Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியர்களின் தேவை 2,000 ரூபாய் நோட்டு அல்ல... 200 ரூபாய் நோட்டுதான்!

200

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய 2 ஆயிரம் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. அதனால், மக்கள் படும் துயரம் அதிகம். பணம் கையில் இல்லாமல் வங்கி வாசல்களில் மக்கள் தவித்து வருகின்றனர். சம்பளம் கிடைத்தாலும் எடுக்க முடியாத நிலை. அனைத்துமே கார்டில்தான் செலவழிக்க வேண்டுமென்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வங்கி வாசலில் சடலத்துடன் காத்திருக்கும் மனிதர். மகள்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் தந்தை தற்கொலை, வங்கியில் கியூவில் நின்று மரணம் என துக்க செய்திகள்தான் அதிகம் கேள்விப்படுகிறோம். 

பொது மக்கள் மட்டுமல்ல இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் பணம் இல்லாமல் உணவுக்காக தவித்து வருகின்றனர். அண்மையில் ராஜஸ்தானில் வெளிநாட்டினர் பணம் இல்லையென்பதால் நடனமாடி பணம் திரட்டிய கதையும் நடந்திருக்கிறது. பொற்கோயில் உள்ளிட்ட குருத்வாராக்கள் ,''மக்கள், வெளிநாட்டினர் குருத்வாராக்களுக்குச் சென்று உணவு அருந்துங்கள். உங்களுக்கு தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது '' எனப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் அளித்துள்ளன. அந்தளவுக்கு நாட்டு மக்கள் கையில் பணம் இல்லாமல் போய் விட்டது. 

கறுப்புப் பணத்தைக் வெளிக் கொண்டு வருவதற்கு 2 ஆயிரம் நோட்டுகளை விட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் கறுப்புப் பணம் 2 ஆயிரம் நோட்டாக மாறி விடாதா?. பணத்தைப் பதுக்குபவர்களுக்கு 2 ஆயிரம் நோட்டு வசதியாகி விடாதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பெங்களுருவில் நேற்று 12 இடங்களில் வருவாய்த்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் 4.7 கோடி ருபாய் புதிய 2 ஆயிரம் நோட்டுகளுடன் பிடிபட்டிருக்கிறது. நவம்பர் 8-ம் தேதி பிரதமரின் அறிவிப்புக்குப் பின் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகள் அடங்கிய மிகப் பெரிய தொகை பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறை.

இதற்கிடையே நாட்டில் 2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக  200 ரூபாய் நோட்டுகள் விட்டிருந்தால் மக்களுக்கு எளிதாக இருந்திருக்கும் என, நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் தெருவில் காய்கறி வாங்கினால் கூடப் பழைய முறையிலான எடைக்கற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக 100, 200, 500 , ஒரு கிலோ 2 கிலோ என்று இருக்கும். நாம் 800 கிராமுக்குக் காய்கறிகள் கேட்டால் 500,200,100 எடை கற்கள் வைத்து வியாபாரி எடை போடுவார். அல்லது 900 கிராம் போட்டால் கூட 500 இரு 200 கிலோ எடை கற்கள் வைத்து எடைபோட்டுக் பொருட்களை வாங்கி விடலாம். 

அதே பாணியைத்தான் தற்போது புதிய நோட்டு விஷயத்திலும் மத்திய அரசு கடைபிடித்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டில் 5,10,20,50,100,500,1000 என நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது 500 ரூபாய்க்கு சில்லறை வாங்கினால் ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அதே நேரத்தில் 200 ரூபாய் நோட்டு இருந்தால் இரு 200 ரூபாய் நோடடுகளும் ஒரு 100 ரூபாய் நோட்டும் கொடுத்து விடலாம். ஆயிரம் ரூபாய்க்கு கூட ஐந்து 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விடலாம். அல்லது ஒரு 500 இரு 200 ஒரு 100 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்க முடியும். இப்படி 200 ரூபாய் நோட்டுப் புழக்கத்தில் இருக்கும் பட்சத்தில் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதற்கு வாய்ப்பே ஏற்படாது. 

தற்போதுள்ள சூழலில் ஆயிரம் நோட்டுகளை அழித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கொடுக்க வேண்டுமானால் இருபது 100 ரூபாய் நோட்டுகள் அளிக்க வேண்டும். இன்று வரை 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்குப் பரவலாக வெளி வரவில்லை. 500 ரூபாய் புழக்கத்தில் இருந்தால் 2 ஆயிரத்துக்கு நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்க வாய்ப்புள்ளது. இன்னும் இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற ஆயிரம் முறை யோசிக்கும் மக்கள் நிறைந்த நாடு. அத்துடன் 200 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கினால், கடைக்காரர் சில்லறைக்கும் எங்கே போவார். 

ரிசர்வ் வங்கிக்கு பொருளாதாரம் தெரிந்திருக்கிறது. ஆனால் அடிப்படை கணக்குத் தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் நோட்டை நிரந்தரமாக மத்திய அரசு அழித்து விட்டு, 2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் விடும் பட்சத்தில் நிச்சயமாக 200 ரூபாய் நோட்டுப் புழக்கத்தில் விட்டால்தான் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்.

- எம்.குமரேசன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ