Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணமுடக்கமும்... பின்னே இவர்களின் காமெடியும்!

ழைய  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது,  புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் என அரசின் அதிரடி நடவடிக்கைகளால் வங்கிகளில் கூட்டம் குறைந்தாலும் ஏ.டி.எம்-களில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பணப்பற்றாக்குறை இன்னொருபுறம்  மக்கள் உயிரிழப்பு என மோடி அரசின் பணமுடக்கத் திட்டம் நாட்டையே  நிலைமாற்றி விட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திடீர் நடவடிக்கையின் மீதாக சமூக வலைதளங்களில்  பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு சிலரின் கருத்துகள் அதிரடி கலகலப்பை ஏற்படுத்துகின்றன.

படமும் பிங்க்! பணமும் பிங்க்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பிங்க்’. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து இந்தப்படம் பேசியது. இந்த நிலையில் பிங்க் நிறங்களிலான 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதைப்  பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்  எழுதியுள்ள அமிதாப் தனது படமும் ‘பிங்க்’  2000 ரூபாய் நோட்டும் ‘பிங்க்’ என்கிற ரீதியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். 

அப்பா-மகன் கதை

பணமுடக்கம் அமலுக்கு வந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று முதியவர்கள் மட்டும் வங்கிகளுக்குச் சென்று பணம் மாற்றிக் கொள்ள வகை செய்யப்பட்டது. ஆகவே அந்த நாளில் வேறு யாரும் வங்கிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை அப்பாவை வங்கிக்குப் பணம் எடுக்க அனுப்பலாம். ஆனால் அதற்கு முன்பு, அவருக்கு வயதாகிவிட்டது என்பதை அவர் நம்பவேண்டும்’' என ஃபரூக் அப்துல்லா அவர்களைக் குறிப்பிட்டு நகைப்புடன்  கூறியுள்ளார்.  

எப்போதும் இல்லை எப்போதாவது!

பணமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதலே பிரதமர் மோடிக்கு எதிராக குரல்கொடுத்தும், போராட்டங்களையும் நடத்திவரும் மேற்குவங்க முதல்வரும் திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது  பேசுகையில், "ஏ.டி.எம் என்றால் எப்போதும் பணம் தரும் மெஷின் என்பார்கள் ஆனால் இப்போதோ எப்போதெல்லாம் வருகிறதோ அப்போது மட்டும் பணம் தரும் மெஷினாகி விட்டது” என எள்ளலுடன் கூறினார்.

மல்லையாவுக்கு ஒரு நீதி! எனக்கு ஒரு நீதியா?

ஏற்கெனவே பணமுடக்கத்தால் அவதிப்பட்டு வரும் பாமர மக்கள், ஸ்டேட் பாங்க் வங்கி மல்லையாவுக்கு கொடுத்த பல கோடி ரூபாய் கடனை ரத்து செய்ததாக வெளியான செய்தியை அடுத்து மேலும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் அந்த செய்தியின் மீது கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடன் பற்றிய குறிப்புகளைத்தான் ஸ்டேட் பாங்க் தன்னுடைய ஆவணங்களில் இருந்து எடுத்துள்ளது என்றார். இது குறித்து ஸ்டேட் பாங்குக்குக் கடிதம் எழுதிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த துப்புரவாளர் பாவுராவ் சோன்வானே என்பவர், “மல்லையா போன்ற ஏழைகளின் கடனை ரத்து செய்ததைப் போலவே நான் உங்களிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனையும் ரத்து செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பாவுராவின் இந்த தடாலடி கடிதத்துக்கு சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர் வங்கி அதிகாரிகள்.

- ஐஷ்வர்யா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close