Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தவித்த மக்களுக்கு உதவிய தேவாலய உண்டியல் பணம்!

உண்டியகேரளாவில் மக்களிடம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் உண்டியலில் இருந்து தேவையான பணத்தை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என தேவாலய நிர்வாகம் உண்டியலைத் திறந்து வைத்துள்ளது. கொச்சி நகரில் தூய மார்ட்டின் தேவாலயம் உள்ளது. ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் தேவாலயத்தில் உண்டியலில் பணத்தை போடுவார்கள். இது வழக்கமானதுதான். மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் பணத்தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ தேவாலயம் முன் வந்தது.

 ‘தேவாலய நிர்வாகம் மக்களுக்காக உண்டியலைத் திறந்தது. மத வேறுபாடின்றி யாரும் தங்களின் தேவைக்கு ஏற்ப உண்டியலில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. பணத்தட்டுப்பாடு நீங்கிய பிறகு திருப்பி அளிக்குமாரும் கேட்டுக் கொண்டுள்ளது. யாரும் எவ்வளவு பணம் எடுக்கிறோம் என்று தெரிவிக்கவும் தேவையில்லை என்றும் தேவாலய நிர்வாகம்  வேண்டியுள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்துக்கு வந்திருந்த மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்துச் சென்றனர். 

தேவாலயத்தின் போதகர் ஜிம்மி பூச்சாகாட் கூறுகையில், ''இது ஒரு சிறிய ஆலயம்தான். பலரும் மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமலும் அன்றாடத் தேவைகளுக்குக் கூட பணமில்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். சூழ்நிலையை உணர்ந்து கொண்ட நாங்கள் இதனை செய்துள்ளோம். நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் மக்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப ஒப்படைப்பார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது. பிரதமர் 50 நாட்களில் நிலைமை சீராகும் எனத் தெரிவித்திருக்கிறார். இது மக்களின் பணம்தான். அதனை அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறோம்'' என்றார்.

சுமார் 200 குடும்பத்தினர் உண்டியல் பணத்தை எடுத்து பயன்படுத்தியுள்ளனர். ஆலயத்தின் உண்டியல் மட்டுமல்ல பெரும்பாலான வீடுகளில் சிறுவர், சிறுமிகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணமும் கூட உடைக்கப்பட்டுவிட்டது. 

ரயில் நிலையத்தில் சமபந்தி

இதற்கிடையே மங்களூரு ரயில் நிலையத்தில் பணம் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் பயணிகள் ஏராளமானோர் தவித்துக் கொண்டிருந்தனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தும் அவர்களால் மாற்ற முடியவில்லை. இதனைப் பார்த்த பல்வேந்தர்சிங் என்பவர் வேதனையடைந்தார். உடனடியாக அண்டா அண்டாவாக உணவு தயாரிக்கப்பட்டு ரயில் நிலையத்துக்குத் தன்னார்வத் தொண்டர்களுடன் எடுத்துச் சென்றார்.

ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் பேருக்குமேல் உணவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தனர்.பசியால் வாடிக் கொண்டிருந்த அத்தனைப் பேருக்கும் விருந்தளிக்கப்பட்டது. பயணிகள் அங்கேயே உண்டது போக பார்சலும் கட்டிக் கொண்டனர். 
 

- எம். குமரேசன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ