Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மல்லையா இதெல்லாம் சரியா! - கறுப்பு பணம் இருப்பது இந்தியாவிலா? லண்டனிலா?

கறுப்பு பணம்

"தவறானது பெரிய அளவில் நிகழ்த்தப்படும்போது அது நீதியை விட வலுவானதாக மாறும்" என்றார் பிளாட்டோ. பெரும் அளவில் வங்கிகளை ஏமாற்றி விட்டு, நீதிக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டது மட்டுமின்றி, வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துகொண்ட மல்லையாவுக்கு பிளாட்டோவின் வரிகள் பொருத்தமாக இருக்கின்றன. கிங் பிஷர் நிறுவனத்தின் பெயரில், இந்தியாவில் உள்ள 17 வங்கிகளிலும் பெரும் தொகையைக் கடனாக வாங்கியவர் அதனைத் திருப்பித் தராமல் நஷ்டக் கணக்குக் காட்டிவிட்டு லண்டன் சென்று விட்டார் மல்லையா.தற்போது உள்நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கவேண்டி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மோடி அரசு, தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றிருப்பதும் இதில் அடக்கம். இதற்கிடையே மல்லையாவின் கடன் தொகையை பற்றிய விவரணைகளை தனது வங்கி வரலாற்றிலிருந்து அகற்றியுள்ளது அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. ஒரு கோடி கடன் கேட்டாலே அதற்கு நமக்கு என்னவெல்லாம் சொத்து இருக்கிறது என வங்கிகள் விசாரிக்கும் நிலையில், 6000 கோடிக்கு மேல் வங்கிகள் அவருக்கு கண்ணை மூடிக்கொண்டு ஏன் கடனுதவி அளித்தன?  மல்லையா இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்தது எப்படி? 

உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மகள் பற்றி ஒரு குட்டிக் கதை உலாவுவது உண்டு. ‘பில்கேட்ஸ் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தாராம். அதற்கு அந்த ஹோட்டலில் பரிமாறுபவர், “சார் உங்க பொண்ணு 1000 ரூபாய் டிப்ஸ் கொடுத்துட்டு போனாங்க, நீங்க வெறும் பத்து ரூபாய்தான் தருவீர்களா? என்று கேட்டாராம். அதற்கு,”அவள் உலகப் பெரும் பணக்காரனின் மகள் 1000 ரூபாய் தருகிறாள், நான் ஒரு ஏழை மரம் வெட்டுபவனின் மகன் பத்து ரூபாய் தருகிறேன் என பதில் சொன்னாராம். இந்த கதை உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் மல்லையா விஷயத்தில் இது முழுக்க முழுக்கப் பொருந்தும். சுதந்திர இந்தியாவில் ’யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் இந்தியா’ என்னும்  பெயரில் தொடங்கப்பட்ட தனியார் மது உற்பத்தித் தொழிற்சாலையின் உரிமையாளர் விட்டல் மல்லையாவின் மகன்தான் இந்த விஜய் மல்லையா. தன் சிறுவயது முதலே பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கே உண்டான பகட்டுத்தனமும் பணத்தின் மதிப்பு அறியாத வாழ்க்கையைதான் வாழ்ந்தார் விஜய் மல்லையா. கொல்கத்தாவில் பள்ளிக்கல்வி, கலிபோர்னியாவில் கல்லூரி வாழ்க்கை என வாழ்ந்தவர், 1983-ல் விட்டல் மல்லையா இறந்த பிறகு தனது 28 வயதில் தொழிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  ஏர் இந்தியா விமானத்தின் விமானப்பணிப்பெண் சமீரா தியாப்ஜியை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு சித்தார்த் என்னும் குழந்தையும்  பிறந்தது. ஆனால் இவர்களது மணவாழ்க்கை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக 1987-ல் பிரிந்தனர். பிறகு 1993-ல் மல்லையா தனது தோழியான ரேகாவை திருமணம் செய்துகொண்டார். ரேகாவுக்கு முந்தைய திருமணங்களில் பிறந்திருந்த இரண்டு குழந்தைகளையும் மல்லையா தத்தெடுத்துக் கொண்டார்,  தற்போது மல்லையாவின் சொத்துக்கு உரிமை உடைய வாரிசுகள், சித்தார்த் மற்றும் ரேகாவின் குழந்தைகள் இருவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்,   

மல்லையா என்னும் அடையாளம்

சென்னை ஜார்ஜ் கோட்டையில்  மெக்டொவல் என்பவரால் தொடங்கப்பட்ட மது உற்பத்தி ஆலையைதான் சுதந்திரத்துக்குப் பிறகு விட்டல் மல்லையா விலைகொடுத்து வாங்கினார். அதற்கு யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டது. சிகரெட், மதுபான வகையறாக்கள் என  வசதி படைத்தவர்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தது அந்த நிறுவனம். 1983-ல் யுனைட்டட் ப்ரீவரீஸ் விஜய் மல்லையாவின் கைக்கு மாறிய பிறகுதான் அசுர வளர்ச்சி கண்டது.

பெர்கர் பெயிண்ட்ஸ், தி ஏசியன் செய்தித்தாள் நிறுவனம், க்ராம்ப்டன் நிறுவனம் என இவரது, மொத்தம் 60 ஒருங்கிணைக்கப்பட்ட கம்பெனிகளின் வருடாந்திர ஈட்டுத்தொகை மட்டும் `1998-1999 காலகட்டத்தில் 11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  இந்திய ரூபாய் மதிப்பில் சில ஆயிரம் கோடிகள். இவரது தந்தை காலத்தில் ஈட்டிய தொகையை விட இது 64% அதிகம். இவர்களது உற்பத்தியான கிங்ஃபிஷர் பீருக்கு இந்தியச் சந்தையில் 50% பங்கு இருக்கிறது. 52 நாடுகளில் இவர்களது மதுபான வகைகள் கிடைக்கின்றன.

2005ல் கிங்பிஷர் விமான நிறுவன சேவையைத் தொடங்கினார் மல்லையா. 5696 பணியாளர்களைக் கொண்டு தொடக்கப்பட்ட இந்த நிறுவனம் தொடங்கியதில் இருந்தே இழப்பீட்டுக் கணக்கைதான் காண்பித்து வந்தது. நிறுவனம் தொடங்கிய வருடத்தில் 70 பில்லியன் டாலர் இழப்பீட்டைச் சந்தித்ததாக  தனது பேட்டி ஒன்றில் மல்லையா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கும் முன்பு வெளிநாட்டு மதுபான நிறுவனத்தில் இவருக்கு இருந்த பங்கில் 75 பில்லியன் டாலர் பணத்தை இவர் திரும்பத் தரப்பணிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்தப் பணத்தை இவர் திரும்பத்தரவில்லை. அதைத்திருப்பித் தராமல் நஷ்டக்கணக்கை காண்பிக்கவே இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் எனக் கூறப்பட்டது. வங்கிகளுக்கு நஷ்டக்கணக்கைக் காண்பித்தவர், தனக்கான வசதி வாய்ப்புகளை மட்டும் குறைத்துக்கொள்ளவேயில்லை. கிங்பிஷர் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த கிங்பிஷர் காலண்டர்களை வெளியிட்டார். பிகினி உடையணிந்த பெண்கள் இடம் பெற்றிருந்த காலண்டர்களின் விற்பனை மூலம் அவர் பல லட்சம் கோடி வருமானம் ஈட்டினார். கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, சமீரா ரெட்டி என இன்று பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் கிங்பிஷர் காலண்டரில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். கூடவே இந்திய ப்ரீமியர் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கெடுத்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 634 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார் விஜய் மல்லையா.  மோகன் பகான் ஏ.சி என்னும்  குழுவின் கால்பந்தாட்ட அணியையும் விலைக்கு வாங்கினார். இது தவிர சர்ச்சைக்குள்ளான சஹாரா நிறுவனத்தின் சமபங்குதாரராகவும் இருந்தார்.

இன்றைய தேதியில் மல்லையாவின் தனிநபர் மதிப்பு 1.62பில்லியன் டாலர்கள். இது அவர் கடனாக வாங்கிய தொகையை விட பல மடங்கு அதிகம். 750 கோடி ரூபாய் செலவில் இவர் செயற்கையாக உருவாக்கிய மாண்ட கார்லோ தீவு, தென்ஆப்ரிக்காவில் 12000 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மற்றும் கேளிக்கை விடுதி, இமயமலையில் 1000 ஏக்கரில் உருவாக்கப்பட்டிருக்கும் சுற்றுலாப் பயனிகள் தங்கும் விடுதி. 1.6 மில்லியன் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள யூ.பி சிட்டி நகரம். ஸ்காட்லாந்து அரண்மனைகள். ட்ரம்ப் டவரில் உள்ள சொத்துகள் மற்றும் பெங்களூரு, மும்பை  டெல்லி ஆகிய இடங்களில் இருக்கும் வீடுகள்  என 21.3 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை  வைத்திருக்கிறார்.  யுனைடட் ப்ரீவரீஸ் நிறுவனம் வழியாக இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதித்து இருக்கிறார். நஷ்ட கணக்கு காட்டிய காலகட்டத்தில்தான் கர்நாடகத்தின் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தங்கக் கதவை காணிக்கையாக அளித்தார். கூடவே காந்தியின் கிண்ணம் திப்பு சுல்தானின் போர் வாள் என இவர் ஏலத்தில் எடுத்த, எண்ணில் அடங்காப் பொருட்களும் இவரது சொத்து மதிப்பில் அடங்குகிறது.   

ஒரு பக்கம் கிங் பிஷர் நிறுவனத்தில் நஷ்டம், நஷ்டம் என்று கூறிக்கொண்டே இது போன்று தன்னிச்சையாக பணத்தை வாரி இறைத்தார். 2012-ல் கிங் பிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. 2013-ல் கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமமும் திரும்பப் பெறப்பட்டது.

அரசியலையும் விட்டுவைக்கவில்லை!

"சுகபோக வாழ்க்கையை வாழ்பவர் என யார் என்னை அடையாளப்படுத்தினாலும், தனிப்பட்ட அளவில் நான் எளிமையாக வாழ்பவன். இன்றும் சபரிமலைக்கு பயணப்படும் நாட்களில் 42 நாட்கள் கடும் விரதம் இருப்பேன், கருப்புத் துணிதான் அணிவேன்" என்று தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.  

தொழில் சாம்ராஜ்யத்தில் தன்னை ஒரு பெரும் வியாபாரியாகவே அடையாளப்படுத்திக் கொண்ட மல்லையா, அரசியலையும் விட்டுவைக்கவில்லை. 2002-ல் அகில பாரதிய ஜனதாதள் கட்சியில் சேர்ந்தார். அதே வருடம் ஜனதா தள் மற்றும் காங்கிரஸின் ஆதரவில் ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 சுப்ரமணிய சாமியின் ஜனதா  கட்சியில் சேர்ந்தார். 2010-ல் மீண்டும் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இம்முறை அவருக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவளித்தது. 2012 தொடங்கி இவர் மீது எழுந்த சர்ச்சையை அடுத்துதான் இவரது முறைகேடான சொத்து சேகரிப்புகளை எதிர்த்து குரல் எழுப்பப்பட்டன. மே 2016-ல் ராஜ்ய சபாவின் நடத்தைக் கண்காணிப்புக் குழுவே இவரைப் பதவிவிலகச் சொல்லி பரிந்துரைக்க இருந்த நிலையில் முந்திக்கொண்டு தானாகவே பதவியை விட்டு விலகினார் மல்லையா. 

வங்கிகளும்! இவர் வாங்கியதும்!

இதுவரை 17 வங்கிகளில் 9000 கோடி வரை தனது கிங்பிஷர் மற்றும் யுனைட்டட் ப்ரீவரீஸ் நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கி இருக்கிறார். கிங்பிஷர் நிறுவனத்துக்கு மட்டும் 6,963 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது. இவருக்குக் கடன் கொடுத்த வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது, அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. எஸ்.பி.ஐ வங்கி மட்டும், சுமார் 1,600 கோடி வரை மல்லையாவுக்கு கடனாக அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி 800 கோடியும், ஐ.டி.பி.ஐ வங்கி 800 கோடியும் கடனாக வழங்கியிருக்கின்றன. குறைந்தபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி மட்டும் 50 கோடி வழங்கி இருக்கிறது. கூட்டுறவு வங்கிகளைக் கூட விட்டுவைக்காமல் 310 கோடி கடன் பெற்ற பெருமை மல்லையாவை மட்டும்தான் சேரும். இந்தியத் தலைமை வழக்கறிஞர்கள் கூறுவதன்படி இந்திய வங்கிகளுக்கு அவர் திருப்பிச் செலுத்தாத தொகையைவிட வெளிநாட்டில் அவருக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பு அதிகம். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையேயும் கடந்த மார்ச் 2016-ல் அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று வந்த செய்தியை அடுத்து பதினேழு வங்கிகளும் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால் திட்டமிட்ட பயணத்தேதிக்கு முன்பே அவர் லண்டனுக்குப் பறந்து விட்டார். வழக்குகளுக்காக இவர் ஆஜராகாததை அடுத்து இவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. "நான் நாட்டை விட்டு ஓடிவிடவில்லை தன் பிள்ளைகளைப் பார்ப்பதற்காகவே லண்டன் வந்திருப்பதாகப் பேட்டியளித்தார். பிள்ளைகளைப் பார்க்கப்போனதாகக் கூறிக் கொண்டவர்,  இன்று லண்டனின் கடற்கரையோரத்தில் கிங்பிஷர் பீர் பாட்டில் சகிதம் தான் அமர்ந்திருக்கும் படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அவருக்குப் பெரும்பணம் கொடுத்த ஸ்டேட் பாங்க் வங்கி அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏலத்தில் விடப் போராடி, சொத்துக்களை முடக்கிவைத்துள்ளது. மல்லையாவிடம் இருந்து கடனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இப்படி முடக்கி வைப்பதே கடனை எங்களால் திரும்பப் பெற இயலவில்லை என வங்கிகள் அறிவிப்பதன் அடையாளம்தான் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

புயல் வருவதற்குக் காத்திருக்காமல், பெருமழையில் நடனமாடத் தெரிந்துகொள்வதுதான் வாழ்க்கை என்பதை தனக்கு பிடித்த வரிகளாக பல இடங்களில் கோடிட்டு இருக்கிறார் மல்லையா. புயல் இங்கே இந்திய சாமான்யர்களின் வாழ்க்கையில்தான், கறுப்புபண ஒழிப்பு என்கிற பெயரில் திசைமாறி வீசிக்கொண்டிருக்கிறது. 

-ஐஷ்வர்யா

இன்ஃபோகிராஃபி : ஆரிஃப் முகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close