாளர்கள் 24 மணி நேரமும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கத் தொடங்கும் போது, கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை அனைத்து வங்கியாளர்களுமே வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். என்றாலும், உரிய நேரத்தில் தங்கள் வங்கிக்கு வந்து சேர வேண்டிய ரூபாய் நோட்டுகளில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.சி.ஐ.சி,ஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், கள்ள நோட்டுகளால் ஏற்படக்கூடிய மாற்று பொருளாதாரத்தைத் தடுக்கும் மிக முக்கியமான ஒரு நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்வதற்குரிய அனைத்து முறையான வழிமுறைகளையும் இந்த நடவடிக்கை ஏற்படுத்தும்" என்றார்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் கெகி மிஸ்திரி கூறுகையில், "இதுபோன்ற எந்தவொரு மிகப்பெரிய நடவடிக்கையும் சில காலத்திற்கு சற்றே சிரமத்தை ஏற்படுத்துவது இயற்கை. இதனை எதிர்கொள்ளாமல் நாம் எதையும் செய்ய முடியாது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மிகப்பெரிய பலனை அளிப்பதுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்" என்றார்.

2007-ம் ஆண்டில் ரூ.500, 1,000 நோட்டுகளின் புழக்க விகிதம் 69 சதவீதமாக இருந்தது, இது அண்மையில் 87 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, அவற்றை ஒழிக்கவும், கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுகள் குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் மிகவும் வசதியாக அமையும் என்பதால், இந்த புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசும் தெளிவுபடுத்தியுள்ளது.

எது எப்படியோ, ஏ.டி.எம். மையங்களில் அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து மக்கள், புதிய கரன்சிகளை எடுப்பதற்காக குவிவார்கள் என்பதும், வங்கிகளில் ரூ.500, 1,000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள் என்பதும் உறுதி.

- சி.வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ