Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்தியா வல்லரசாவதை விட, மகிழ்ச்சியான நாடாக இருப்பதே என் விருப்பம்!’ - ஜேஆர்டி டாடா நினைவு தின சிறப்புப் பகிர்வு

 டாடா

டாடா குழும நிறுவனங்கள்... எவற்றுக்கு யார் யார் தலைவர்கள் தெரியுமா..? புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

டாடா எனும் பெரும் ஆலமரம் இந்தியாவுக்குப் பல நன்மைகளைச் செய்திருக்கிறது. டாடா குழுமம் இந்தியாவுக்குள் நடத்தாத புரட்சியே இல்லை. முதன்முதலாக இந்தியாவில் எஃகு ஆலையைத் தொடங்கியது முதல் விமான சேவை தொடங்கியது வரை எனப் பல விஷயங்களைத் தொழில்துறையில் முதன் முதலாகச் செய்த பெருமை டாடாவுக்கு உண்டு. 

1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம், அதன்பிறகு ஆலமரமாய் வளர்ந்தது. டாடா குடும்பத்தின் வாரிசுகள் அடுத்தடுத்து தலைவராகவந்து அதனை ஆண்டதோடு மட்டுமல்லாமல் வளர்க்கவும் செய்தார்கள். இன்று டாடா குழுமத்துக்குச் சொந்தமாக 114 நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல உலகம் முழுவதும் தொழில்களில் ஈடுபட்டு  வருகின்றன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

டாடாவுக்கு இவ்வளவு பெருமைகள் இருந்தும் டாடா குழுமத்துக்கு ஒப்பில்லாத பெருமை என்றால் அது ஜே.ஆர்.டி டாடா தான். டாடா குழுமத்தின் தலைவராக ஜாம்ஷெட்ஜி முதல், ண்மையில் நீக்கப்பட்ட மிஸ்திரி, மீண்டும் தலைவரான ரத்தன் டாடா வரை என பலர் தலைவர்களாகப் பதவி வகித்துள்ள போதும் ஜே.ஆர்.டி டாடா தான் இன்று வரை டாடாவின் பெருமைக்குரிய தலைவராகப் பார்க்கப் படுகிறார். ஏன் தெரியுமா? 

டாடா குழும நிறுவனங்கள்... எவற்றுக்கு யார் யார் தலைவர்கள் தெரியுமா..? புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா என்பது அவரது முழு பெயர். தனது 34 வயதிலேயே டாடா குழுமத்தின் தலைவராக ஆனார். மிக இளம் வயதில் டாடா குழுமத் தலைவரானவர் இவர்தான். இந்தியாவின் முதன்மையான தொழிலதிபராக வளர்ந்த இவர் பாரிஸில் பிறந்தவர். இவரது தந்தை ரத்தன்ஜி, ஜாம்ஷெட்ஜி டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர். பாரிஸிலேயே தனது பால்ய காலத்தைக் கழித்து வந்தார். 

பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்தில் கல்வி பயின்றிருக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்காக லண்டன் சென்றார். ஆனால், தனது தந்தையின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு வரவேண்டி இருந்தது. லண்டன் சென்று படிக்கும் கனவை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா வந்தவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சம்பளம் பெறாத அப்ரன்டிஸாக சேர்ந்தார். மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். 

அதே சமயம் அவருக்குள் இருந்த தேடல், தொழில் நுணுக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மேலும் வானத்தில் பறக்கவேண்டும் என்பது அவரது இளம் வயது கனவு. அந்தக் கனவை நனவாக்கிக் கொள்ள விமானியாகப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானி என்ற பெருமையையும் அவர் பெற்றார். டாடா குழுமத்தை நிர்வகிக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்ட ஒருகட்டத்தில் டாடா குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர்தான் அவர் விமானி என்பதால் அதிலிருந்து அனுபவத்தை வைத்து இந்தியாவின் முதல் ஏவியேஷன் நிறுவனத்தை 1932-ல் தொடங்கினார். இவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் ‘ஏர் இந்தியா’வாக உருவெடுத்தது. பின்னாளில் அதனை அரசு நாட்டுடமையாக்கியது.  

திறமையானவர்களை அடையாளம் கண்டு டாடா நிறுவனத்துக்குக் கொண்டு வந்து அவர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்தார். இளைஞர்களைத் தனது குழுவில் அதிகப்படுத்தினார். டாடா குழுமம் வளர்ச்சி அடைந்துகொண்டேஇருந்தது. நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவருடைய உதவியுடன் தனது தொழிலை விரிவுபடுத்தினார். அழியாத சாம்ராஜ்யமாக டாடா குழுமத்தை உருவாக்கினார்.

ஏறக்குறைய 53 ஆண்டுகள் டாடா குழுமத் தலைவராக கொடிகட்டிப் பறந்தார். அவர் தலைவராகப் பொறுப்பேற்கும்போது 14 நிறுவனங்களாக இருந்த குழுமம் அவரது 50 வருட உழைப்பில் 97 நிறுவனங்களாக வளர்த்து எடுத்தார். உற்பத்தித் துறையில் எப்போதுமே முதலிடம் பிடிக்கும் வகையில் டாடாவை மாற்றியது முழுக்க முழுக்க இவரே. டி.சி.எஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ் என இன்று டாடாவின் சிம்ம சொப்பனங்களாக மாறியிருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே அவரது அயராத உழைப்பிலும், தீராத தாகத்திலும் உருவானவை. 

டாடா குழும நிறுவனங்கள்... எவற்றுக்கு யார் யார் தலைவர்கள் தெரியுமா..? புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் பிசினஸ் என்றால் மூன்று பேரின் பெயர்களைத்தான் மக்கள் உச்சரிப்பார்கள். அந்த மூன்று பெயர்களில் ஒன்றாக டாடா விளங்குவதற்கு இவர்தான் காரணம். பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய தொழிலதிபர் இவர்தான். 
இவ்வளவு வளர்ச்சியும் பணமும் இருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் சிகரமாக விளங்கியவர் இவர். சமூகத்தின் மீதும், இந்த தேசத்தின் மீதும் அளவில்லா பற்றுகொண்டவர். சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் தொடங்கியது இவர்தான். இதன் மூலம் உதவி தேவைப்படும் மக்களுக்கு மகத்தான சேவை புரிந்தார். பாரிஸில் பிறந்திருந்தாலும் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். "இந்திய நாடு வல்லரசாக வளர்வதைவிட, நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்கிற தேசமாக இந்தியா விளங்கவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்" என்றவர்தான் ஜே.ஆர்.டி  டாடா. 

இத்தகைய மகத்தான மாமனிதரும், இந்தியப் பொருளாதாரத்துக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கும் தனது அளப்பரிய உழைப்பைப் பங்களிப்பு செய்த இவர், தனது 89 வயதில் நவம்பர் 29-ம் தேதி மறைந்தார்.

இந்த நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதோடு, டாடா குழுமத்தின் நோக்கத்தையும், முயற்சியையும் மனதில் கொண்டு தற்போதைய தலைவர்கள் டாடா குழுமத்துக்குப் பணியாற்றுவதுதான் உண்மையிலேயே இந்த மாமனிதருக்கு தரும் அஞ்சலியாக இருக்கும்.

டாடா குழும நிறுவனங்கள்... எவற்றுக்கு யார் யார் தலைவர்கள் தெரியுமா..? புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ