Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணம் ஒழிய இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?

கறுப்புப் பணம்

ந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியின்போதும், வங்கிகளின் முன் காத்திருந்த நேரத்திலும் பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மருத்துவமனையில், கடந்த 20-ம் தேதி அன்று பழைய  500, 1000 ரூபாய் கொடுத்ததால் மருத்துவம் பார்க்க மறுத்ததன் விளைவாக புனேவில் ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதயநோய் காரணமாக புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக்-ல் அனுமதித்துள்ளனர் குழந்தையின் பெற்றோர் அம்ரபாலி மற்றும் கௌரப் குண்டே. பலரது பரிந்துரையின்பேரில், ரூபி கிளினிக்கில் சேர்க்க வேண்டும் என முடிவு செய்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட உடனேயே மருத்துவச் செலவுக்கான பில்லை கொடுத்திருக்கிறார்கள். அதில், இதய அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 3.5 லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளனர். ஆனால், சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே, மொத்த பணத்தையும் செலுத்த வேண்டும் என்பது மருத்துவமனையின் நிபந்தனை.

குழந்தையின் பெற்றோர் முதலில் 1 லட்சம் ரூபாய் 500, 1000 ரூபாயாக செலுத்த முடியும் எனவும், 30,000 ரூபாய் காசோலை அல்லது கார்டு மூலமாக செலுத்துவோம் என்றும் கூறியுள்ளனர். மீதம் இருக்கும் பணத்தை இரண்டு நாட்களுக்குள் கட்டி விடுவோம் என்று சொல்லியும் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஏற்காமல், சிகிச்சையை தாமதப்படுத்தி உள்ளார்கள்.

குழந்தையின் உறவினர் ஒருவர் கூறுகையில், “500, 1000 ரூபாய் தாள்கள் தான் இருந்தது, அதை மருத்துவமனையில் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சிகிச்சையும் செய்யவில்லை. டாக்டர்கள் ‘கோல்டன் ஹௌவர்’-ஐ வீணாக்கி விட்டார்கள்” என்று கூறினார்.

ரூபி கிளினிக்-ல் சிகிச்சை அளிக்கத் தாமதமானதால், குழந்தையை கே.இ.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், தாமதமாக சேர்க்கப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து, ரூபி கிளினிக் டாக்டர் சஞ்சய் பத்ரே-வைத் தொடர்பு கொண்டு குழந்தையின் உறவினர்கள் கேட்டபோது, அவர் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த மருத்துவமனையில் பணத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்காது, சிகிச்சைதான் முதலில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே, தொலைபேசி மூலம் மருத்துவமனையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள், அப்போது, எந்தவிதமான பணமாக இருந்தாலும் பரவாயில்லை. குழந்தையை அனுமதியுங்கள் என்றனர். ஆனால், நேரில் சென்றபோது, பழைய ரூபாய் நோட்டுகளை அவர்கள் ஏற்கவில்லை. நடுவில் என்ன நடந்த்து என்று புரியவில்லை” என்றார் அந்த உறவினர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துமனைகளும் அவசர சிகிச்சைக்கு காசோலைகளை ஏற்க வேண்டும் என்றும், ஏற்க மறுக்கும் மருத்துமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கியில் மரணமடைந்த முதியவர்

கர்நாடகா மாநிலத்தின் சேலூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தப்ப என்ற முதியவர் ‘ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்’ -ல் ரூபாய் 31,000 பணத்தை மாற்ற வங்கிக்குச் சென்றுள்ளார். அதிகமான கூட்டத்தில் நெடுநேரம் காத்திருந்ததால் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்த வங்கி ஊழியர் ஒருவர், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டாதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

முதியவரின் உறவினர் ரங்கய்யா கூறுகையில்,  "அவருக்கு உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை, இதுநாள் வரை அவருடைய பண்ணையை அவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்’ என கூறினார். 

வங்கிகளில் காத்திருந்ததாலும், 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பைக் கேட்டும், இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மோடியின் கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தால் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ, இல்லையோ? அன்றாடம் சம்பாதிக்கும் சாமான்ய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவச் செலவுக்கும், சாப்பிடுவதற்குமே பணம் கொடுப்பது பெரும் சவாலாக உள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ளள இந்த பிரச்னைகளைப் போக்க, மோடி அரசு சரியான தீர்வை எப்போது வழங்கும்? என மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 - நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்