Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வெளியேறினேன்...வேடிக்கை பார்த்தார்கள்!' - விருது பெற்ற பெண் பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

"யாவருக்கும் எந்நிலையிலும் யாரும் கீழ்மேல் இல்லை” சுதந்திரம் என்பதை இப்படிச் சுருங்கச் சொல்லலாம்.1947 தொடங்கி சுதந்திரம் என்பதற்கான விடை வெவ்வேறாக இருந்துள்ளது. 21-ம் நூற்றாண்டினைக் கருத்துச் சுதந்திரத்துக்கான காலம் என்று சொல்லலாம். குறிப்பாக 2013 தொடக்கத்தில் இருந்து உள்நாட்டு அளவில் அதிகம் விவாதிக்கப்பட்டது கருத்துரிமை அரசியல்தான். தங்கள் கருத்துகளை முன்வைத்தற்காக எழுத்தாளர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் சாமானியர்கள் மீதும் சட்டத்தின் அடிப்படையிலும் சட்டத்துக்குப் புறம்பாகவும் என பல்வேறு தாக்குதல்கள் இன்றளவும் தொடர்ந்து நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன. இன்று நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியம் சந்தித்ததும் கருத்துச்சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட அப்படி ஒரு தாக்குதலைதான். 

சத்தீஸ்கரின் பாஸ்டார் பகுதியிலிருந்து ’ஸ்க்ரால்.இன்’ என்னும் ஆன்லைன் செய்தி நிறுவனத்துக்காக செய்திகளை அளித்து வருபவர் மாலினி சுப்ரமணியம். சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் சட்டீஸ்கர் பகுதி தலைவராக இருந்தவர்தான் மாலினி. ஆதிவாசி மக்களின் இருப்பிடமான பாஸ்டார், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் பகுதி. அந்தப் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப் படையினர், ஆதிவாசி மக்களுக்கு எதிராக மனித உரிமை அத்துமீறல்களில் ஈடுபடுவதைதான் அவர் செய்தியாக அளித்துக் கொண்டிருந்தார். 

அந்தப் பகுதியில் இருக்கும் மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்த அரசியல் அமைப்பு ஒன்றும் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து இயங்கி வந்தது. கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலினியின் வீட்டின் மீது கல்லெறிந்தும் நெருப்புத் துண்டுகளை வீசியும் மறைமுகத் தாக்குதல் நடத்தினர். அவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதுதான் அவர்களின் தாக்குதலுக்கு காரணம். இத்தனைக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த அனைவருமே தொடக்கத்தில் மாலினியுடன் நட்புடன் இருந்துள்ளார்கள். ஆனால், அவர் பாதுகாப்புப் படையினரைப் பற்றி எழுதத் தொடங்கியதிலிருந்துதான் தாக்குதல்கள் தொடங்கியிருக்கிறது. 

“பாதுகாப்புப் படையினர் சட்டத்தைத் தவறாகக் கையிலெடுத்துக் கொண்டு அங்குள்ள ஆதிவாசி மக்களிடம் அத்துமீறத் தொடங்கினர். அவர்களைக் குற்றவாளிகளாக்கி போலீசில் சரணடைய வைத்தனர். மக்களை பல்வேறு வகையில் துன்புறுத்தினார்கள். முக்கியமாக ஆதிவாசிப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது. இவை அத்தனையும் செய்தது பாதுகாப்புப் படையினர்தான். இதைச் செய்தியாக்கியதால் சக நிருபர் ஒருவர் கொல்லப்பட்டார், இங்குள்ள வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டது. ஒரு வக்கீல் மீது ஆசிட் வீசினார்கள். என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களது அச்சுறுத்தலால் என் வீட்டு உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்யச் சொன்னார். நான் வீட்டை விட்டு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டேன். பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுப்பதால், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களையும் அதிகாரிகளும் அந்த அரசியல் அமைப்பும் துன்புறுத்தத் தொடங்கியது. ஆனால் இந்திய அரசு இது அத்தனையும் வேடிக்கை பார்த்தது” என்று மாலினி கூறியிருக்கிறார். 

மாலினியின்  செயல்பாடுகளைப் பாராட்டி நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுமம் 2016-ம் ஆண்டுக்கான சர்வதேசப் பத்திரிகைச் சுதந்திர விருதை வழங்கியுள்ளது. துருக்கி, எல்சால்வடார், எகிப்து உள்ளிட்ட நாட்டின் பத்திரிகையாளர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.மாலினி தற்போது பாதிப்பு எல்லைக்கு வெளியேதான் வசித்துவருகிறார். ஆனால் அந்த ஆதிவாசி மக்களுக்கான இவரது பணிகள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மாலினிக்கு வாழ்த்துகள்.

-ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close