Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.என்.எஸ். சென்னை கப்பலில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

சென்னை

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பெயர் தாங்கி கடற்படைக் கப்பல் உலா வரப்போகிறது. கடற்படை கப்பல் ஒன்றுக்கு சென்னையின் பெயர் சூட்டப்படப்படுவதும் இதுவே முதன்முறை 

கடந்த 2006-ம் ஆண்டு நாசக்கார(Destroyer) கப்பல்கள் வரிசையில் 3 கப்பல்களை கட்ட இந்திய கடற்படைத் திட்டமிட்டிருந்தது. அதன்படி, 2014-ம் ஆண்டு ஆண்டு ஐஎன்எஸ் கொல்கத்தாவும் அதனைத் தொடர்ந்து ஐஎன்எஸ் கொச்சியும் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அந்த வரிசையில் கடைசி கப்பலான ஐஎன்எஸ் சென்னை கடந்த 2010-ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். கப்பல் கட்டும் பணிகள் முடிந்து பல்வேறு சோதனைகளை ஐஎன்ஸ் சென்னை வெற்றிகரமாக கடந்தது. இதையடுத்து,  இன்று ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ஐஎன்எஸ் சென்னையை மும்பையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். 

விழாவில் பேசிய மனோகர் பாரிக்கர், ''ஐஎன்எஸ் சென்னை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது. சென்னை நகரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த கப்பலுக்கு இந்த பெயரை சூட்டியுள்ளோம். நவீன வசதிகளுடன் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது ''என்றார். மும்பையில் உள்ள மேற்கு மண்டல கடற்தளத்தில் இருந்து ஐஎன்ஸ் சென்னை இயங்கும். மும்பையில் முகாமிட்டிருக்கும். இந்தியாவில் கட்டப்பட்ட நாசக்கார கப்பல்கள் வரிசையில் ஐஎன்எஸ் சென்னைதான் மிகப் பெரியது. சுமார் 164 மீட்டர் நீளம் கொண்டது. அகலம் 17.4 மீட்டர்.  7,500 டன் எடை கொண்டது. மணிக்கு 30 நாட்டிகல் மைல் (56 கிலோ மீட்டர்) வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 

பல்வேறு நவீன வசதிகளுடன் கடற்போரில் முழுமையாக ஈடுபடக் கூடிய வகையில், ஐஎன்எஸ் சென்னை கட்டப்பட்டுள்ளது. சூப்பர்ஸானிக் பிரமோஸ் ரக ஏவுகணைகள்  பாரக்-8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. கடலுக்கடியில் அலையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இதன் ஆழ்கடல் பார்வையில் இருந்து தப்ப முடியாது. நவீன சென்சார் கருவிகள் நீர்முழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டே இருக்கும். நீர்மூழ்கிகள்  தென்பாட்டால், அடுத்த நிமிடம் தாக்கி அழிக்கக் கூடிய நீர்மூழ்கி அழிப்பு ஏவுகணைகளும் உள்ளன. 

நவீன சோனார் கருவிகளுடன் டர்பீடோக்களை ஏவும் வசதியும், எதிரிகளின் ஏவுகணைகளை கண்டறியும் கவாக் நவீன ரேடார்களும் உள்ளன. அதுபோல் எதிரிகளின் டர்பீடோக்களை கண்டறியும் நவீனத் தொழில் நுட்பமும் உள்ளது. ஏகே 360 ரக சிறிய அளவிலான பீரங்கிகள் 4 ஐஎன்எஸ் சென்னையில் இருக்கிறது. இது தவிர ஸீ கிங், ஹெச்.ஏ.எல் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் 3 என இரு ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. இந்தக் கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும் 350க்கும் மேற்பட்ட வீரர்களும் பணி புரிவார்கள். 

சென்னையின் பெருமை பேசும் போர்க்கப்பலால் நமக்கும் பெருமைதானே!

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ