Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் தடாலடி 'லைம்லைட்' மந்திரம்!

நரேந்திர மோடி... இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு புகழ்மிக்கத் தலைவராக உருவெடுத்துள்ளார். 

இந்தியாவில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை, பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 3 முறை பதவி வகித்து வருபவர் என்ற அளவிலேயே மக்கள் மோடியை அறிந்திருந்தார்கள். 

எல்.கே.அத்வானி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த, பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க முடியாமல் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையை மக்களவையில் அலங்கரிக்க வேண்டியதாயிற்று. மன்மோகன் சிங் தலைமையில் 2-வது முறையாக, முன்பு பெற்றிருந்த இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களைப் பிடித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்தது. 

இந்த சூழ்நிலையில் தான், மக்கள் மத்தியில் எல்.கே.அத்வானிக்கு போதிய செல்வாக்கு இல்லை என்பது போன்ற தோற்றம் பா.ஜ.க-விற்குள்ளேயே ஏற்பட்டது. பல விமர்சனங்களையும் அத்வானி எதிர்கொள்ள நேரிட்டது. நரேந்திர மோடி போன்ற ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற பேச்சு 2011-ம் ஆண்டுவாக்கிலேயே ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவர்கள், பா.ஜ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களால் பரவலாக முன்வைக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த மாதங்களில் நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார பா.ஜ.க தலைவராகவும், தொடர்ந்து பிரதமர் வேட்பாளராகவும் முன்மொழியப்பட்டார். என்னதான் அத்வானி, இதற்கு துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மோடி என்ற வசீகர மனிதர் சுமார் ஓராண்டுக்கு முன்பே நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அயராது சுற்றுப்பயணம் செய்து தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார்.  தேர்தல் குறித்த சிந்தனையே இல்லாத போது, நரேந்திர மோடி, தனக்கென்று ஒரு பாணி அமைத்து பிரச்சார யுக்திகளுடன் களமிறங்கினார். 

மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கு வங்கம், கேரளம் மற்றும் தமிழ்நாடு 3 மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றியை வாரிக் குவித்தது. மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரர், பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்  மோடி மீதான நம்பிக்கை பா.ஜ-வுக்கு வெற்றியை அளித்ததா? அல்லது காங்கிரஸ் அரசின் தோல்வி, பா.ஜ.விற்கு பெரும்பான்மை வெற்றியை அளித்ததா? என்ற விவாதத்திற்குள் எல்லாம் நாம் செல்லவில்லை. 

ஆனால், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் மோடி என்பது மட்டும் உறுதி.

மத்திய அரசின் எந்தவொரு அறிவிப்பானாலும் அதனை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரிவிப்பதில் தன்னை எப்போதும் முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் மோடி.  

"திருமண வீடாக இருந்தால்  மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்; சாவு வீடாக இருந்தால் பிணமாக இருக்க வேண்டும்" என தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் பேசும் வசனத்தை அப்படியே பின்பற்றுவதில் கைதேர்ந்தவர்  பிரதமர் மோடி என்பதை பல்வேறு தருணங்களில் நிரூபித்துள்ளார்.

அதன்படியே, பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ம் தேதியன்று இரவு 8.30 மணியளவில் தொலைக்காட்சியின் தோன்றி, மோடி வெளியிட்ட அறிவிப்பால் நாடு முழுவதும் அவரைப் பற்றிய பேச்சுதான். "நடவடிகை எடுத்தது என்னவோ, ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் பேர் வாங்கிச் செல்வதோ மோடியாக உள்ளார் " என்று விவரம் அறிந்தவர்கள் அங்கலாய்த்தனர்.

இதன் பின்னணில் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

செப்டம்பர் மாதம் 2-ம் தேதி பிரதமர் மோடி பேசுகையில், "கறுப்புப் பணத்தை ஒழிக்க செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பின்னர் மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைக்காக என்னை யாரும் குறை கூறக்கூடாது"என்று குறிப்பிட்டிருந்தார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் செப்டம்பர் 4-ம் தேதி அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய ரூபாய் நோட்டுகள், ரகுராம் ராஜன் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்டு வந்துள்ளது. 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் 6 மாதங்களாகவே மேற்கொண்டு வந்தபோதிலும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், இதனை மிகவும் ரகசியமாக வைத்திருந்துள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் கூட்டாகச் சேர்ந்து எடுத்த நடவடிக்கை, ஏதோ பிரதமர் மோடி தனிப்பட்ட முடிவெடுத்து அறிவித்தது போன்று, அனைத்து புகழும் அவரைப் போய்ச் சேர்ந்திருப்பது தான் ஆச்சர்யம்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தி விட்டதாக, தேர்தர் பிரசாரத்தின் போது பா.ஜ.க மார்தட்டிக் கொள்ளும். மத்திய நிதியமைச்சகமும், அதன் கீழ் வரும் ரிசர்வ் வங்கியும் எடுத்த நிதி தொடர்பான மிகப் பெரிய நடவடிக்கை இது என்பதை, சாமானிய மக்கள் யாரும்  பெரிய அளவில் பேசவில்லை. 

ஏதோ மோடியே தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கை என்பது போல, அவரைச் சுற்றியே செய்திகள் பரப்பப்படுகின்றன. இதுதான், தன்னை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருப்பதற்கான 'மோடி மந்திரம்' ஆக இருக்குமோ? என்ற கருத்தும் விவரம் அறிந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-சி.வெங்கட சேது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ