Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓய்வில்லாமல் ஓடி ஏடிஎம்களை நிரப்பும் ஹீரோக்கள்!

ஏடிஎம்

1000, 500ரூபாய் நோட்டுகள் செல்லாது புதிய நோட்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஏடிஎம் களிலும் வங்கி வாசலிலும் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர். புதிய நோட்டுகளை மாற்றும் முயற்சியில் இதுவரைக்கும் 33 பேர் இறந்துள்ளனர்.

மோடியின் இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. ஆனால் பணத்தை மாற்றுவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக எதிர்ப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் இயங்காமல் முடங்கிக் கிடக்கின்றன. இயந்திரங்களில் வைக்கும் பணமும் மின்னல் வேகத்தில் பறந்து விடுகிறது. பல மையங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அடி உதை வாங்காத குறையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏடிஎம்களுக்கே இந்த நிலை என்றால் அதில், பணத்தை வைப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும். நாடு முழுவதும்  2லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. அதில் பணத்தை நிரப்ப 40 ஆயிரம் ஓட்டுநர்கள் இயந்திரங்களில் பணத்தை நிரப்புபவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளனர். 

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏடிஎம் மையங்களில் பணம் கொண்டு செல்லும் ட்ரக்குகளின் டிரைவர்கள் ஓய்வே இல்லாமல் உழைத்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் வீட்டுக்கு சென்றே பல நாட்கள் ஆகி விட்டனவாம். ஆனால், பல ஓட்டுநர்கள் நம்மால் முடிந்த நன்மையை நாட்டுக்கு செய்வோம் என்ற எண்ணத்தில் ஓய்வை பற்றி யோசிக்காமல் பணியாற்றி வருகின்றனர். மக்களுக்காக பணம் நிரப்பும் இந்த மனிதர்களின் பையில் 500 ரூபாய் நோட்டு இருந்தால் கூட அது அதிகம்தான். குடும்பத்தினரிடம் பணம் இல்லையென்றாலும் அதனை பற்றியெல்லாம் சிநதிக்காமல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அம்ரிஸ்தரை சேர்ந்த ஹாரீஸ் பாலிவாலுக்கு 2 குழந்தைகள். ஒரு நாளைக்கு நாலு ஐந்து முறையாவது குழந்தைகளிடம் இருந்து போன் வந்து விடுகிறது. 'அப்பா எப்போ வருவீங்கனு? 'இப்போ வந்துடுவேன் அப்போ வந்துடுவேனு' சமாளித்துக் கொண்டிருக்கிறார். 'ஆனால், நான் வீடு திரும்பும் போது மிகப் பெரிய அனுபவத்தை கற்றிருப்பேன். என் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எனது அனுபவத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வேன்'' என்கிறார். 

பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் பிரதமரைத் திட்டிக் கொண்டிருக்கையில், வங்கி ஊழியர்கள் பலரும் கூட ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். பலர் வங்கியிலேயே படுத்துக் கொள்கிறார்களாம். சிலர் குளிக்கக் கூட நேரமில்லாமல் வங்கிக்கு ஓடுகின்றனர். எஸ்ஐஎஸ் செக்யூரிட்டி கேஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரியும் விகாஷ் பாண்டே கூறுகையில், ''வீட்டுக்கு சென்று நான்கு நாட்கள் ஆகி விட்டது. ஆனாலும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் எனது பங்கும் இருக்கிறது என பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 'எனக் கூறுகிறார். 

இதற்கிடையே பிரதமர் மோடியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து மங்களுருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாதிக் தனது ஆட்டோவில் இலவச சவாரி செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார். ஆட்டோவின் முகப்பில் பிரதமரின் படத்துடன் கூடிய பேனரைக் கட்டியுள்ளார். ''நாட்டின் நலன் கருதி பிரதமர் எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார் சாதிக்.  அதுபோல் மங்களூரு ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு சீக்கிய மக்கள் உணவு வழங்கி வருகின்றனர். 

-எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ