Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் நிர்வாகத் தோல்வியால் நாடு பேரழிவுக்கு சென்றுவிடும்: திருநாவுக்கரசர்

பிரதமர் மோடியின் நிர்வாகத் தோல்வி நாட்டை பேரழிவுக்கு தள்ளிவிடும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அபாய சங்கு ஊதியிருக்கிறார் என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து வரும் 28-ம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்து போராடி வருகின்றனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது பிரதமர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள பா.ஜ.க. தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உடல் நலமில்லாத நிலையிலும் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்து பிரதமர் மோடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பேரழிவை கடுமையாக விமர்சனம் செய்தார். தமது இயல்பு நிலைக்கு மாறாக தமது உரையில் திட்டமிட்டு நாட்டில் கொள்ளை நடைபெறுவதாகவும், இது மக்களது பணத்தை அபகரிக்கும் முயற்சி என்றும், இத்தகைய நிர்வாகத் தோல்வி நாட்டை பேரழிவுக்கு தள்ளிவிடும் என்றும் அபாய சங்கு ஊதியிருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க.வினர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பிரதமரின் அறிவிப்பு வந்தது முதற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று ராகுல்காந்தி போராடி வருகிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத முடிவை கண்டித்து நவம்பர் 28-ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டுமென்று தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்துள்ளன. இதனடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அதே நாளில் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது. மாவட்டங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து, எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ