Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 ரூபாய் நோட்டு.. மறுத்த மருத்துவமனை.. மரணித்த குழந்தை!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட குழப்பங்களில், சாமானிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன் ஒரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேந்தவர் சர்மா. ஆசாரியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிரண், நிறை மாத கர்ப்பிணி. கடந்த ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து ஜீவன் ஜோதி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் கிரண் தொடந்து பரிசோதனை செய்துவந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 8-ம் தேதி அதாவது  பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளன்று, வழக்கமான பரிசோதனைக்கு கிரண் சென்றுள்ளார். கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் டிசம்பர் 7-ம் தேதி அன்று குழந்தை பிறக்கலாம் என்று உறுதியளித்துள்ளனர்.

ஆனால், செக்கப் முடிந்த மறுநாளே கிரணுக்கு வலி ஏற்பட, உறவினர்கள் உதவியுடன் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றுள்ளார். பிறந்த குழந்தை 1.6 கிலோ எடையில் இருந்ததுடன், கிரணுக்கு தொடந்து ரத்தப்போக்கும் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த உறவினர்கள் கிரண் வழக்கமாகப் பரிசோதனை செய்துகொள்ளும் ஜீவன் ஜோதி நர்சிங் ஹோமில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் குழந்தைக்கு முதல்கட்ட சிகிச்சையளித்த மருத்துவர்கள், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக 6,000 ரூபாய் கட்டணமாக கேட்டுள்ளனர்; அதுவும் 100 ரூபாய் தாளாக. கிரணின் கணவர் சர்மா தன்னிடன்  500 ரூபாய் தாள்கள் மட்டுமே இருப்பதாகக் கெஞ்சி கூறியும், ஏற்க மறுத்துவிட்டனர் மருத்துவர்கள். அன்று வங்கி மற்றும் ஏ.டி.எம்-களும் மூடப்பட்டிருந்ததால், 500 ரூபாய் தாள்களை 100 ரூபாய் தாள்களாக மாற்ற முடியாமல் சர்மாவின் குடும்பத்தினர் தவித்தனர்.

ரூபாய் நோட்டுகளை மாற்ற சர்மா கேட்ட அவகாசத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்காமல் கல் நெஞ்சத்துடன் திருப்பி அனுப்பினர்.மறுநாள் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சர்மாவும் கிரணும் வேறு ஒரு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் சென்றனர். ஆனால், மருத்துவரைப் பார்க்கும் முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

'' குழந்தைக்கு முதன்மை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அவர்களிடம் செல்லாமல் போன 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. செல்லாத நோட்டுகளை வாங்கிக்கொண்டு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்? அத்துடன் உயர் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்குப் போகச் சொன்னோம்'' என  ஜீவன் ஜோதி நர்சிங் ஹோம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என மத்திய அரசு  தெளிவான வழிமுறைகளை அளித்துள்ள போதிலும், இப்படியும் சில மருத்துவமனைகள் இரக்கமில்லாமல் செயல்பட்டு வருகின்றன!

-ஆ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ