Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கான்பூர் ரயில் விபத்து: டிரைவர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிப்பு!

ரயில் விபத்து

கான்பூர் ரயில் விபத்துக்கு டிரைவர்கள் மது அருந்தி விட்டு ரயிலை இயக்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இரு நாட்களுக்கு முன் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் 150 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளில் மிகப் பெரிய ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து ஆராய உடனடியாக கமிட்டி அமைக்கப்பட்டது. கிழக்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பி.கே. ஆச்சார்யா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்துக்குள்ளான ரயிலை ஜானக் சர்மா, பிரமேஷ் புரோகித் ஆகியோர் இயக்கியுள்ளனர். ரயிலை இயக்கும்போது இருவரும் மது அருந்தி இருந்தாக ரயிலின் கார்ட் அஜய் ஸ்ரீவஸ்த்தவா, விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ரயிலின் கார்ட் ஸ்ரீவஸ்த்தவா உள்ளிட்ட அனைவரது சாட்சியமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலை இயக்கிய இரு டிரைவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. 

ரயிலின் கார்ட் மட்டுமல்ல, ஜான்சி ரயில்வே டிவிஷனைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட  41 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ரயில் பயணிகளிடமும் விசாரணைக் குழுவிடம் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பயணிகள் அளித்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான அறிக்கை ரயில்வே அமைச்சகத்திடம் ஒரு மாதத்தில் ஒப்படைக்கப்பட்டு விடும். 

அதே வேளையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் ரவீந்தர பஸ்வான், 'தனது ரயில்வே கேட்டை கடக்கும்போது ரயிலின் வேகத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. சாதாரண வேகத்தில்தான் சென்றது' என தெரிவித்திருக்கிறார். ஆனால், ஈஸ்வர்தாஸ் என்ற ரயிவ்வே ஊழியர் 'அதிகாலை 3.01 மணிக்கு ரயில் அதிவேகத்தில் சென்றதை பார்த்ததாகவும், அதனால் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் வழக்கத்துக்கு மாறான முறையில் அதிக ஆட்டம் கண்டதாகவும்' விசாரணையில் கூறியிருக்கிறார். 

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை தெரிய வந்து, அவசர பிரேக்கை பயன்படுத்தியிருந்தாலும் ரயில் கவிழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விபத்தையடுத்து ஜான்சி ரயில்வே டிவிஷனைச் சேர்ந்த முக்கிய உயர்அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். ஜான்சி டிவிஷனல் மேலாளர் சந்தோஷ் அகர்வால் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சீனியர் டிவிஷனல் மெக்கானிக்கல் இன்ஜினீயர் நாவக் தலீப் உள்ளிட்ட 5 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ