Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கிரடிட் உங்களுக்கு...எனக்கு டெபிட்டா?’ -வெடிக்கும் மோடி-ஜெட்லி மோதல் 

புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் முட்டல் மோதல்கள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ' அரசின் முடிவால் நிதி அமைச்சகம் மீள முடியாத கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டது' என அவர் வேதனைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொலைக்காட்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர். அவரது உரை முடிந்த மறுகணத்தில் இருந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் மற்றும் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் பேட்டியளித்தனர். ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக பேட்டியளித்தார் சக்தி காந்த தாஸ். நிதித்துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இந்த முடிவுகளின்போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைகாட்டவில்லை. அவரது துறையின் செயலர் மட்டுமே மக்களுக்காக உரையாற்றிக் கொண்டிருந்தார். "மத்திய அரசு எடுத்த இந்த முக்கியமான முடிவின் பின்னணியில் ஜெட்லி இருப்பதை பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சில நிர்வாகிகள் அருண் ஜெட்லியை ஒதுக்கி வைப்பதையே விரும்புகின்றனர். அதனாலேயே, இந்த விவகாரத்தில் மோடியை மட்டும் முன்னிறுத்தி அறிவிப்பு வெளியானது. இதனை அருண் ஜெட்லி ரசிக்கவில்லை" என டெல்லியில் நடப்பவற்றை நம்மிடம் விளக்கிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

"ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, கடந்த ஓர் ஆண்டாகவே ஆர்.பி.ஐ மற்றும் நிதித்துறை அமைச்சகத்துக்குள் விவாதம் நடந்து வந்தது. ‘இதனால் கறுப்புப் பணத்தை ஒழிப்பது சிரமம்’ என ஆர்.பி.ஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் பேசிவந்தார். ஆனால், ' பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கள்ள நோட்டுகள் புழங்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளும் நடக்கின்றன' என உளவு அமைப்புகள் வழியாக அரசுக்கு அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன. இதுகுறித்து, பொருளாதார நிபுணர்களுடன் தீவிரமாக ஆலோசித்து, இப்படியொரு முடிவை எடுத்தார் மோடி. இப்படியொரு அதிரடி நடத்தப்படுவதை ஜெட்லி விரும்பவில்லை. இதுகுறித்து, பிரதமருடன் நேரடியாகவே விவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், ‘ நீங்கள் அமைதியாக இருங்கள்’ என உறுதியான குரலில் தெரிவித்தார் பிரதமர். அதனால்தான், அறிவிப்பு வெளியான நாளில் அருண் ஜெட்லி அருகில் இருக்கவில்லை. நிதி அமைச்சருக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், அவரது துறையின் செயலரை முன்னிறுத்தினார் மோடி. இதனை எதிர்பார்க்காத அருண் ஜெட்லி, ' ராஜினாமா செய்துவிடுவேன்' எனக் கூறியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். புதிய ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் முட்டல் மோதல் அதிகரித்திருப்பது உண்மை" என்றார் விரிவாக. 

“ஆட்சி அதிகாரத்திற்குள் நிதி அமைச்சராக இன்னமும் சிதம்பரம்தான் தொடர்கிறாரா எனக் கேள்வி எழுப்பும் அளவுக்கு, அவருடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் ஜெட்லி. இதை ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. குறிப்பாக, சிதம்பரம் தொடர்பாக பல விவகாரங்களை கிடப்பில் போடுவதில், ஜெட்லி ஆர்வமாக இருக்கிறார் என அமித் ஷா மூலமாக தகவல் கொண்டு செல்லப்பட்டன. ‘ஆட்சி அதிகாரத்தில் ஜெட்லியின் தேவை அவசியம்’ என்பதால் பிரதமரும் அமைதியாக இருந்தார். பா.ஜ.க மேலிடத்தைப் பொறுத்தவரையில், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோரை கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். சுஷ்மா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஜெட்லியோடு சேர்த்து ராஜ்நாத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வேலைகள் வேகமெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதிதான் பிரதமரை முன்னிறுத்திய ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்த அறிவிப்பு.

இதில், தன்னை கலந்து ஆலோசிக்காமலும் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளை பிரதமர் அலுவலகம் பயன்படுத்திக் கொள்வதையும் மிகுந்த கோபத்தோடு கவனித்து வருகிறார் அருண் ஜெட்லி. ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கெல்லாம், பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் நிதித்துறை அமைச்சர் இருக்கிறார். மக்களின் சாபத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் நிதித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஒருகட்டத்தில், கொந்தளித்த ஜெட்லி, ‘இதற்கான கிரடிட் அனைத்தையும் பிரதமர் எடுத்துக் கொண்டார். டெபிட் மட்டும் என் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது’ என ஆதங்கப்பட்டாராம். பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையிலான விவகாரம், சில நாட்களில் உக்கிரமாக வெடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர் நிதித்துறை வட்டாரத்தில். 

பிரதமரின் அறிவிப்பு குறித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘ சில நாட்கள் பணப்புழக்கத்தில் சிக்கல் இருக்கலாம். கணக்கில் வராத பணம் அரசின் நடவடிக்கையால் தனியாரிடம் இருந்து அரசுக்கு கிடைக்கும். எதிர்காலத்தின் நல்ல நிர்வாகத்துக்காக தற்காலிக இடையூறுக்கு நாம் தயாராக வேண்டும்’ என்றார். 

‘இதை பிரதமருக்காக சொல்கிறாரா? ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக இடையூறு என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறாரா’ எனவும் கேள்வி எழுப்புகின்றனர் நிதித்துறை வட்டாரத்தில். 

- ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close