Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘மை வைப்பது தான் எங்கள் வேலையா...?’ - வங்கி ஊழியர்கள் ஆவேசம்

வங்கி ஊழியர்கள்

புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கும் விஷயத்தில், மத்திய அரசு தெரிவித்த நாட்களைத் தாண்டியும்  சாதாரண மக்கள்  மிகுந்த சிரமங்களை  அனுபவித்து வருகிறார்கள். நாட்டில் உள்ள  பெரும்பாலான  ஏ.டி.எம்-கள் இயங்கவில்லை. வங்கிகளிலும் பணம் இல்லை என்ற நிலையில், வங்கிச் சேவை  முடங்கியுள்ளது. 'ரிசர்வ் வங்கியில் இருந்து வரவேண்டிய  பணம்  முழுமையாக வந்து சேரவில்லை' என்று  வங்கி ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ள புதிய 2,000 ரூபாய்க்கு சில்லரை கிடைக்காமல் பொதுமக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு வாரமாகியும் வங்கிகளிலும் ஏ.டி.எம் வாசல்களிலும் நிற்கும் மக்கள் கூட்டம்  குறைந்தபாடில்லை. மத்திய அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் .

'நான் ஏன்  பட்டினி  கிடக்க வேண்டும்!'

பணம்  மாற்றுவதற்காக வங்கியில் காத்திருந்த இல்லத்தரசி வனஜாவிடம் பேசியபோது, "கடந்த  ஒரு வாரமாக கையில் வைத்துள்ள 4,000 ரூபாய்  பணத்தை மாற்ற வங்கிக்கு தினமும் வந்து  செல்கிறேன். கூட்டம் அதிகமாக இருப்பதால்,  பணம் எடுக்க முடியாமல் சென்றுவிடுகிறேன் . சாதமும், தயிரையும் வைத்தே கடந்த மூன்று  நாட்களாக சாப்பிட்டுப் பொழுதை ஓட்டி வருகிறோம். யாரோ  பணத்தை பதுக்கியதற்கு   எங்கள் குடும்பம் ஏன் பட்டினி கிடக்க வேண்டும்?'' என்று கொந்தளித்தார்.
திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில், சிகிச்சைக்காக தனது குழந்தையை அனுமதித்திருக்கும் மோகனப்பிரியா நம்மிடம் பேசும்போது, ''தினமும் வீட்டு வேலைக்குப் போனால்தான் சாப்பாட்டுக்கு வழி பிறக்கும். இந்த நிலையில், என் குழந்தைக்கு திடீரென வயிறு வீக்கமாகி காய்ச்சல் வந்துவிட்டது. சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். இங்கே சின்னச் சின்னத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது. என்னிடம் 500 ரூபாய்  நோட்டாக 2,000 ரூபாய் உள்ளது. அவற்றை  மாற்றுவதற்கு வங்கிக்குப் போகவேண்டும் என்கிறார்கள். உடல்நலமில்லாதக் குழந்தையை ஆஸ்பத்திரியில் தனியாக  விட்டுவிட்டு எப்படி செல்வது என்று  தெரியவில்லை'' என்று கண்கலங்குகிறார்.

‘மை வைப்பதுதான் வங்கி ஊழியர் வேலையா ?’

இப்படிப்  பலரும்  கவலைகளைக் கொட்டிக் கொண்டிருக்க இன்னும் எத்தனை  நாட்களுக்கு இந்தப் பிரச்னைத் தொடரும்? நிலைமை சீரடையாமல் உள்ளதற்கு காரணம் என்ன? வங்கி ஊழியர்களின் மனநிலை என்ன? என்பது குறித்து  அனைத்து 'அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்க'த்தின் தலைவர் வெங்கடாசலத்திடம் பேசினோம்.
''பொதுமக்கள்  தேவைக்கு  ஏற்ப வங்கிகளுக்கு  பணம் வரவில்லை. ஆனாலும் தொடர்ந்து மக்கள் வந்துகொண்டேதான் உள்ளனர். வங்கி ஊழியர்களைப் பொதுமக்கள் குறை சொல்ல வேண்டாம். வங்கி ஊழியர்கள் மிகுந்த மன  உளைச்சலில் உள்ளனர். அதைவிட மிக மோசமான செயல்பாடு வங்கி ஊழியர்களை  பொதுமக்களுக்கு மை வைக்க  உத்தரவிட்டிருப்பதுதான். ஜனநாயக நாட்டில்தான்  வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தைத் தருகிறது மத்திய அரசின் இந்த உத்தரவு. ஏற்கெனவே பொதுமக்களை சமாளிக்க முடியாமல், வங்கி  ஊழியர்கள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், மேலும் மேலும் கூடுதல் சுமைகளை ஊழியர்கள் தலையில் ஏற்றுவதால், பொதுமக்களும் வங்கி ஊழியர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.
பணவரத்துக் குறைவால் ஏ.டி.எம்-களிலும் பணம் இல்லை. இந்த நிலை எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள  பணப் பற்றாக்குறை நாட்டில் பசி, பட்டினியை  கட்டவிழ்த்துவிடுமோ என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வந்தால்தான் சமாளிக்க முடியும். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.'' என்றார்.
வங்கிகளில் நாட்கணக்கில் காத்துக்கிடக்கும் இந்த அவல நிலை எப்போது மாறும்? கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?

- கே. புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ