Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாடிப் படில ஏறி ஏறி எவரெஸ்ட் சிகரமே ஏறிட்டேன்!’ 6 வயது சிறுவனின் சாகசம்

எவரெஸ்ட்

வரெஸ்ட் சிகரத்தின் உலகமே வியக்கும் அற்புதம். அதில் ஏறி சாதனை செய்வது என்பது பலரின் கனவு. அதை ஏறும்போது பல அடுக்குகளைக் கடந்து செல்ல வேண்டும். அதில் முக்கியமானது 'எவரெஸ்ட் பேஸ் கேம்ப்'. அதைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசை ஆறு வயதுச் சிறுவனுக்கு ஏற்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆசைப்பட்டதோடு நில்லாமல் தான் நினைத்ததை சாதித்துக்காட்டி அனைவரும் அசத்தியுள்ளான் அந்தச் சாகச சிறுவன். அதுமட்டுமல்ல, 'உலகின் மிக உயரமான மலைகள், குறிப்பாக, தான்சானியா நாட்டில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொடுவேன்' என்று சபதமும் எடுத்திருக்கிறான் அந்த வீரதீர வாலுப்பையன் அத்வைத் பார்டியா!

புனே நகரைச் சேர்ந்த அத்வைத், ஒன்றாம் வகுப்புப் படிக்கும் சுட்டி. அவன் அம்மா பாயலுக்கு, மலை ஏறும் சாகசப் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, அங்குள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை சென்றடைய வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசை. அதற்காகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, 'அம்மா நானும் உங்ககூட வர்றேன்' என்று வந்து நின்றான் அத்வைத்.

கடைக்குப் போனால் கூட வருவேன் என்று அடம்பிடிப்பது போல இந்தப் பயணத்தை நினைத்துக்கொண்டான் தன் மகன் என்று நினைத்த பாயல், அவனைச் சமாதானப்படுத்தினார். 'இது மிகவும் ஆபத்தான பயணம். பெரியவர்களாலேயே முடியாதது. காடுகளைக் கடக்கவேண்டும், மலைகளில் ஏற வேண்டும், குளிரைத் தாங்கவேண்டும். நீ சிறுவன்... உன்னால் முடியது. நீ வளர்ந்ததும் செல்லலாம்' என்று எடுத்துக்கூறினார்.

ஆனால் அனைத்தையும் கேட்ட பிறகும், 'நான் வந்தே தீருவேன்' என்று அத்வைத் சொன்னபோது, அது பிடிவாதம் அல்ல, உறுதி என்று புரிந்தது பாயலுக்கு. 'இமய மலையில் ஏற வேண்டும் என்றால் உடல் அதற்கான ஆரோக்கியத்துடன் ஃபிட் ஆக இருக்க வேண்டும். நீ தினமும் பயிற்சிகள் மேற்கொண்டு உன் உடலை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உன்னை அழைத்துச் செல்வேன்' என்று சொன்ன அம்மாவிடம், வேகமாகத் தலையசைத்தான் அத்வைத்.

ரன்னிங், ஜாகிங், தினமும் 100 முறை மாடி படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது என ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் பயிற்சிகள் மேற்கொண்ட அத்வைத், 'நான் மலையேறத் தகுதியானவன்' என்று நிரூபித்துக்காட்டினான். அத்வைத், தன் மூன்று வயதிலேயே 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓடியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

13 நாட்கள் கொண்ட எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணத் திட்டத்தை புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு சாகச ட்ரெக்கிங் நிறுவனம் பொறுப்பேற்றது. கடந்த அக்டோபர் 26-ம் தேதி நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிளம்பியது மலையேறும் குழு.

எவரெஸ்ட் மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,900 அடி உயரத்தில் இருக்கும் லுக்லா என்ற கிராமத்தில் இருந்து தொடங்கிய கடினப் பயணத்தில், தன் பிஞ்சுக் கால்களின் முதல் அடித்து எடுத்து வைத்து முன்னேறினான் அத்வைத். தூத் கோசி எனும் நதியைக் கடந்து, மரங்கள் அடர்ந்த காட்டுவழியில் மலையில் ஏறி, பனி படர்ந்த வழிகளில் தடம் பதித்து... சுமார் 17,593 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை நவம்பர் 3-ம் தேதி சென்றடைந்தது அந்தக் குழு. வெற்றிகரமாக தம்ப்ஸ் அப் காட்டினான் அத்வைத்.

குழுவில் ஆறு வயதே ஆன அத்வைத் உடன், 11 வயது வீரப்பிரதாப் ராஜே போஸ்லேயும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 'மலை ஏற ஏற வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமானது. ஆக்ஸிஜன் குறைந்து, சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது' என்று சிறுவர்கள் மிரட்சியுடன் சொல்ல, 'இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு, இந்தச் சிறுவர்கள் இருவரும் எங்களோடு வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது' என்று பரவசமாகிறார் அத்வைத் அம்மா பாயல்.

மிகச் சிறிய வயதில், குளிர்காலத்தில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை சென்றடைந்த சிறுவன் என்ற சாகசப் பெருமை, இப்போது அத்வைத்திடம். அதனால் கின்னஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் அத்வைத் பெயர் இடம்பெற விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சிகரம் தொட்ட சின்னஞ்சிறு அடிகள்!.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

- என்.மல்லிகார்ஜுனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close