Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீத்தேன் நிறுத்தம்: மத்திய அரசு முறைப்படி அறிவிக்க வேண்டும்

மீத்தேன்,ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் நிறுத்தியது தொடர்பாக மத்திய அரசு முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும்,அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து போராடியதற்குக் கிடைத்திருக்கும் வெற்றியே இந்த அறிவிப்பு. இடையறாது போராட்டங்களை நடத்திய அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து கடந்த ஆண்டு இந்தத் திட்டத்துக்கான அனுமதியை ரத்துசெய்த தமிழக அரசுக்கு இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் டெல்டா மாவட்டங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடுதான் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் கேஸ் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அவற்றை எதிர்த்துப் பல்வேறு விதமான போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடத்தின. அவற்றுக்குத் தமிழக அரசும் ஆதரவளித்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நலிவுற்று இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் உயிர் நீத்தார். இத்தகைய தியாகங்களுக்குப் பிறகு இப்போது மத்திய அரசு பணிந்துள்ளது.

இந்தத் திட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக மத்திய அமைச்சர் கூறியபோதிலும், மத்திய அரசின் சார்பில் முறையான அறிவிப்பு செய்யப்படாதவரை அது தொடர்வதாகவே பொருள்படும். எனவே, இந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்தும், இனி தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் இந்தத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்பது குறித்தும் மத்திய அரசு முறைப்படி அறிவிக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றுபட்ட போராட்டமே நமது உரிமைகளைக் காக்கும். எனவே இதே உத்வேகத்தோடு காவிரிப் பிரச்சனையிலும் போராட்டங்களை முன்னெடுப்போம். மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வைப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close