Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாமான்யர்களை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

மோடி

ன்று உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதுபோல்,1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி நள்ளிரவு... அப்போது இந்தியாவில் மிகப் பெரிய வங்கிகளாக இருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கி ஓர் அவசர சட்டத்தை தடாலடியாக துணிந்து பிறப்பித்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஒரு பெண்ணால் இந்தியாவை திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ‘‘சாதாரண மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. சாமான்யர்களும் வங்கிகளில் கடன் வாங்கிப் பயனடைய வேண்டும் என்பதே அந்தச் சட்டத்தின் நோக்கம்’’ என அதற்கு பதில் அளித்தார் இந்திரா காந்தி. ஆனால், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 47 ஆண்டுகளாகி விட்டன. இன்னமும் இந்திரா காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை. 

சாமான்யர்களிடம் கடனை வசூலிக்கும் வங்கிகள்!

விவசாயிகளும், சாதாரண மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை பயன்படுத்தி, வீடு கட்டுவதற்கும், விவசாயத்துக்கும் சாமான்ய மக்கள் வாங்கிய குறைவான கடன்தொகையை வங்கி அதிகாரிகள் வட்டியுடன் வசூலிப்பதை சமீபகாலமாக நாம் பார்த்து வருகிறோம். கடனை திரும்பப் பெறுவதற்காக, மிகக் குறைவான தொகையை கடனாக வாங்கியவர்களின் கழுத்தில் கத்திகூட வைக்கத் தயாராய் இருக்கின்றன, வங்கிகள். ஒரு நடுத்தரக் குடும்பம் கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு, அதை அடைக்க முடியாமல் திணறும்போது, அந்தச் சொத்தை வங்கி நிர்வாகம் கைப்பற்றி ஏலம் விடுகிறது. விவசாயிகளிடம் கொடுத்த கடன் தொகையை வட்டி மேல் வட்டி போட்டு வசூல் செய்கிறது. இதற்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக எடுத்துக் கூறலாம். என்றாலும், இதுபோன்று, கட்டாயமாக கடனை வசூலித்த இரண்டு முக்கியமான சம்பவங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. வங்கி மூலமாக டிராக்டர் வாங்கியிருந்த ஒரு விவசாயி, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த சற்றே கால தாமதமானதால்... அவரிடம் வசூல் செய்யவந்த வங்கி அதிகாரிகள், அந்த விவசாயியை அடித்து இழுத்துச் சென்றதுடன் அவர் வைத்திருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடைய படிப்புக்காக வாங்கிய கல்விக் கடனைக் கட்ட முடியாமல் தவித்தபோது... வங்கி ஊழியர்கள் அவரை மிகவும் டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கடன் கிடைக்காமல் வங்கியில் காத்திருப்பவர்கள் ஒருபுறம் என்றால்... கடன் தொகையைக் கட்ட முடியாமல் உயிரை விட்டவர்கள் மறுபுறம். இப்படிச் சாமான்யர்களிடம் கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் செய்யும், செய்த அடாவடித்தனங்கள் சொல்லி மாளாது. அதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் போய் வங்கிகள் மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதையும் இந்த நாடு மறந்திருக்காது. 

தப்பிச் சென்ற மல்லையா!

வங்கிகளில் சாமான்யர்களுக்கு கடன் கிடைக்கிறதோ, இல்லையோ... மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மிகச் சுலபமாக கடன் கிடைத்து விடுகிறது. இவர்கள் சாதாரண மக்களைப்போன்று, வரிசையில் நிற்க வேண்டிய அவசியமோ, எந்த ஆவணங்களையும் கொண்டுசெல்லவோ தேவை ஏற்படுவதில்லை. வங்கி மேலாளருக்கு ஒரு போன் செய்தால் போதும்.. அவ்வளவுதான்! அடுத்த நொடியில் அவர் கேட்ட தொகை கிடைக்கப் பெற்று விடும். இப்படித்தான் ஒவ்வோர் ஆண்டும் ஆட்சியில் இருப்பவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தங்களுக்கு  வேண்டியவர்களுக்கு கடன் தொகையைக் கொடுத்து கமிஷன் வாங்கிக் கொள்கின்றனர். அது மட்டுமா? அவர்கள் வாங்கிச் செல்லும் தொகை என்ன, சாமான்ய மக்களைப்போன்று மிகச் சாதாரணமானதா... இல்லையே? பல கோடிகள் அல்லவா! இப்படி அவர்கள் வாங்கிச் சென்றதோடு சரி. அதற்குப் பிறகு அவர்களை வங்கிகள் பக்கம் பார்க்க முடிவதில்லை... இதுபோன்ற கோடீஸ்வர ஏமாற்றுப் பேர்வழிகளை, என்றைக்காவது வங்கி அதிகாரிகள் கழுத்தைப் பிடித்துப் பணத்தைக் கேட்டிருக்கிறார்களா அல்லது அவர்களுடைய சொத்துக்களைத்தான் பறிமுதல் செய்திருக்கிறார்களா? ஒருபோதும் இல்லையே... இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் ஆட்சிகள் மாறினாலும், காலங்களும் ஓடினாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன. இந்த வகையில் பார்த்தால் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் விஜய் மல்லையா. இவரைப் பிடிக்க அரசாலும் முடியவில்லை... வங்கிகளாலும் முடியவில்லை. இதுபோன்று எத்தனையோ கோடீஸ்வர ஏமாற்றுக்கார மனிதர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்.

‘‘500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது!’’

இந்தியாவின் புதிய மாற்றத்துக்கான விதையாக அறியப்பட்டவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.  அவருடைய ஆட்சி தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில், நவம்பர் மாதம் 8-ம் தேதி, ‘‘இனி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’’ என்கிற ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்குப் பின்னர், ‘‘ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு நடவடிக்கை. இதனால் ஏற்படும் இன்னல்கள் 50 நாட்களில் சரியாகி விடும். ஆகவே, என்னுடைய குறிக்கோள்களில், நோக்கங்களில் ஏதேனும் தவறு என்று பட்டால், நாட்டிற்காக உயிரை விடத் தயார்” என கண்ணீர்த் துளிகளுடன் மோடி பேசினார். ஆனால், ரூபாய் நோட்டுகள் தொடர்பான மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்றுவரை பாதிக்கப்படுபவர்கள் சாமான்ய மக்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஒருபுறம், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என்றால்... மறுபுறம், இந்த அறிவிப்பால் ஒரே வாரத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனது வேதனையான விஷயம். இதுதவிர, இன்று வரை முழு அளவில் செயல்படாத ஏ.டி.எம் மையங்கள்... மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் வங்கிகள் என ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடி உழைக்கும் சாமான்யர்கள் அனைவரும் இருக்கிற வேலையை விட்டுவிட்டு தன்னிடம் இருக்கும் ஒருசில நோட்டுகளை மாற்றுவதற்குள் ஓடாய் தேய்ந்து போய் விடுகிறார்கள். 

நாட்டில் என்ன நடக்கிறது?

இதற்கிடையே, மத்திய அரசிடமிருந்து வங்கிகளுக்கும், மக்களுக்கும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இதைவிடக் கொடுமையானது மல்லையாவின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ததுதான். வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாது தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் சாமான்யர்களுக்கு இந்த அறிவிப்பு எப்படி இனிப்பாக இருக்க முடியும்? இதுதவிர, மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 550 கோடி ரூபாயில் தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார். ‘இவற்றை எல்லாம் பார்க்கும்போது நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை’ என்று புலம்பல்கள்தான் கேட்கின்றன. ஒட்டுமொத்த நாடும் பணத்துக்காகப் போராடும் நிலையில், இத்தனை கோடி ரூபாயைச் செலவுசெய்து தன் மகளுக்கு திருமணம் நடத்தியது எப்படி...? மல்லையாவுக்கு கடனைத் தள்ளுபடி செய்தது எதற்காக...? நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வருவதற்கு முன்னரே ஒரு வணிக நிறுவனம் இலவச இன்டர்நெட் சேவையை வழங்கியது எதற்காக...? பெரும்புள்ளிகள் பலரும் வாய்மூடி இருப்பது எதற்காக? என ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ஆனால், இவை அனைத்துக்கும் மத்திய அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. 

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ‘‘சாமான்யர்களுக்காகத்தான் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன’’ என ஒரு சரித்திரத்தை இயற்றி விட்டுப் போன இந்திரா காந்தியாலும், ‘‘சாமான்யர்களுக்கு பயன்படும் வகையில் கறுப்புப் பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்க... 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’’ என அறிவித்த மோடியும் சாமான்யர்களின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் உண்மை!

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close