Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி அழுதார்! இந்த தலைவர்கள் என்ன செய்தார்கள்?

மோடி

றுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் வகையில், இதுவரை நடைமுறையில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என இரவோடு இரவாக அறிவித்தது மத்திய அரசு. அதனை அடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வந்தபடி இருக்கின்றன. மற்றொரு பக்கம் நேற்று கோவாவில் விமானநிலையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்காக தன் குடும்பம் உறவு என அனைத்தையுமே தியாகம் செய்துவிட்டதாகக் கூறிக் கண் கலங்கப் பேசினார்.

ஆனால் தலைவர்கள் மேடைப்பேச்சுகளில் கண்கள் கலங்குவதும், உணர்ச்சிவசப்படுவதும் இன்று நேற்று நடப்பதல்ல. எந்த கட்சியின் தலைவர்களும் ஏதோ ஒரு சூழலில் தங்களை அறியாமல் உணர்ச்சிவசப்படுவதுண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என 1972ல் தனிக்கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் அதர்மம் கண்டு தான் வடித்த கண்ணீரின் மீது உருவாக்கப்பட்டதுதான் அ.தி,மு.க எனப் பேசினார். 1984ல் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர்.1985ல் தமிழகம் திரும்புகையில் மக்களைப்பார்த்து கண்ணீர் வடித்தார் என்று அப்போதைய அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எம்.ஜி.ஆர் மட்டுமில்லை அவருக்கு அடுத்து கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா மேடைப்பேச்சுகளில் பொதுவாக அழுதது இல்லை என கட்சி வட்டாரங்கள் கூறுவது உண்டு. ஆனால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்களிலும் அவர் உணர்ச்சிவசப்பட்டுப் உரக்கப் பேசிய தருணங்கள் நிறைய உள்ளன. 2015ல் சென்னை வெள்ளத்தின்போது அவர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஒலிப்பதிவு போன்றவையும் அதில் அடக்கம்.

தங்குதடையற்ற சரளமான தமிழ் பேச்சுக்கு பெயர்போன கருணாநிதி தன் இளமை பருவத்தில் திராவிடர் கழகத்தில் இணைந்தது தொடங்கி பல மேடைகளில் மக்களை உணர்வுபூர்வமாக அணுகும் வகையிலான பல பேச்சுகளை நிகழ்த்தியிருக்கிறார். தங்கள் பேச்சாலேயே ஆட்சியைப் பிடித்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்கிற சொல்லாடல் கூட உண்டு. தமிழும் தமிழ் சார்ந்தும் ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும் எப்போது கருணாநிதி பேசினாலும் அதில் உணர்ச்சி ஓரிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த வரிசையில் அறிஞர் அண்ணாவைப் பற்றி பேசும் எந்த நிகழ்விலும் அவர் உணர்ச்சிவசப்பட்டுவிடுவதுண்டு. சில நேரங்களில் அழவும் செய்திருக்கிறார்.

2008ல் தலைநகர் டெல்லியில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அதில் தொடர்புடைய தீவிரவாதிகளின் மீது டெல்லி ஜாமியா நகர், பாட்லா ஹவுஸ் என்னும் இடத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் என இடையே எழுந்த சர்ச்சையை அடுத்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸின் சல்மான் குர்ஷித் அந்த துப்பாக்கி சூட்டின் காட்சிகளைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் வடித்ததாகத் தெரிவித்தார். இதற்கிடையே சுட்டுக்கொள்ளப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்பது தெரிந்ததை அடுத்து சோனியாவுக்கு எதிராகவும் சல்மான் குர்ஷித்துக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுந்தன. இது மட்டுமல்ல ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்ததற்கு அழுதது, நிர்பயாவுக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தொலைக்காட்சிக்கு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தது, பாராளுமன்ற தேர்தல் பிரசார சமயங்களில் மோடி சோனியா காந்தியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதை அடுத்து திருவனந்தபுரம் பிரசாரக் கூட்டத்தில் அவர் அழுதது என இவர் கண்ணீர் பட்டியல் ஏராளம்.

-ஐஷ்வர்யா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close