Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைதி... போராளி... நீதிபதி! - நீதிபதி கிருஷ்ணய்யர் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

ந்த உலகில் இயற்கையாய் உருவாகும் எதுவும் அதன் போக்கிலேயே மண்ணோடு மக்கிப்போவதுதான் நியாயம், மனிதர்கள் உட்பட. இது சாதாரணமாகப் புலப்படும் ஒரு செயல்பாடுதான். ஆனால், உலகில் மனிதர்களின் உயிரை சகமனிதர்களே பறிக்கும் அவலநிலையிலும், தத்தமது நாடுகளின் சட்டங்களிலேயே அதற்கான இடம் உண்டு என்கிற நிலையிலும் மரணம்கூட மனிதனுக்கு இயல்பாய் ஏற்பட்டுவிடுவதில்லை. இயற்கையையும் இயல்பையும் தவிர்த்துவிட்டு மனித வாழ்வியல் மேலோங்கிவிடாது என்பதை உறுதிபடுத்தத்தான் இங்கு அத்தனை போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இயற்கைக்கு மாறாக மனிதனின் மரணத்தை நிர்ணயிக்க நாடுகளின் சட்டமே இடமளிப்பதைத் தன் இறுதிநாள் வரை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்தான் நீதிபதி கிருஷ்ணய்யர்.

கிருஷ்ணய்யரின் பிறப்பே நீதிமன்றம் சார்ந்து இயங்கும் குடும்பத்தில்தான் அமைந்தது. 1915-ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். தந்தை வி.வி.ராமய்யர், மூத்த வழக்கறிஞர். அதனால் கிருஷ்ணய்யருக்கு, தான் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படவில்லை. தலைச்சேரி பேஷன் மிஷன் பள்ளி, பாலக்காட்டின் விக்டோரியா கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு. இறுதியாக, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை நிறைவுசெய்தார். தன் தந்தையிடமே உதவியாளராகச் சேர்ந்து, 1937 முதல் அவருடனே இணைந்து பல வழக்காடு மன்றங்களில் வாதிடத் தொடங்கினார் கிருஷ்ணய்யர்.

கைதி அமைச்சரான கதை!

நாட்டில் தொழிலாளர்களுக்கான உழைப்பும் அது சார்ந்த ஊதியமும் தொடர் சிக்கலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவந்த காலகட்டத்தில் அது தொடர்புடைய கம்யூனிஸ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தொடந்து தொழிலாளிகளுக்காகவே குரல் கொடுத்து வந்தார் கிருஷ்ணய்யர். இத்தனைக்கும் நாடு சுதந்திரம் பெற்றிருந்த சமயங்களில் கம்யூனிஸக் கட்சிகள் இங்கே தடை செய்யப்பட்டிருந்தன. 1948-ல் கம்யூனிஸவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டார். கண்ணனூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சிறைக்காவலில் நேரும் அவலங்களை கம்யூனிஸம் மற்றும் நீதித்துறை செயற்பாட்டாளர் என்னும் இரு கோணத்திலிருந்தும் அவரால் கண்டறிந்து உணர முடிந்தது. 1952-க்குப் பிறகு, பொதுவுடைமை இயக்கம் மீதான தடை விலக்கப்பட்டதை அடுத்து சுயேட்சையாக கேரள மாநிலம் கூத்துப்பரம்பா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அங்கே கம்யூனிஸ ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள், இவரை வெற்றிபெறச் செய்ய... மெட்ராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவையிலும் ராயலசீமா மற்றும் மலபார் தொழிலாளர்கள் நலனுக்காகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசினார். அரசு அறிவிக்கும் சலுகைகளை எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலகட்டமிது. ஆனால், ‘‘அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படுவது அவர்களது நேர்மையான செயல்பாட்டை அரசே கேள்விக்குறியாக்குவது போன்றது’’ என்று அன்றைய ராஜாஜி அமைச்சரவைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

சட்டமும்... அரசியலும்!

பிறகு மொழிவாரி மாநிலத்தின் அடிப்படையில் கேரளா பிரிந்ததை அடுத்து அந்த மாநிலத்தில்1957 முதல் 1959 வரை அமைக்கப்பட்ட ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ அமைச்சரவையில் சட்டம், நீதித்துறை, சிறைத் துறை, மின்சாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஒரு சிறைக்கைதியே ஒட்டுமொத்தமாக அதன் அமைச்சகத்துக்குத் தலைமை ஏற்பது நாட்டின் சட்டத்தின் மீதே வைக்கப்பட்ட நகைமுரண். அப்போது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்க இரு மாநில அமைச்சர்களின் முன்னெடுப்பில் தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க பரம்பிக்குளம் நீர்த்தேக்கத் திட்டம் கையெழுத்தானது.

 

சட்ட அமைச்சர் என்னும் நிலைப்பாட்டில் சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்புத் தரும் வகையிலும், பெண்கள் பாதுகாப்புக்காக முதன்முதலாக வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தையும் கேரளாவில் நிறைவேற்றினார். தற்போது அரசு செயல்படுத்திவரும் 100 நாள் வேலை திட்டம்கூட 50 ரூபாய் சம்பள வேலைத்திட்டம் எனக் கேரளாவில் அவர் முன்மொழிந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான். ஆனால், இதே கம்யூனிஸ அரசு 1959-ல் பிரதமர் நேருவால் கலைக்கப்பட்டது. 1960-ல் மீண்டும் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார் கிருஷ்ணய்யர். ஆனால், தேர்தலில் நடந்த குளறுபடிகள் மற்றும் கள்ள ஓட்டு விவகாரங்கள் காரணமாக தோல்வியைச் சந்தித்தார். காங்கிரஸின் முறைகேடான தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, தானே வாதாடினார். ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், கிருஷ்ணய்யர்தான் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அவரது வெற்றி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. கம்யூனிஸ்ட்களிடையே குழப்பம் ஏற்பட அவர்கள் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் எனப் பிரிய... அதுவே, அடுத்துவந்த 1968 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடையவும் காரணமாக இருந்தது. அதன்பிறகு, முழு நேரமாக நீதித்துறை சார்ந்த வேலைகளிலேயே செயல்படத் தொடங்கினார். 1968-ல் கேரள அரசின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பிறகு, 1971-ல் மத்திய சட்டக்கமிஷன் உறுப்பினர் மற்றும் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி என சட்டம் சார்ந்த இவரது பயணம் படிப்படியாக உயர்ந்தது.

இந்திராவின் எமர்ஜென்சி பிரகடனம்!

1975-ல் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, ‘ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது’ என தொடரப்பட்ட வழக்கில் விசாரித்துத் தீர்ப்பளித்த கிருஷ்ணய்யர், ‘‘இந்திரா பிரதமராகத் தொடரலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவரது உறுப்பினர் பதவி செல்லாது’’ எனத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, அதே வருடம் ஜூன் மாதம் இந்திரா தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் இந்திரா. இந்தியாவின் கறுப்பு வரலாற்றின் பின்னணியில், இந்திராவுக்கு எதிரான இவரது தீர்ப்புப் பிரதானமாக இருந்தது குறிப்பிடவேண்டியது. மேலும் தூக்குத்தண்டனைக்கு எதிராக முதன்முதலில் குரலெழுப்பிய நீதிபதி கிருஷ்ணய்யராகத்தான் இருக்கமுடியும். தன் இறுதிவாழ்நாள் வரை அதற்கு எதிராகக் குரல்கொடுத்து தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்காக வராமல்... தனிமனிதக் கடிதங்களாக வரும் பிரச்னைகளையும் வழக்காக ஏற்று விசாரிப்பது இவரது காலகட்டத்தில்தான் தொடங்கியது. நாடு வளர்ந்து எழ ஒவ்வொரு தனிமனிதனும் அரசியலும் சட்டமும் அறிந்திருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். அதன்படி இலவச சட்ட ஆலோசனை மன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தின் வழியாகத் தொடங்கினார். 1980-ல் இவரது பணிக்காலம் முடியும்வரை சட்டமும் நீதிமன்றமும் இவரால் செதுக்கப்பட்டது என்பது நிச்சயம் மிகைச்சொல்லாக இருக்காது.

ஓய்வுக்குப் பிறகும் சட்டக்களம்!

சட்டம் படித்தவனுக்கு நீதிமன்றம் மட்டுமே செயற்களம் இல்லை என்பதற்கு கிருஷ்ணய்யரை உதாரணமாகச் சொல்லலாம். ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து சாமன்ய மக்களுக்காக, தான் படித்த சட்டத்தின் மூலம் உதவி வந்தார். அதற்குச் சமூகம், ‘மனிதநேயச் செயற்பாட்டாளர்’ என்னும் அடையாளத்தை அவருக்கு அளித்தது. கர்நாடக எல்லையில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த அதிரடிப்படை போலீஸார் பழங்குடியின மக்களிடம் அத்துமீறுவதாக எழுந்த புகாரை அடுத்து உச்ச நீதிமன்றத்துக்கு மனித உரிமை அமைப்புகள் சார்பாக கடிதம் ஒன்றை எழுதினார் கிருஷ்ணய்யர். அதன் அடிப்படையிலேயே சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டு அந்தப் பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தூக்குத்தண்டனைக்கு எதிரான ‘மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்க’த்தை உருவாக்கி அதன் வழியாகப் பல தூக்குத்தண்டனை வழக்குகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட இவரது செயற்பாடும் பெரும் காரணமாக இருந்தது. 15 நவம்பர் 2015-ல் நாடே இவரது பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடியது. துரதிர்ஷ்டவசமாக அதற்கு அடுத்த 10 நாட்களில் உடலுறுப்புக் கோளாறு காரணமாக மறைந்தார். மரண தண்டனை சட்டத்துக்கு எதிராக இன்றும் குரல்கொடுத்து வரும் பலரின் சிந்தனைக்கு வித்திட்டவர் கிருஷ்ணய்யர்தான்.

அவர் மறைவுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், ‘‘கிருஷ்ணய்யர் பேசினால் தேசம் செவிமடுக்கும்” என்றார். உண்மை அதுதான். மனிதனே மற்றொரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அவலநிலைக்கு எதிராக யாரொருவன் குரல் கொடுக்கும்வரை அதற்கு சட்டமே இடமளிப்பது தொடர்ந்து எதிர்க்கப்படும்வரை, கிருஷ்ணய்யர் பேசியதும் தொடரும்... தேசமும் மனிதத்துக்குச் செவிமடுக்கும். 

- ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close