Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரிசையிலிருந்து முதியோர்களைக் காக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

ரிசர்வ் வங்கி

றுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ம் தேதி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார்.இந்த நிலையில், அன்றாடத்  தேவைகளுக்காகப் பணம் எடுப்பவர்கள் மிகவும் கடும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.  கடந்த 5 நாட்களாக பல ஏ.டி.எம்-கள் மூடியே கிடக்கின்றன. மக்களுக்குப் பணம் வழங்குவதிலும் வங்கிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி -யில் இருந்து வரவேண்டிய பணமும் முழுமையாக வந்து சேரவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டை முன்பே வெளியிட்டிருந்தனர். ‘‘இதற்குப் பதில் 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தால் ஓரளவு சிரமத்தைக் குறைத்திருக்க முடியும். இதனால் சாமானிய மக்கள் சில்லரைக்காக அலைய வேண்டி இருந்திருக்காது’’ என்கின்றனர் பொதுமக்கள்.

வங்கிகள் நிலை என்ன ?

 இந்தியா முழுவதும் இரண்டு லட்சத்து  2 ஆயிரம் ஏ.டி.எம்- கள்  உள்ளன.  இந்தியா முழுவதும் நகராட்சி ஊரகப்  பகுதிகளில் மட்டும்  சுமார் 80 ஆயிரம் ஏ.டி. எம்-கள் உள்ளன. தமிழகத்தில் சுமார்  6 ஆயிரம் ஏ.டி.எம்-கள் உள்ளன.

இந்த ஏ.டி.எம்-களின் இயல்பு நிலை திரும்ப இன்னும் 15  நாட்களுக்கு  மேல்  ஆகும். அதாவது  புதியதாக வரவுள்ள நோட்டுகளுக்கு ஏற்ற வகையில் ஏ.டி.எம் களின்  தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பணி உள்ளது. அந்தப் பணி முடிந்தால் மட்டுமே  இயல்பு நிலைக்குக்  கொண்டு வர முடியும் .எனவே பொதுமக்களுக்கு இயல்பான சேவையை வழங்க  இன்னும் சில  நாட்கள்  ஆகும்  என்று  வங்கி ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது. மேலும்  மத்திய அரசு வங்கி ஊழியர்களின் ஆலோசனையின்றி  இந்த அறிவிப்பை வெளியிட்டது  தவறு  என்று   கூறுகின்றது . 

வங்கியில் தற்போது  500 ரூபாயும் புதியதாக வந்துள்ள 2000 ரூபாய்  மட்டுமே  உள்ளன. 50 ரூபாய் ,20 ரூபாய்  10 ரூபாய்  கையிருப்பு மிக குறைவு . புதியதாக  வரவேண்டிய  500 ரூபாயும் 1000 ரூபாயும் வந்தால்  மட்டுமே நிலைமை  ஓரளவு  சரிபடுத்த முடியும் என்று  கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து  500 மற்றும் 1000 ரூபாய் வருவதிலும் தாமதம்  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது .

பொதுமக்களுக்கான  பாதிப்புகள்  என்ன ?

 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாயை மாற்றவும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் ஒவ்வொரு வங்கியிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  பொதுமக்கள் நிற்கிறார்கள்.மேலும்  ஏ. டி .எம்களிலும் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். பல ஏ. டி எம்களில் பணம் இல்லாமல்  மூடப்பட்ட நிலையில் உள்ளது.  நீண்ட நேரம் வரிசையில்  நிற்பவர்கள் பெரும்பாலும் முதியோர்கள்  தான் . சில இடங்களில்  நின்ற இடத்திலேயே மயங்கியும் விழுந்துள்ளனர். அதில் உச்சகட்டமாக  கேரளாவில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 

இப்படி பல்வேறு நிலைகளில் சாதாரண  நடுத்தர  மக்கள்  பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பொதுமக்களின்  இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. இதனை சமாளிக்க மத்திய அரசு ஆலோசனை  நடத்தியுள்ளது. இந்த நெருக்கடி சூழலை  சமாளிப்பதற்கான  நடவடிக்கைள்  குறித்து  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி  நள்ளிரவில் ஆலோசனையில் ஈடுபட்டதாக  தகவல் வெளியானது. இந்த  நிலைமை சீரடைய  இன்னும் 50 நாட்கள் ஆகும் என்றும்  எனவே  பொதுமக்கள் பொறுமை காக்குமாறு மத்திய  அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக  ரிசர்வ் வங்கியும்  அனைத்து வங்கிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.  

பணம் வழங்குவதில் மாற்றம் - ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் முதன்மை மேலாளர் விஜயகுமார், சுற்றறிக்கை ஒன்றை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில், சில வழிமுறைகளையும் அறிவுறுத்தியுள்ளதுடன் அதை உடனே நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அவற்றின் விவரம்:

* ஒருநாளைக்கு வங்கிகள் சார்பில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்ட மாற்றத்தில் இருந்த 4,000 ரூபாய் தொகை, இன்றுமுதல் 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* ஏ.டி.எம்-களில் ஒருநாளைக்கு, ஒரு கார்டுக்கு 2,000 ரூபாய் மட்டும் எடுக்கப்பட்ட விதிமுறையில், இன்றுமுதல் 2,500 ரூபாயாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

* வங்கிக் கணக்கில் இருந்து வாரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என்ற இருந்த விதிமுறையில், அது இன்றுமுதல் 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒருநாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். 

* அரசு ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய வாழ்நாள்  சான்றிதழை வரும் ஜனவரி 15, 2017 வரை வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

* முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தும்படி அனைத்து வங்கிகளுக்கும்ரிசர்வ் வங்கிஉத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் பின்பற்றுமானால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வெகுவாக சிரமங்கள்  குறையும். ஏற்கனவே ரிசர்வ்வங்கி கொடுத்த உத்தரவுகளை வங்கிகள் முழுமையாக பின்பற்றுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. சில வங்கிகளில் தெரிந்தவர்களுக்கு தேவையான பணத்தை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. பாமரனுக்கு ஒரு விதியும்  பணக்காரனுக்கு ஒரு விதியும் பின்பற்றாமல் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவையாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக  உள்ளது.

 

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்