Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’எவ்ளோ தங்கம் வித்தீங்க? கணக்கை கொண்டு வாங்க!’ வருமானவரித் துறை அதிரடி

கடந்த நவம்பர் 8-ம் தேதி தொடங்கி, இந்த நொடி வரை அதிரடி அறிவிப்புக் களமாக மாறி விட்டது இந்தியா. ஏற்கெனவே மக்கள் பணத்தை மாற்றுவது தொடர்பாக தினம்தோறும் புதிது புதிதாக பல அறிவிப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன. இதில் இவ்வளவு தொகைக்கு மேல் வந்தால் வரி என்று வருமானவரித் துறையின் அறிவிப்புகளும் அடக்கம். நவம்பர் 8-ம் தேதி செய்த அறிவிப்புகள் இன்று இல்லை. இன்று செய்யப்படும் அறிவிப்புகள் நாளை இருக்குமா என்று தெரியவில்லை. வங்கியில் எவ்வளவு எடுக்கலாம்...எவ்வளவு போடலாம்.. என்பதை நினைவில் வைத்துக் கொள்வதே பெரிய சவாலான காரியமாக இருக்கிறது.

இப்போது மக்கள் பணம் எடுப்பதற்கு கையில் மை வேறு வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. சாமானிய மக்கள் ஒரு 5,000 ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், தங்களுடைய மாத சம்பளத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், வருமானவரித் துறை, பணக்காரர்களை நோக்கி, ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாததைத் தொடர்ந்து கறுப்புப் பணம் வெள்ளையாக மாறும் இடங்களை எல்லாம் சற்றே விளக்கு எண்ணெய் ஊற்றி கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிறப்பு நிதி விசாரணை அமைப்புகள். இந்த அதிரடி விழிப்பு உணர்வைத் தொடர்ந்து, தற்போது வருமான வரித்துறை ஒரு இடியை நிறுவனங்கள் மீது இறக்கி இருக்கிறது.

"1 ஏப்ரல் 2016 - நவம்பர் 08, 2016 வரை, நிறுவனத்தின் கையில் இருக்கும் பணத்தை உறுதி செய்யும் கணக்கு வழக்கு புத்தகங்களை, உடனடியாக தபால் முலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, ஃபேக்ஸ் மூலமாகவோ அனுப்பி வைக்கவும் " என்று வலியுறுத்தி இருக்கிறது. இது அறிவிப்பாக தற்போதைக்கு நாடு முழுவதும் வரவில்லை என்றாலும், பல நிறுவனங்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து கணக்கு கேட்கப்பட்டிருக்கிறது.

வருமானவரித் துறை 2

அதேபோல் இந்தியா முழுவதும் பரவலாக 600-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோக வியாபாரிகளின், நிறுவனத்தில் நவம்பர் 7 முதல் நவம்பர் 10 வரையான விற்பனை விவரங்கள் மற்றும் ரொக்கக் கையிருப்பு, கடைகளின் சிசிடிவி ஃபூட்டேஜ்கள் போன்றவைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறது வருமான வரித்துறை. வருமானவரித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இதுகுறித்து கேட்டபோது, பெயர் சொல்ல விரும்பாத வருமானவரித் துறை அதிகாரி, "வருமானவரித் துறை எப்போது வேண்டுமானாலும், வரி செலுத்தும் நிறுவனத்திடம், கணக்கு வழக்குகளை திடீரென சமர்ப்பிக்கச் சொல்லி கேட்கலாம். அப்படிப்பட்ட அதிரடி விசாரணையை தான், இப்போது நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது" என்று முடித்தார்.

இப்படிப்பட்ட அறிவிப்புகள் சத்தமில்லாமல் நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு வந்த பின், நிறுவனங்களின் ஆடிட்டர்களின் வீட்டுக் கதவுகளை சத்தமாக தட்டத் தொடங்கி இருக்கிறார்கள் நிறுவன முதலாளிகள். ஆடிட்டர்களும் தங்களால் இயன்றவற்றை செய்து நிறுவனங்களுக்கு அவ்வப்போது நிம்மதி கொடுத்தாலும், வருமானவரித் துறை, அடுத்து எந்த மாதிரி அதிரடிகளில் இறங்கும் என்று தெரியவில்லை. மக்கள் கையில் பணம் இல்லை, ஆகையால் பிசினஸ் டல்லாகவே இருக்கிறது, கையில் இருக்கும் கறுப்புப் பணத்தை மாற்ற வேண்டும், அதற்கும் கொடூரமாக கிடுக்குபிடி போடும் வருமானவரித் துறை, என்று திரும்பும் அனைத்து திசைகளிலும் பிரச்னை என்பதால், ஒரு வித பீதியிலேயே தவிக்கிறது கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பிசினஸ் சமூகம்.

- மு.சா.கெளதமன்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ