Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 முக்கிய தலைவர்கள் சுட்டுக்கொலை... முடிவுக்கு வருகிறதா மாவோயிஸ்ட் ஆபரேஷன்?

டவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில், ஆதிவாசி, பழங்குடியின மக்களின் நலன் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்லி கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள் மாவோயிஸ்ட்கள். வனத்துறை அலுவலகங்களுக்கு தீ வைப்பு, வனத்துறை வாகனங்கள் எரிப்பு, கே.எப்.சி. உள்ளிட்ட பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் என தொடர்ச்சியான தாக்குதலால் நிலை குலைந்தது கேரளா.

"பழங்குடியினர் நலனைக் காக்க, ஆயுதமேந்திய போராட்டம் தான் ஒரே வழி என்ற அடிப்படையில், மாவோயிஸ்ட் உள்ளிட்ட சில அமைப்புகள் ஒன்றிணைந்து, தமிழக, கர்நாடக, கேரளா மாநிலங்கள் இணையும் முச்சந்திப்பான நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆயுதமேந்திய விவசாய புரட்சி தான் பழங்குடியினர் நலனை காக்கும் என்பது தான் அந்த இயக்கத்தின் முழக்கம்," என இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படையாகவே எச்சரித்திருந்தது உளவுத்துறை. அதன் பின்னர் தான் துப்பாக்கிச்சூடு, தாக்குதல்கள் அதிகரித்தன.

"ஆதிவாசிமக்கள் இங்கு பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்ற விவசாய பூமிகளை உருவாக்கியவர்கள் ஆதிவாசிகள் தான். ஆனால் அவர்களுக்கான இடத்துக்கு பட்டா கொடுக்காமல் அரசு ஏமாற்றி வருகிறது. வனத்துறையினர் கஷ்டப்படும் ஆதிவாசி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் இதற்கு துணையாக இருக்கின்றனர். ஆதிவாசிகளுக்கு சொந்தமான இடத்தில் எல்லாம் சொகுசு விடுதிகள் அமைக்க அரசு அனுமதிக்கிறது. ஆதிவாசிகளை அழித்து, பணம் படைத்தவர்கள் உல்லாசமாய் இருக்க அரசு பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் ஆதிவாசி மக்களுக்கு இங்கு கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. ஆதிவாசிகளின் குழந்தைகள் ஏராளமானோர் சத்து குறைபாடு காரணமாய் இறந்து போனார்கள். அதெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்த பகுதிக்கு சொந்தக்காரர்கள் ஆதிவாசிகள். ஆனால் அவர்களை வெளியேற்றி மலை, காடுகளை வெளியாட்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் திறந்து விட்டு சம்பாதிக்கிறது அரசு. இதில் கிடைக்கும் பணம் கூட ஆதிவாசிகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை. இதனால் தான் இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம். கடும் நெருக்கடியில் உள்ள ஆதிவாசிகள் நலனைக் காக்க இந்த போராட்டத்தை துவங்கியுள்ளோம்.  அரசு பயங்கரவாதம் இந்த பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய போராட்டங்கள் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும். எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து, பொதுமக்களாகிய நீங்களும் எங்களோடு சேர்ந்து போராட வேண்டும்," என போராட்டங்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருந்தனர் மாவோயிஸ்ட்கள்.

"நாங்கள் இங்கு மட்டுமில்லை. தமிழகம், கர்நாடகத்திலும் நாங்கள் இருக்கிறோம். அங்கும் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தண்ணீர், மண், காடு இவற்றுக்கான அதிகாரம் அங்குள்ள மனிதனுக்கு தான்.  அதனை நோக்கி போராடுவோம்" என்றும் மாவோயிஸ்ட்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து கேரளா மாநிலத்தில் அம்மாநில அதிரடிப்படையான தண்டர் போல்ட் போலீஸார் மூலம் தொடர் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தது. மூன்று மாநில பிரச்னை என்பதால் மத்திய உளவு அமைப்பான, ஐ.பி. இதில் கவனம் செலுத்தி வந்தது. இந்த நடவடிக்கையின் பலனாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ரூபேஷ், சைனா, அனூப் உள்ளிட்ட 3 மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை கோவை அருகே க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஆனாலும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் குப்பு தேவராஜ், மாநிலக்குழு உறுப்பினர் அஜீதா, கர்நாடகா மாநில நிர்வாகி சோமன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையையொட்டிய வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாகவும், குப்பு தேவராஜ், அஜிதா உள்ளிட்டோரும் அங்கு இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தமிழக கேரளா எல்லையில் உள்ள கருளாயி வனப்பகுதி, படுக்கா என்ற இடத்துக்குச் சென்ற கேரள மாநில 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், அங்கு தங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் சுற்றி வளைத்தனர். முதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரான குப்பு தேவராஜை, டார்கெட் செய்த போலீஸார், முதல் சூட்டில் குப்பு தேவராஜையும், பின்னர் அஜிதாவையும் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் மேலும் ஒருவரும் கொல்லப்பட்டார். அவர் சோமன் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இறந்தவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மிக முக்கிய நிர்வாகிகள் என கேரளா போலீஸார் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்களை பற்றி தகவல் அளித்தால் 10 லட்சம் பரிசு அளிப்பதாக ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநில அரசுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- கே.சின்னதுரை

படங்கள் : தி.விஜய்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close