Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுர்ஜாத் தேவி கோயில் நிலம் வழங்கிய இஸ்லாமிய ஜமாத்!

ஜாட் கோயில்'

ஸ்லாமிய சமுதாயத்தினர் தானமாக வழங்கிய இடத்தில், ஜாட் இனத்தவர் கட்டிய கோயில் ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்ட கிராமத்தில்,மத நல்லிணக்கத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகான கிராமம் கொலிடா. இக்கிராமத்தில் ஜாட் இனத்தவரின் ஒரு பிரிவினர் போற்றி வழிபடும் 'சுர்ஜால் தேவி' கோயில் கட்டுவதற்கு, இஸ்லாமிய சமுதாயத்தினர் 34 ஆயிரத்து 848 சதுர அடி நிலத்தை மனமுவந்து தானமாக வழங்கியுள்ளனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இஸ்லாமிய சமுதாயத்திற்குச் சொந்தமான இந்த நிலம், கொலிடா கிராமத்தில் பல ஆண்டுகளாக உபயோகம் இல்லாமல் கேட்பாரற்றுக் கிடந்த இடுகாடு நிலமாகும்.அப்பகுதியில் ஜாட் இனத்தவர் அம்மன் கோயில் கட்டுவதற்கு போதிய நிலம் இல்லாமல் தவிப்பதை அறிந்த இஸ்லாமியர்கள், தங்களுக்குள் கலந்தாலோசனை மேற்கொண்டு அந்த நிலத்தை, கோயில் கட்டுவதற்காக வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து கொலிடா கிராமத்தின் முன்னாள் தலைவர் சிவ்பால் சிங் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 17 ஆயிரம் சதுர அடி நிலத்தை, கோயில் கட்டுவதற்காக இஸ்லாமியர்கள் அளித்தனர். அந்த இடத்தில் நாங்கள் சிறிய கோயில் கட்டினோம். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், கோயிலை புனரமைத்து விரிவுபடுத்தும் பணியை நாங்கள் தொடங்கினோர். அப்போது எங்களுக்கு கூடுதல் நிலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் மேலும் ஒரு 8 ஆயிரம் சதுர அடி நிலம் கொடுத்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் மீண்டும் கோயில் கட்டும் பணிகளுக்காக எஞ்சிய 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை வழங்கினர். நாங்கள் நிலம் வேண்டும் என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களாகவே முன்வந்து கோயில் கட்டுவதற்கு நிலம் அளித்துள்ளனர். இங்கு,  அனைத்து மதத்தினரிடையேயும் மிகச் சிறப்பான சகோதரத்துவம் நீடிக்கிறது. கோயில் விரிவுபடுத்தப்பட்ட பின்னர், அதன் தொடக்க விழாவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் "  என்று தெரிவித்தார்.

கோயில் நில ஒப்படைப்புகொலிடா கிராம துணைத் தலைவராக உள்ள முகமது இஷாக் கூறுகையில், "சுமார் 50-60 ஆண்டு காலம், பழமையான அந்த இடுகாட்டு நிலம், எவ்வித பயன்பாடும் இன்றி கிடந்தது.ஜாட் இனத்தவர், அங்குள்ள கோயிலை விரிவுபடுத்த அவர்களுக்கு கூடுதல் நிலம் தேவை என்பதை நாங்கள் அறிந்து, எங்கள் சமுதாயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதன் பின்னர் அந்த நிலத்தை அந்தக் கோயிலுக்கு வழங்க முடிவு செய்தோம்" என்றார்.

புதுப்பிக்கப்பட்ட கோயில் திறப்பு விழாவில் சிகார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷ் மஹாரியா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்கள் சகோதரத்துவத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள்" என்று கருத்து தெரிவித்தார்.

கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் நிலம் வழங்கியதை அறிந்த சிகார் மாவட்ட ஆட்சியர் குஞ்ச் புகாரி குப்தா, "இஸ்லாமியர்களின் நல்லெண்ண நடவடிக்கை பாராட்டுக்குரியது. இம்மாவட்டத்தில் இரு சமுதாய மக்களும் எப்போதும் சுமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களிலும், அம்மாவட்ட மக்களின் பெருந்தன்மையான கருத்துகள் வெளிப்படும்" என்று கூறினார்.

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்தியாவில், மொழியால், மதத்தால், உடையால், உண்ணும் உணவால் மக்கள் மாறுபட்ட பழக்க, வழக்கங்களைக் கொண்டிருந்தாலும், அனைவரும் ஒற்றுமை உணர்வோடும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறோம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ராஜஸ்தானின் சிகார் மாவட்ட மக்கள் திகழ்கிறார்கள்.

-சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ