Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எளிமையானது தத்தெடுத்தல் விதிகள்! #FosterCareSponsorship

தத்தெடுத்தல்

இவ்வுலவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே வரம். ஆனால் விபத்து, சூழ்நிலை போன்ற காரணங்களால் பெற்றவர்களே தங்கள் குழந்தைகளை நிராதரவாக விட்டுச்செல்வது துரதிஷ்டவசமானது. அப்படிப் பல குழந்தைகள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்துவருகிறார்கள். இதற்கு குழந்தையைத் தத்தெடுத்தல் ஒரு தீர்வாக அமையும். பெற்றால்தான் பிள்ளை என்றில்லை. குழந்தையில்லாத தம்பதிகள், அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொண்டால், குழந்தையின்மை மருத்துவமனைகளுக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்கும் நிலை மாறும்; ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கும்.

அப்படி அரவணைப்புக்கு ஏங்கி நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள், வீட்டுச் சூழலில் உறவுகளோடு வளர மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை வழங்கியுள்ளன. அவை தத்தெடுப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்கியிருப்பதோடு, குழந்தை பராமரிப்பு ‘ஸ்பான்ஸர்ஷிப்(sponsorship)’ மற்றும் குழந்தை வளர்ப்புக்கான 'ஃபாஸ்டர் கேர் (foster care)’ திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளன.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஸ்பான்ஸர்ஷிப் மற்றும் பாஸ்டர் கேர் திட்டங்கள் செயல்முறைப் படுத்தப்படுகிறது. மாநில அரசு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்கள் வழியாக இந்த இரு திட்டங்களையும் செயல்படுத்துவதோடு, இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளை அரசு தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

இது குறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதாவிடம் பேசியபோது, ''நாட்டில் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் அரசின் பார்வையில் தத்து மையம் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் பராமரிப்பில் உள்ளனர். ஆனால் அந்த இல்லங்களிலேயே இவர்கள் வளர்வது அவர்கள் வாழ்க்கைக்குத் தீர்வாகாது. அந்தக் குழந்தைகள் உறவுகள் கிடைக்கப்பெற்று, குடும்பச் சூழலில் வளரும்போதுதான் அவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

இன்னொரு பக்கம், குழந்தையின்மை இன்று மிகப்பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குழந்தையின்மை சிகிச்சைக்கான மருத்துவமனைகள் அதை தங்களுக்கான லாபமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. குழந்தை பிறக்க மருத்துவ ரீதியாக வாய்ப்பில்லாத தம்பதிகளிடம்கூட, 'மீண்டும் ஒருமுறை முயற்சித்து விடலாம்' என ரூபாய் 30 லட்சம் வரை கட்டணம் கரக்கின்றன.

பெரிய தொகையைச் செலவளித்த பின்னரும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மிகத் தாமதமாக தம்பதிகள் நிதர்சனம் உணர்ந்து, குழந்தையைத் தத்தெடுக்க முன்வருகின்றனர். ஆனால், குழந்தை தத்தெடுப்பிற்கான பெற்றோர் வயது நிர்ணயம் காரணமாக, அந்த வாய்ப்பையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. இவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம்தான், பாஸ்டர் கேர். இதன் மூலம் தத்தெடுக்கும் தம்பதிகளுக்கு வயது வரம்பு இல்லை. இதன் மூலமாக, கைவிடப்பட்ட நிலையில் உள்ள 6 வயது முதல் 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஹோம் கேர் கிடைக்கிறது

மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய இளைஞர் நீதிச்சட்டம் 2015ன் படி, இந்திய அளவில் தத்தெடுப்பவர் விரும்பும் மூன்று மாநிலங்களில், 1 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தலையீடு இன்றி ஆன்லைனில் cara.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து தத்தெடுக்கலாம். விண்ணப்பித்த தம்பதியின் ரத்த வகை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகளை ஆன்லைனிலேயே தேர்வுசெய்து கொள்ளலாம். 4 வயதுக்குள் உள்ள குழந்தையைத் தத்தெடுக்க, தம்பதியின் வயது கூட்டுத் தொகை 90க்குள் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதிகபட்சமாக ரூ. 55 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், முறைகேடாகத் தத்து எடுப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் அளவுக்கு வசதியில்லாத தம்பதியரின் குழந்தைக் கனவை நனவாக்குவதுதான், பாஸ்டர் கேர் திட்டத்தின் அடுத்த சிறப்பம்சம். இத்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு, மாதப் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2000 வழங்கப்படுகிறது. தத்து மையங்களில் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள், இத்திட்டத்தின் கீழ் தத்துக்கொடுக்கப்படுகின்றனர். தத்தெடுப்பவர்கள் தொடர்ந்து அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள்.

சில தம்பதிகள், வயது வரம்பைத் தளர்த்தினால் மட்டும்போதும். பராமரிப்பு பணம் வேண்டாம்... நாங்களே குழந்தையைப் பார்த்துக்கொள்கிறோம்' என்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், அப்படி இரண்டு தம்பதிகள் பணம் பெறாமல் பாஸ்டர் கேர் திட்டம் மூலம் குழந்தையைத் தத்தெடுத்து பராமரிக்கின்றனர். ஆதரவற்ற இல்லங்களில் நூறில் ஒன்றாக வளரும் குழந்தைகள், இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் கிடைக்கப்பெற்று, அங்கு தங்களுக்கான தனித்துவத்தைப் பெறுகின்றனர்'' என்கிறார் கவிதா.

தமிழக அளவில் 'பாஸ்டர் கேர்' திட்டத்தைச் செயல்படுத்தி வரும் திட்ட அலுவலர் மற்றும் வழிகாட்டு, கண்காணிப்பு அலுவலர் இந்திரஜித் கூறுகையில், ''எச்.ஐ.வி. பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒரு புதிய குடும்பம் கிடைக்கப்பெற்று அதன் பராமரிப்பில் வாழ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஸ்பான்ஸர்ஷிப் வழங்குகிறது. இதன் மூலம், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, தமிழக அளவில் 3 ஆயிரத்து 748 குழந்தைகள் ரூ.5 கோடியே 3 லட்சத்து 22 ஆயிரத்து 660 நிதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஃபாஸ்டர் கேர் திட்டத்தில் 2014-15ல் 6 குழந்தைகள், 2015-16ல் 4 குழந்தைகள் பராமரிப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர். ஃபாஸ்டர் கேர் திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால் இன்னும் அதிகமான குழந்தைகள் குடும்பச் சூழலில் வளரும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம்'' என்றார் இந்திரஜித்.

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை... உலகமே உறவுதான் வாருங்கள்!

-பட்டு.
படங்கள்: http://cara.nic.in/

எடிட்டர் சாய்ஸ்

MUST READ