Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பில்லாமல் பயணமாகும் புது ரூபாய் நோட்டுகள்!

பிரதமர் மோடியின் கறுப்புப் பண ஒழிப்புக்கான நடவடிக்கையாக நாடு முழுதும் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்டன. அவற்றுக்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. மேலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அடுத்த 45 நாட்களுக்குள் மற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. நவம்பர் 9-ம் தேதியன்று நாடெங்கிலும் வங்கிகள் மூடப்பட்டன. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களும் 2 நாட்களுக்கு செயல்படாமல் நிறுத்தப்பட்டன. இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 11 முதல் ஏ.டி.எம் மையங்கள் செயல்படத் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கிகள் தங்களுடைய ஏ.டி.எம் மையங்களுக்குப் பணத்தை கொண்டு செல்லும் பணிகளை விரைந்து மேற்கொண்டன.

சாதாரண நாட்களில் வங்கிகளில் இருந்து ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது உடன் செக்யூரிட்டி அதிகாரிகளும் பாதுகாப்புக்காக செல்வது வழக்கம். நம்பகத்தன்மையுள்ள செக்யூரிட்டி நிறுவனங்கள் வழியாக வங்கிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான்  பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் வங்கி அதிகாரிகளுடன் எப்போதும் பயணிப்பது வழக்கம். ஆனால், இரண்டே நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களது ஏ.டி.எம்-களில் பணத்தை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால் கோடிக்கணக்கான பணம் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏ.டி.எம் களுக்கு பயணித்த அவலம் நிகழ்ந்துள்ளது. முக்கியமாக ஏ.டி.எம்-களும் வங்கிகளும் அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படியான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தின் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில்,”நேற்று காலையில் பாரிஸ் கார்னரில் ஒரு வாடிக்கையாளரை இறக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தேன். அப்போது பாரிஸ் கார்னரில் இருக்கும் அரசின் யூனியன் வங்கி மண்டல தலைமை அலுவலகத்திலிருந்து வாடிக்கையாளர் அழைப்பு வந்தது. 'துரைப்பாக்கத்துக்குச் செல்ல வேண்டும்' எனக் கூறினார்கள். ஒரு ஆணும் பெண்ணும் பெரிய பெட்டி ஒன்றுடன் காரில் ஏறினார்கள். காரில் பயணிக்கும்போது. பேச்சுவாக்கில் அவர்கள் வங்கி அதிகாரிகள் என்றும். வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்துக்கு பணத்தை வைக்க எடுத்துச் செல்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. பொதுவாக வங்கிகளுக்குப் பணம் எடுத்துச் செல்லும் அதிகாரிகள் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். நேற்று அப்படி யாருமே உடன் பயணிக்காதது அதிர்ச்சியாக இருந்தது. மேலும் பணத்தை எடுத்துச் செல்ல தனியார் வாகனங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணம் உள்ளது என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். அவ்வளவு பணத்தை பாதுகாப்பாக, 20 கி.மீ தூரம் எடுத்துச் செல்ல வேண்டுமே என்னும் பயமும் படபடப்பும் இருந்தது. எப்படியோ பத்திரமாக எடுத்துச் சென்று விட்டேன்” என பெருமூச்சுடன் தெரிவித்தார்.

வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாதாரணமாக பணம் எடுத்துச் செல்லும் வாகனத்துடன் மூன்று அல்லது நான்கு செக்யூரிட்டி அதிகாரிகளைப் பாதுகாப்புக்காக அனுப்புவோம். இதுபோன்று ஒரே சமயத்தில் பல ஏ.டி.எம்களுக்கு பணம் மாற்றம் செய்யப்படவேண்டிய இக்கட்டான சூழலில் பாதுகாப்பு அதிகாரிகளின் தேவை அதிகரிக்கும். அதற்கு ஏற்றாற்போல, காவல் அதிகாரிகள் அல்லது செக்யூரிட்டி அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய அறிவிப்பு, நவம்பர் 8-ம் தேதி மதியம் வாக்கில்தான் வங்கிகளுக்குத் தகவலாகக் கிடைத்தது, அதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு போதிய பாதுகாப்புடன் பணத்தை எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது" என்றார்.

வங்கிகளுக்கான பாதுகாப்பைத் தரும் சம்பந்தப்பட்ட செக்யுரிட்டி நிறுவனங்களை இது தொடர்பாகக் கேட்டறியத் தொடர்பு கொண்டோம். "நாங்கள் அப்படியான சேவைகளை நிறுத்திவிட்டோம். தற்போது அதுகுறித்து எதுவும் பதில் தரமுடியாது" என்று முரண்பட்ட தகவல்களைக் கூறி இணைப்பத் துண்டித்து விட்டனர்.

கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றாலும் குறுகிய காலத்தில், அதுவும் ஒரே நாளில் மேற்கொண்டது பல நடைமுறைச் சிக்கல்களையும் ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.

- ஐஷ்வர்யா 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ