Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கான்பூர் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 96 ஆக உயர்வு!

கான்பூர் ரயில் விபத்து

த்தரப்பிரதேசத்தின் கான்பூர் புக்ராயன் அருகே இன்று காலை இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது மேலும் 76 பேர் பலத்த காயத்துடனும் 150 பேர் சிறிய காயங்களுடனும் அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க க் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களின் முன்பதிவு அட்டவணை விவரத்தின்படி 235 பேர் அந்த ரயிலில் பயணம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் முன்பதிவு இன்றி நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளவர்களைக் காப்பாற்றவும், பெட்டிகளின் அடியே சிக்கியிருக்கும் உடல்களை மீட்கவும் ராணுவத்தினர் 90 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே மருத்துவ முகாம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு, 4  ராணுவ மருத்துவர்களும், 20 ராணுவ நர்ஸ்களும் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் இரண்டு மருத்துவ ஆம்புலன்ஸுகள் மூலம் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள அறிக்கையில், போலீஸ் டி.ஜி.பி விபத்து நடைபெற்ற பகுதியில்  உதவிக்கு இருப்பார் என்றும். விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு மாநில அரசு முழு உதவிகள் செய்யும் என்று  தெரிவித்துள்ளார், இறந்தவர்களின் குடும்பத்துக்கு 3.5 லட்ச ரூபாய் இழப்பீடுத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

  

விபத்தில்  ரயிலின் 14 பெட்டிகளுமே தடம் புரண்டதாகத் தெரிகிறது. எஸ்-1 மற்றும் எஸ்-2 கோச்சுகளில் அதிகம் பேர் பயணித்திருப்பதால் அதில் இருந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் விபத்து மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில். இந்த துயர் செய்தியால் தனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கொடிய தருணத்தின் துன்பத்தை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து பகுதிக்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்தான் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உடனடி உதவிக்கான தொடர்பு எண்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து உடனடியாக குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் ஆறாவது முறையாக ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ