Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மைனர் மகனுக்கு எம்.எல்.ஏவின் பென்ஸ் கார் பரிசு!

பென்ஸ்

கையில் 500 ரூபாய் வைத்துக் கொண்டு மாற்ற முடியாத சூழலில் மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கையில், இந்த அரசியல்வாதிகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல காரியங்களில் ஈடுபடுகின்றனர். முன்னாள் அமைச்சர் ஒருவர் மகளுக்கு ரூ. 500 கோடியில் திருமணம் செய்து வைக்க, அவரைத் தொடர்ந்து தனது மகனின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் மற்றொரு எம்.எல்.ஏ. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அந்த எம்.எல்.ஏ தனது மகனுக்கு பிறந்த நாள் பரிசாக விலை உயர்ந்த பென்ஸ் காரை வாங்கி சர்ஃப்ரைஸ் கிஃப்டாக அளித்துள்ளார். 

மும்பை காட்கோபர் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆக இருப்பவர் ராம் ஆர். கடம். இவரது மகன் அம் ஆர். கடம். பன்னிரண்டு வயது சிறுவன் பள்ளியில் படித்து வருகிறான். எம்.எல்.ஏவுக்கு மகன் மீது அலாதி பாசம். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மகனுக்கு பிறந்த நாள் வந்தது. மகனின் பிறந்த நாளில் அவனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் ஒன்றை வாங்கி பரிசளிக்க நினைத்தார் எம்.எல்.ஏ. என்ன பரிசு என்பதை சஸ்பென்சாகவும் வைத்திருந்தார். நவம்பர் 19-ம் தேதி அதிகாலையில் எழுந்த அம் ஆர். கடம் குளித்து முடித்து புத்தாடை அணிந்து  சுவாமி கும்பிட்டு விட்டு, பெற்றோரிடம் ஆசி வாங்கினார். இந்த சமயத்தில் மகனை வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த எம்எல்ஏ உனது பிறந்த நாளுக்கு தந்தையின் பரிசு எனக் கூறி விலை உயர்ந்த பென்ஸ் காரின் சாவியை வழங்கினார். அம் ஆர் கடம் தந்தையின் பரிசால் மகிழ்ச்சியில் திளைத்தார். அந்த காரின் மதிப்பு 30 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

மகன் பென்ஸ் காருடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவு செய்து, 'எனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அன்பு மகனுக்கு நான் வழங்கிய பிறந்த நாள் பரிசு இது'' என கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ அதுவும் மைனர் மகனுக்கு  நாட்டில் நெருக்கடியான சூழல் நிலவுகையில், விலை உயர்ந்த பென்ஸ் காரினை பரிசாக வழங்கியது ட்விட்டர் வாசிகளை உலுக்கி எடுத்து விட்டது. இதையடுத்து ராம் கடம் மீது பாயத் தொடங்கினர்.

புகைப்படத்தில் இருக்கும் சிறுவனைப் பார்த்தால் மைனர் போலத் தெரிகிறது. சாலையோரத்தில் படுப்பவர்கள் கவனமாக இருக்கவும். இன்னொரு மோசமான விபத்தைக் காண மும்பை தயாராக இல்லை' என ஒரு ட்விட் தெரிவிக்கிறது. 'உங்கள் மகன் போலீஸ் லாக்அப்பிற்கு செல்ல நீங்களே காரணமாக இருக்காதீர்கள். பணம் இருக்கிறது என்பதற்காக ஆட்டம் போட வேண்டாம்' என்கிறது மற்றொரு ட்விட். பொறுப்பான தந்தையாக இருக்க வேண்டும். சிறுவர்களுக்கு கார் பரிசளிப்பது தவறான முன்னுதாரணம். கார் ஒன்றும் பொம்மை அல்ல. சாலையில் போவோர் வருவோர் கவனம் என்கிறது மற்றொரு ட்விட். 'பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே மகனுக்கு பிறந்த நாள் பரிசாக விலை உயர்ந்த பென்ஸ் கார் வாங்கிக் கொடுத்து, அதனை ட்விட்டும் செய்கிறார். உங்கள் கட்சித் தலைமை பார்த்துக் கொண்டிருக்கும்' என்கிறது இன்னொரு ட்விட். 

பிறந்த நாள் என்றால் நமக்கு ஒரு சாக்லேட், புதிய உடை கேக்குடன்  நமக்கு முடிந்து விடும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு விலை உயர்ந்த கார்களை பிறந்த நாள் பரிசாக வழங்குவது வழக்கமாகி விட்டது. இதற்கு முன் மும்பை  மீரா பயந்தரைச் சேர்ந்த நரேந்திர மேத்தா என்ற பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தனது மனைவிக்கு விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கி பிறந்த நாள் பரிசாக அளித்தார். இந்த காரின் மதிப்பு ஐந்தரை கோடி ரூபாய். அந்த காரை ஓட்டிய மனைவி விபத்தில் சிக்கினார். லம்போகினியில் அவரது மனைவி மேற்கொண்ட முதற் பயணமே விபத்தில் முடிந்தது.

- எம்.குமரேசன்


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close