Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 ரூபாய் திருமணம் முடிந்த 48 மணி நேரத்தில் பணிக்குத் திரும்பிய ஐ.ஏ.எஸ். ஜோடி!

500

500 ரூபாயில் திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் ஜோடி, மணமுடித்த 48 மணி நேரத்துக்குள் பணிக்குத் திரும்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். 

இந்தியா பணக்காரர்கள் ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. நாட்டில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்கள் கையில் 50 சதவீத பணம் குவிந்து கிடக்கிறது. பணம் கொட்டிக் கிடப்பவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து  திருமணம் நடத்துகின்றனர். அண்மையில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு 500 கோடி செலவில் திருமணம் நடத்தி வைத்தார். நகைகள் வாங்க 100 கோடி, மணமகள் பட்டுப்புடவை பல கோடி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள், பாலிவுட், டோலிவுட் கலை நிகழ்ச்சிகள், ஹம்பியை மீண்டும் உயிர்பெறச் செய்த செட்கள், பிரமாண்டமான அரங்கங்கள் என ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் பிரமாண்டமாக நாடே மிரள நடைபெற்றது. 

இதற்கிடையே 500, ஆயிரம் நோட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால், தற்போது நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால்,திருமணங்களை அவரவர் தகுதிக்கேற்பக் கூட நடத்த முடியாமல் திருமண வீட்டார் அல்லல்பட்டு வருகின்றனர். அண்மையில் சூரத்தில் 500 ரூபாயில் கூட திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு வந்தவர்களுக்கு டீ மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் எளிமையை மட்டுமே விரும்பி இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் 500 ரூபாயில் தங்களது திருமணத்தை நடத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்டர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்தனா சலோனி. இருவரும் முசோரியில் உள்ள  லால் பகதூர் சாஸ்திரி ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் பயின்றனர். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றனர். கடந்த 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பின், மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கோகத்தில் துணை ஆட்சியராக ஆஷிஷ் வாஸ்டா பொறுப்பேற்றார். சலோனி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். பணி இருவரையும் பிரித்தது. 

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி, ஆஷிஷ்  பிந்த் மாவட்ட ஆட்சியர் இளையராஜா முன்னிலையில் எளிமையாக தனது திருமணம் நடைபெற வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். பிந்த் மாவட்ட ஆட்சியர் இளையராஜா தமிழகத்தைச் சேர்ந்தவர். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இளையராஜா, இளம் தம்பதிகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார். கடந்த திங்கட்கிழமை தேவையான பார்மாலிட்டிகள் முடிவுற்றது. 

இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் இளையராஜா முன்னிலையில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் திருமணம் நடந்தது. பதிவுத் திருமணமாக எந்தவித  ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் வாழ்த்த ஆஷிஷ் வஷிஷ்டரும் சலோனியும் மாலை மாற்றிக் கொண்டனர். திருமணத்தில் இரு வீட்டாரும் பங்கேற்றனர். வெறும் 500 ரூபாயில் திருமணம் முடிந்து விட்டது. 

தற்போது ஆஷிஷ் வஷிஸ்டர் மத்தியப்பிரதேசத்திலும் சலோனி தெலுங்கானா மாநிலத்திலும் பணியாற்றி வருவதால், இருவரையும் அருகருகே மாவட்டங்களில் பணியாற்ற வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிந்த் மாவட்ட ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

திருமணம் முடிந்ததும், ''பணத்ததட்டுப்பாடு காரணமாக பல திருமணங்கள் தடைப்பட்டுப் போகின்றனர். அதனால், மக்கள் மத்தியில் எளிமையை வலியுறுத்தும் வகையில் 500 ரூபாயில் திருமணம் செய்து கொண்டதாக'' இளம் தம்பதியினர் தெரிவித்தனர். 

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திருமணம் முடிந்த 48 மணி நேரத்தில் மீண்டும் அந்த ஜோடி பணியில் சேர்ந்ததுதான். திருமணம் முடிந்த 2 நாட்களில் சிந்தனா சலோனி விஜயவாடா திரும்பி கிருஷ்ணா மாவட்ட ஆட்சியரிடம் ரிப்போர்ட் செய்து விட்டார். திருமணம் முடிந்த 2 நாட்களில் பணிக்கு வந்த சிந்தனா சலோனி கூறுகையில்,''இது எங்களது தனிப்பட்ட வாழ்க்கை. எளிமையாக நடத்த முடிவு செய்திருந்தோம். செய்திருக்கிறோம். எனது கணவரும் நேற்றே பணிக்குத் திரும்பி விட்டார்'' என்றார். 

மாவட்டத் துணை ஆட்சியர் சிந்தனா பஞ்சாப் மாநிலம் ஜலலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயியின் மகள். மிகச்சிறந்த படிப்பாளி. டாக்டருக்கும் படித்துள்ளார். டெல்லி அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் ரேடியாலஜிஸ்டாக பணியாற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு யுபிபிஎஸ்சி தேர்வில் 74-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ். தேர்ச்சி பெற்றார். 

திருமணம் முடிந்து பணிக்குத் திரும்பிய சிந்தனா அலுவலர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.  

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ