Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய 2000 ரூபாய் நோட்டும், சாமான்யனின் சில கேள்விகளும்

2000 ரூபாய்

நான் பொருளாதார வல்லுநர் இல்லை; அதனைப்பற்றிய அடிப்படை அறிவு கூட இதை எழுதும் எனக்குக் கிடையாது. வயிற்றுக்காகவும் வாழ்வுக்காகவும் உழைப்பில் வரும் பணத்தை சேமிக்கும் ஒரு சாதாரண மானுடம். பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொண்டதால், அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் பயணப்பட சிக்கலானதும், பத்து ரூபாய் தேநீர் குடிக்க கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தும் அதை உபயோகப்படுத்த முடியாமல் போனதும், ஒரு வேளை மதிய உணவு பிரச்னையானதும் தவிர்த்து தனிமனிதனாக எனக்குப் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆம், கோடிக்கணக்கானோர் என்ன செய்வது எனத் தெரியாமல், தங்கள் பணத்தை மாற்ற வங்கி வாசலில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு கால் கடுக்க நிற்பதுடன் ஒப்பிடுகையில், இங்கு எனக்கு ஏற்படுவதெல்லாம் சிக்கல்களே இல்லை.

ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் தேசத்தின் எல்லையில் காவல் காக்கும்போது நீங்கள் இந்த சிறு தியாகம் கூட செய்ய முடியாதா என நாட்டு மக்களைப் பார்த்து சில அறிவுப்பூர்வ கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. மன்னிக்கவும், இந்த தேசத்தைப் பாதுகாப்பவர்களும் சாமான்யர்கள்தான். அவர்களின் குடும்பமும் பணத்தை மாற்ற வங்கியின் அதே வரிசையில்தான் நிற்க வேண்டும்; நின்றுகொண்டிருக்கிறது. என் கேள்விகள் எல்லாம் அந்த சாமான்யனின் சார்பு நிலையிலிருந்து, அடிப்படைப் புரிதலின் தேவையினால் எழுப்பும் கேள்விகளே.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு ரகசியம் காக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆறு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டதை படிப்படியாக அமல்படுத்தாமல் திடீரென நவம்பர் இரவொன்றில் தொலைக்காட்சி வழியாக பிரதமர் அறிவிக்கக் காரணம் என்ன? 'பொதுமக்களை பாதிக்கும் செயல் இது' என்பதைத் திட்டமிட்ட அதே ஆறு மாத காலத்துக்கு முன்பே அரசு அறிந்திருக்கவில்லையா?

500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு புதிய ஐநூறு ரூபாய் வெளியிடப்பட்டிருப்பது இருக்கட்டும். 1000 ரூபாய்க்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது எதற்காக? நாட்டின் பண இருப்பு குறைந்து வருவதாலா? அப்படியென்றால் அரசின் திட்டம் கறுப்புப் பணத்தை 'ஒழிக்கவா?' அல்லது அதனை 'ஒளித்ததால்' ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை தடுக்கவா? 1000 ரூபாயை இப்போதே வெளியிடாமல், மூன்று மாதங்கள் கழித்து சுழற்சியில் விட இருப்பதற்கான காரணம் என்ன? பண வீக்கம் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது திட்டமிடப்பட்டதாக ஆளும்கட்சி வட்டாரங்களே தெரிவிக்கையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஊர்ஜித் படேலின் கையெழுத்து எப்படி வந்தது?

பொதுமக்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புறம் மற்றும் சிறுநகரப்பகுதிகளில்தான் வசிக்கிறார்கள். அவர்களில் 75 சதவிகிதம் பேர் நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் சம்பாதிக்கும் சாதாரண மக்கள். பெரும்பாலானோர் தினக் கூலிகள். மாதம் ஒன்றுக்கு இவர்களது அடிப்படை வருமானம் 5,000 ரூபாய். மீதம் இருப்பவர்கள்தான் நகரத்தில் வசிக்கிறார்கள். அவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு நாள் ஒன்றுக்கான சம்பளம் 500-ல் இருந்து 700 ரூபாய் வரை. ஆக 2000 ரூபாய் நோட்டைப்  பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பவர்களின் ஒருநாள் வருமானம் 1000 ரூபாய்க்கும் கீழாக இருக்கும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் யாருக்காக?

உண்மையிலேயே கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்றால், இதுவரை ஒரு பணமுதலைக் கூட இந்தப்பிடியில் மாட்டிக்கொண்டதாக தகவல் எதுவும் வெளியாகாதது ஏன்?

அரசு மருத்துவமனைகளில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார் மோடி. ஏற்கெனவே இலவச சிகிச்சை அளிக்கும் இடத்தில் எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்? பணம் கொடுத்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தனியார் மருத்துவமனைகளிலும் 500 மற்றும் 1000 ரூபாய்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சூழலில் அவர்கள் இல்லை. கடன் அட்டைகள் வைத்திருப்பவன் இந்தச் சிக்கலை சமாளித்துவிடுவான்; அரசின் ரூபாய் நோட்டையே நம்பியிருப்பவன் தனியார் மருத்துவமனை சென்றால், உயிர் பிழைப்பது எப்படி?

'தூய்மை இந்தியா திட்டம்' தனிப்பட்ட முறையில், தற்போது மத்தியில் இருக்கும் அரசு கொண்டுவந்த திட்டம். இந்த நிலையில், தேசத்துக்கான ரூபாய் நோட்டுகளில், அதற்கான விளம்பரம் தேவையா? அதற்கு சட்டத்தில் அனுமதி உண்டா?

'இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலைதான் நீடிக்கும்' என்கிறார்கள். ஆனால், சுழற்சி முறையில் அன்றாடங்காய்ச்சிகளிடம் இருக்கும் 100-ரூபாயும் 50-ரூபாயும் எப்போது அவர்கள் வசம் போகும் என்பது எந்தத் தொலைகாட்சியிலும் விவாதிக்கப்படவில்லை; அரசும் பதில் சொல்லவில்லை.

ஜனநாயக நாட்டில், மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் சூழலில், மக்கள் அனைவருக்கும் பொதுவானப் பொருளாதாரம் சார்ந்த ஒரு பெரும் செயல்பாட்டில் மக்களது கருத்து எதுவுமே கேட்கப்படாமல் முடிவெடுக்கப்பட்டது எதற்காக?

சாயம் போகும் அளவுக்கும், வண்ணப்பிரதி எடுத்து எளிதாக ஏமாற்றும் வகையிலும் இருக்கும் இந்தப் புதிய ரூபாய் நோட்டை எப்படி பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட ரூபாய் என்று சொல்லமுடியும்? இது அரசுக்கு எதிரான செயல் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சாமான்யனின் அடிப்படைப் பொருளாதாரப் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கவில்லையா?

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இதற்காக, ஏற்கெனவே 1978-ல் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது நாடே செயலிழந்து போய், எதற்காக அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அந்த குறிக்கோள் நிறைவேறாது பொய்த்துப் போனது. இன்னும் சொல்லப்போனால், அதன் பின்னர்தான் கறுப்புப் பண சுழற்சி அதிகரித்தது. தெரிந்தே மீண்டும்  அதே போன்றதொரு நடவடிக்கையை எதற்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்? 

மக்களால் நிகழ்த்தப்படுவதுதான் புரட்சி; மக்கள் மீதே நிகழ்த்தப்படுவது எப்படி புரட்சி ஆகும்? 

இப்படிக்கு,

ஒரு சாமான்யன்

 

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close