Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!'  -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும் 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ' ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு ரங்கநாத்தை நன்றாகவே தெரியும். ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ்காந்தியை படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிய சிவராசன், சுபா உள்ளிட்டவர்கள் ரங்கநாத்தின் வீட்டில்தான் அடைக்கலம் ஆனார்கள். நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்காக உதவி செய்யப் போன ரங்கநாத்துக்குக் கிடைத்தது எல்லாம், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் உடலை வாட்டி வதைத்த நோய்களும்தான். ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்கு தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். கொலைக்குப் பிறகான நாட்களை விரிவாகவே மேடைகளில் பேசி வந்தார் ரங்கநாத்.

"பெங்களூருவில் பசவண்ணன் குடியில்தான் என்னுடைய வீடு இருந்தது. அப்போது புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நண்பர் ராஜன் செயல்பட்டு வந்தார். ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் முடிந்த பிறகு, 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, 'எனது நண்பர்களுக்கு வீடு வேண்டும்' என ராஜன் கேட்டார். நானும் சம்மதித்தேன். மறுநாள், ' சி.பி.ஐ நெருக்கடி அதிகமாகியிருக்கிறது. உடனே வீடு வேண்டும்' என அவசரப்படுத்தினார். டிரைவர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர், ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் 6 பேர் என் வீட்டுக்கு வந்தனர். அந்த நேரத்தில், இலங்கையில் நடந்த சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசிய சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், என் வீட்டை போலீஸார் நெருங்கிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், கோணன்னகுண்ட இடத்துக்கு வீடு மாறினோம். அவர்களோடு நானும் சென்றதுதான் மிகப் பெரிய தவறு" என விவரிக்கும் ரங்கநாத், 

கொலையாளிகளான சிவராசன் தலைக்கு பத்து லட்சமும் சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். அன்று ஆகஸ்ட் 17-ம் தேதி. வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தபோது அதிரடிப்படை வீரர்கள் என் வீட்டை வளைத்திருந்தனர். சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயனும் அங்கிருந்தார். சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர். பிறகு, என்ன உத்தரவு வந்ததோ, என் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டனர். சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்பட அனைவரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். அதன்பிறகு, என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர். சிவராசன், சுபா ஆகியோர் என்னுடன் தங்கியிருந்தபோது நடந்த பல விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இப்போது உள்ளது போல தொலைத்தொடர்பு வசதிகள் அப்போது கிடையாது. எஸ்.டி.டி. போன் பூத்துகளும் குறைவாகத்தான் இருந்தன. எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார் சிவராசன். நான்கு முறை அவர்களோடு சென்றிருக்கிறேன். ' சந்திராசாமிக்குத்தான் போன் பேசுகிறோம். அவருடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் மொழி பெயர்த்துச் சொல்வார். கொலை வெற்றிகரமாக முடிந்ததும் நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என்று சொன்னார்கள். 

சிவராசனோ, ' ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில் ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. ‘நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார் சந்திராசாமி என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை அப்படியே கார்த்திகேயனிடம் கூறினேன். அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தவர், ‘சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்?' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட்டை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. லத்தியை எடுத்து இரண்டு கால்களையும் அடித்து நொறுக்கினார். என் மனைவியையே எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வைத்தார்கள். 98-ம் ஆண்டு மார்ச் மாதம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். 'என்னிடம் பேசுவதற்கு சோனியா காந்தி விரும்புகிறார்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர் மூலம் டெல்லி சென்றேன். அவர் என்னிடம் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தேன். அருகில் இருந்த பிங்கி என்பவர் மொழிபெயர்த்தார். அதிர்ச்சியோடு நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார் சோனியா. நான் குறிப்பிட்டுச் சொன்னவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகிவிட்டார். உண்மையை அறிந்தவன் என்ற அடிப்படையில், சிறைவாசத்தை அனுபவித்தேன்" எனக் குமுறலோடு பேசியிருந்தார் ரங்கநாத். அவருடைய வாக்குமூலம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளைக் கிளப்பினாலும், கால ஓட்டத்தில் கரைந்து போனது. 

" ராஜீவ் கொலை வழக்கில் சதித் தீட்டியதாக ரங்கநாத் மீது வழக்குப் பதியப்பட்டது. இதற்கு ஆதாரமாக அவர் மனைவி மிருதுளா தமிழில் எழுதிய ஐந்து பக்க கடிதத்தை தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். கன்னட மொழி பேசும் அவர் மனைவிக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற உண்மை, நீதிமன்றத்தில் எடுபடவில்லை. இந்த வழக்கில் சந்திராசாமிக்கு உள்ள தொடர்புகளைப் பற்றி விசாரணையின்போது, தெளிவாக எடுத்துச் சொன்னவர் அவர். அதற்கான அவர் அனுபவித்த சித்ரவதைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பின்னாளில் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, ' உண்மைக் குற்றவாளிகளை வெளியில் காட்டாமல், சதி வேலைகளுக்கு கார்த்திகேயனும் உடந்தையாக இருந்தார்' என்பதை பல மேடைகளில் பேசினார். சோனியா காந்தியை நேரில் சந்தித்தும் விளக்கினார்.

இன்று வரையில் ரங்கநாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலையும் கார்த்திகேயன் அளிக்கவில்லை. இந்த வழக்கில் உள்ள சர்வதேச சதிப் பின்னலை சோனியா அறிவார். 'தன்னுடைய பிள்ளைகளுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது' என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறார். ஏழு ஆண்டு சிறைத் தண்டனையின் விளைவாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருந்தார் ரங்கநாத். சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக அவரால் செயல்பட முடியவில்லை. வழக்குக்கு சம்பந்தமே இல்லாதவருக்கு வாழ்நாள் முழுக்க தண்டனையைக் கொடுத்தது சி.பி.ஐ. ராஜீவ் மரணத்தோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்ட உண்மைகளை இதுநாள் வரையில் தாங்கி வந்த, ரங்கநாத்தும் மறைந்துவிட்டார். வேறு என்ன சொல்வது?" என வேதனைப்பட்டார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. 

- ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close