Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நானோ சிப் இருக்காம்... லபக்குன்னு பிடிப்பாங்களாம்... - ஏழு பேரு எகிடுதகிடா பேசுறாங்க! #Just4Fun

நேத்து பன்னெண்டு மணியிலேருந்து 500, 1000 நோட்டுகள் எல்லாம் செல்லாதுனு அறிவிச்சாலும் அறிவிச்சாங்க... முழுசாப் புரிஞ்சும் புரியாமலும் நடு ராத்திரியில் ஏ.டி.எம்-முக்குப் போய் இந்த மக்கள் பண்ணின அட்ராசிட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அது போதாதுனு, இந்த திடீர் அறிவிப்பால் ஏழு பேர் ஏழாயிரம் விதமாகக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கும் 'நம்பத்தகுந்த வட்டாரச் செய்திகள்' தான் இவை... 

கிருஷ்ணன் ஜி : 

ஒரே ராத்திரியில் இந்தியாவே ஆடிப்போச்சுல்ல. மொத்தக் கருப்புப் பணத்தையும் என்ன பண்றதுனு தெரியாம மூட்டையாக் கட்டி வெச்சுக்கிட்டு கடல்ல எறியறதா, கண்மாயில எறியறதானு பணக்காரய்ங்கள்ல்லாம் புலம்பிக்கிட்டு கிடக்கிறாய்ங்க. கொஞ்சூண்டு காசையாச்சும் வெளுப்பாக்கிடலாம்னு நினைச்சுக் கடைசியில அம்புட்டும் வெளியே வரப்போகுது. அப்புறம் பணப்புழக்கத்துல அமெரிக்கா, ஜப்பானையெல்லாம் முந்திப் போகப்போறோம். அடுத்த வருசம் வல்லரசாகிருச்சுனு நம்மளையெல்லாம் டெல்லிக்குக் கூப்பிட்டு விருந்து வைக்கப் போறாங்க. பாருங்க. ஆப் கி பார் மோடி சர்க்கார்!

 

டிஜிட்டல் டங்காமாரி : 

புதிதாக அறிமுகமாகும் 2000 ரூபாய் தாளை நீங்கள் எங்காவது தொலைத்துவிட்டால், அதன் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மெல்லிய நானோ சிப் உதவியுடன் GPS தொழில்நுட்பத்தின் மூலமாக செயற்கைக்கோளுடன் தொடர்புகொண்டு, உரிமையாளரின் உண்மையான ஆதார் அடையாளத்தைத் தெரிந்துகொண்டு, தானாகவே வங்கிக்குச் சென்று உங்கள் சேமிப்புக் கணக்கில் தன்னை வரவு வைத்துக்கொள்ளும். மேலும், இதில் அமைந்திருக்கும் அல்ட்ரா நானோ ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனரில் உங்களின் கைரேகை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுவிடும். யாரேனும் பணத்தைத் திருடியிருந்தால் உடனேயே கைவிரல் அடையாளங்கள் மாறியிருப்பதன் மூலம் குறித்த நபரின் ரேஷன் கார்டு விபரங்களைக் காவல்துறைக்கு அனுப்பிவிடும். இந்தத் திட்டத்தின் மூலம் இனிமேல் திருட்டு நடைபெற வாய்ப்பே இல்லை. தி பவர் ஆஃப் மோடிஜி!

 

ஒயிட்ரைஸ் வெள்ளச்சாமி :

கருப்பு பணம் எல்லாம் கருப்பா இருக்குமான்னு கேட்கிறது எவ்வளவு அபத்தமோ அதே மாதிரிதான் கருப்பு பணம் ரொக்கமாவே இருக்கும்னு நம்புறதும். தங்கம், ரியல் எஸ்டேட், ஃபாரீன் கரன்சி, வெளிநாட்டு அக்கவுன்ட்னு கருப்புப் பணத்தை பதுக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதை விட்டுட்டு நோட்டு செல்லாதுனு அறிவிச்சா கருப்புப் பணம் ஒழியும்னு சொல்றது எல்லாம்...அடப் போங்க பாஸ்! அது சரி, மோடி சுவிஸ்ல இருக்கிற பணத்தை மீட்டுக்கொண்டு வர்றேன்னுதானே வாக்குறுதி கொடுத்தாரு. அங்கே பணம் வெச்சுருக்கிறவங்க லிஸ்ட்டைக்கூட வெளியே சொல்லாம... இப்போ திடீர்னு மேஜிக், ஸ்டன்ட் பண்றதெல்லாம் உ.பி எலெக்‌ஷனை மனசுல வெச்சுதான். வழக்கம்போல இதை நம்பியும் நாமதான் ஏமாறப்போறோம்.

 

ஒப்பீனியன் உலகநாதன் :

கருப்புப் பணத்துக்கு எதிரான போல்டான முடிவு சார் இது! பதுக்கி வெச்சிருந்த கருப்புப் பணமெல்லாம் தன்னால தேடிவரும் பாருங்க. அதிரடியான முடிவுதான் சார் இந்த நாட்டுக்கு சரிப்பட்டு வரும். கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருத்தர் அக்கவுண்ட்டுக்கும் 15 லட்சம் டெபாசிட் பண்ணுவோம்னு சொன்னப்போ சிரிச்சவங்க எல்லாம் இப்போ என்ன பேசுறதுனு தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்ருக்காங்க. அவகாசம் தராம திடீர்னு தடை அறிவிச்சதால மக்கள் பாதிக்கப்படுறாங்கனு சிலர் சொல்றாங்க. முன்னாடியே இந்த விஷயம் தெரிஞ்சா கருப்புப் பணம் இருக்கிறவங்க எல்லாம் சுதாரிச்சுருவாங்கனுதான் சைலன்ட்டா அரசு இதை செயல்படுத்திருக்கு. நாடு நல்லாருக்க இரண்டு நாள் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

பி.பி ராஜன் :

திடுதிப்புனு 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சா என்ன சார் பண்றது? ஏதோ 50 காசு ஒரு ரூபா செல்லாதுனு சொல்ற மாதிரி சொல்லிட்டாங்க. பெட்ரோல் பல்க்ல போடுறதுனா 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க. இல்லாட்டி கிளம்புங்கனு சொல்றாங்க. மளிகைக்கடைகள்லகூட காசை வாங்க மாட்டேங்கிறாங்க. கையில் கம்மியா ரூபாய் வெச்சிருக்கிறவன்லாம் என்ன பண்ணுவான்னு கொஞ்சம்கூட யோசிக்காம, முறையான முன்னேற்பாடு இல்லாம சர்வாதிகாரமா அறிவிக்கிறது நியாயமா?! இது ஜனநாயக நாடுதானான்னே சந்தேகமா இருக்கு.

 

4ஜி பொன்னம்பலம் :

இந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டெல்லாம் மாத்துறதுக்கு டிசம்பர் மாசம் லாஸ்ட் வரைக்கும் டைம் கொடுத்தாங்க. அதே மாதிரிதான் ஜியோ சிம்முக்கும் டிசம்பர் லாஸ்ட் வரைக்கும் டைம் கொடுத்து இருந்தாங்க. இப்போ ரெண்டயும் மாற்ற மார்ச் 31 வரைக்கும் டைம் கொடுத்து இருக்காங்க. இது ரெண்டுத்துக்கும் எதோ பெரிய தொடர்பு இருக்கு ப்ரோ. ஜியோ சிம் வாங்கினப்போ நம்ம டீடெயில்ஸ் எல்லாத்தையும் ஆதார் கார்ட் மூலமா எடுத்தாங்க. இப்போ நம்ம எல்லாரையும் அடிக்கடி ஆன்லைன் பேங்கிங் யூஸ் பண்ண வெச்சு இருக்கங்க. அதுவும் அந்த சிம் வந்தப்போ ஸ்மார்ட் போன் உள்ளவங்களுக்கு மட்டும்தான் கொடுத்தாங்க, இப்பவும் ஆன்லைன் பேங்கிங் யூஸ் பண்ணுற மக்களைத்தான் அதிகமா குறி வைக்கிறாங்க. ஜியோ சிம் ஓனர் அம்பானியோட ரிலையன்ஸ்லதான் ஆர்பிஐ கவர்னரே முன்னாடி வொர்க் பண்ணினாராம். இது மூலமா இன்னும் என்னென்ன டீடெய்ல்ஸ்லாம் எடுப்பாங்களோ தெரியலை. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!

 

கீரனூர் முனுசாமி : 

என்னய்யா... என்னென்னமோ சொல்றீங்க. பெரிய தலைக்கட்டுக எல்லோரும் பல கோடி ரூவாயை மண்ணுக்குள்ள பொதைச்சு வெச்சுருக்காய்ங்களாம். ஓட்டுப் போட்டா அதையெல்லாம் பிரிச்சு எல்லோருக்கும் பதினைஞ்சு லட்ச ரூவாயை பெட்டியில வெச்சுக் கொடுத்தா செலவழிச்சுப் போடுவீகனு பேங்க் கணக்குல போடுவோம்னு சொன்னாக. நானும் அப்பவே ஐநூறு ஓவாயைக் கட்டி அக்கவுன்ட் ஆரம்பிச்சா... இன்னும் கணக்குல பணமும் சேரலை. இப்போ என்னடான்னா ஐந்நூறு ரூவாயும் ஆயிரம் ரூவாயும் செல்லாதுனு அறிவிச்சுப் போட்டாக. இப்போ கையில் இருக்கிற முந்நூறு ரூவாயை வெச்சு நாளைக்கு நாங்க மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்குவோமா, இல்லை மத்தியானச் சாப்பாட்டுக்கு அரிசி வாங்குவோமா? ஒண்ணுமே புரியலையே மக்கா..!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close