Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருத்துக்கணிப்பு: மோடி கேட்ட கேள்விகளும், கேட்க மறந்த கேள்விகளும்!

மோடி

 பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கறுப்புப் பண முதலைகள் துயரப்பட்டார்களோ இல்லையோ சாமான்ய மக்கள் மிகவும் துயரப்பட்டார்கள். தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்து நொந்து போயினர். வங்கியில் போட்ட பணத்தை அன்றாடத் தேவைக்காக எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த துயருக்கு ஆளாகியுள்ளனர். 
 வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்புதல் போன்றவை  இன்னும் இயல்புக்குத் திரும்பாத நிலை நாடு முழுவதும் நீடிக்கிறது. வங்கி கவுண்டர்களிலும் ஏ.டி.எம் மையங்களிலும் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது மொபைல் ஆப்-ல், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து,  மக்களின் கருத்துகளை கேட்டறியும் வண்ணம் பத்து கேள்விகள் கொண்ட ஒரு அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை  வெளியிட்டார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையைப் பற்றி ஆதரவான கருத்துகளும், மாற்று சிந்தனைகளையும் கேட்டறியும் வகையில்  அந்த அறிவிப்பு இருந்தது. பிரதமர் அறிவித்த ஓரிரு நாட்களிலேயே ஆப்பிள் ஆப்ஸ்டோரில் அதிகம் தேடப்பட்ட ஆப், அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் என இரண்டு இடங்களையும் பிரதமரின் ஆப் பெற்றது. இதேநிலைதான் கூகுள் ஆப்ஸ்டோரிலும். 
அப்படி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன…

கறுப்பு பணம் இந்தியாவில் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கறுப்புப் பணம் மற்றும் ஊழல் காரணமாக உருவாகும் தீமையை எதிர்த்துப் போராடி அதை அழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

கறுப்புப் பணத்திற்கு எதிராக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

ஊழலுக்கு எதிராக மோடி அரசு எப்படி செயல்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்கள்?

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை பற்றி உங்கள் எண்ணம்?

அரசின் இந்தத் தடை நடவடிக்கையால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் குறையும் என்று நினைக்கிறீர்களா?

இந்தத் தடையால் சாமான்ய மக்களுக்கு உயர்கல்வி, மருத்துவம் போன்றவை  சென்றடையும் என்று கருதுகிறீர்களா?

இந்த கறுப்புப் பணத்தை அழிப்பதற்கான போராட்டத்தில் ஏற்படும் துயரங்களை நீங்கள் பொருட்படுத்திக் கொள்கிறீர்களா?

ஊழல் எதிர்ப்புவாதிகள் இதை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிரதமர் மோடிக்கு நீங்கள் ஏதாவது பரிந்துரை, யோசனை கூற விரும்புகிறீர்களா?

இந்த 10 கேள்விகள் பிரதமரின் ஆப்-ல் கேட்கப்பட்டிருந்தது. 

5 லட்சம் பேர் பங்கேற்பு! 93 சதவிதம் பேர் ஆதரவு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கருத்துக்கணிப்பில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தியாவின் 2000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். இந்த சர்வேயின் முடிவுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார். சர்வேயில் பங்கேற்ற 5 லட்சம் பேரில் 93 சதவிதம் பேர், மோடியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவுகளுடன் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது:

”இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வேயில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைக் கூறிக் கொள்கிறேன். மக்களின் கருத்துகளையும், அவர்களின் உள்நோக்கு சிந்தனைகளையும் படிக்கும்போது திருப்தி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வே குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிபிஐ மூத்த தலைவர் டி ராஜா ஆகியோர் கருத்து கூறுகையில்,” கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இந்த சர்வேயில் பங்கேற்கவில்லை” என தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ராஜ்ய சபாவில் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அதெல்லாம் சரி, மக்களிடம் மோடி கேட்காத கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் மோடியிடமே எழுப்புவோம்!

அறிவிப்பு வெளியாகி 15 நாட்களாகியும், மக்கள் பணத் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகிறீர்களா?

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா? தொழில், வர்த்தகம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதா?  

உங்கள் பணத்தை மாற்றிக் கொள்ள, அல்லது எடுக்க வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முன்பு எவ்வளவு மணி நேரம் நீங்கள் காத்திருந்தீர்கள்? 

பணம் இல்லாத பரிவர்த்தனையை அறியாதவர்கள் என தனிப்பட்ட முறையில் மோடி எத்தனை பேரை அறிவார். 
உங்கள் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டு, ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிவிப்பால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தீர்களா? 

அன்றாடம் சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் சாமானிய மக்கள், குறிப்பிட்ட சம்பளத்தில் வாழும் நடுத்தர மக்களின் நிலையை உணர்ந்தீர்களா? 

இதுபோன்ற முக்கியமான கேள்விகளையெல்லாம் உங்களுக்கு வசதியாக கேட்க மறந்து விட்டீர்களே மிஸ்டர் பிரதமர்?

 - முரளி சு,

மாணவப் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ