Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இளவரசன், கோகுல் ராஜ், ஷங்கர் மாதிரி நான் ஆகவிரும்பவில்லை!'' - முத்துக்கிருஷ்ணனின் காதல் மனநிலை #JNUStudent

முத்துகிருஷ்ணன்

டெல்லி பல்கலைகழகத்தில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாக  கூறப்படும் முத்துக்கிருஷ்ணன் மரணம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது.  கடந்த ஆண்டு, ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் ரோஹித் வெமுலா  இறப்பதற்கு முன்னதாக, அவர் சந்தித்த அவமானங்களும், ஒடுக்குமுறைகளையும் ஒரளவு நாம் அறிந்திருந்தோம். ஆனால், முத்துக்கிருஷ்ணன் விஷயத்தில் எல்லாமே மர்மமாக உள்ளது, அவரின் தற்கொலை உட்பட! 

ஆனால், அவர் சமூகவலைத்தளத்திலும், பிளாகிலும் தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், போராட்டங்களையும் பதிவு செய்து வந்திருக்கிறார்.  அதில் சில பதிவுகளில், தன்னைக் கவர்ந்த பெண்களைப் பற்றியும், தன் காதலையும் பற்றி எழுதியிருக்கிறார்.

”நானும் அவளும் கண்ணும் கண்ணும் நோக்கிக்கொண்டோம். அதுதான் நாங்கள் பேசிய முதல் மற்றும் கடைசி முறை. அவளிடம் நான் வரலாறு பாடத்தைப் பற்றிதான் பேச ஆரம்பித்தேன்; கடைசியாக பேசியதும் வரலாற்றைப் பற்றியே! 

'அந்தப் பேராசிரியர் போல் நான் ஆகவேண்டும், அவர்தான் என்.சி.இ.ஆர்.டி  புத்தகங்களுக்கெல்லாம் ஆசான். அதற்கு, முதலில் அந்தப் புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று கூறினேன்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், அவர் சேலத்தில்  உள்ள ஒரு பள்ளிக்கு  கடினமான முறையில் சுண்ணாம்பு அடித்து, அந்த புத்தகத்தை வாங்க, பணம் சேர்த்தார் என்று கூறியிருக்கிறார்.

அந்தப் பதிவைத் தொடர்ந்து ”சேலத்தில் இருந்து சென்னை வந்தேன்;  அங்கே மயிலாப்பூரில் உள்ள ஒரு கடையில், என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தை  வாங்கினேன். பிறகு, நான் டெல்லி வந்தேன்... அந்தப் புத்தகத்தை படித்து முடிக்க கொஞ்சம் நேரமே ஆனது. அதற்கு முன்பே, அந்த பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என தெரிய வந்தது. 

இரண்டு நாட்கள் கழித்து, அந்தப் பேராசிரியரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய கடின உழைப்பால், என் கனவு நனவானது என்று நினைத்தேன்.  அப்போது, அந்தப் பெண் என்னை வாழ்த்தியது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த பேராசிரியரிடம் என் ஆராய்ச்சியைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தபோது, 'நல்லா இருக்கு', என்றார். 
 
அப்போது நான் அந்த பெண்ணிடம் பேசியதை  நினைத்துப்பார்த்தேன்... 'அந்தப் பேராசிரியரை சந்திப்பேனா மாட்டேனா என்றே தெரியவில்லை' என்று கூறினேன். அதற்கு அவள், 'நீ நிச்சயமாக சந்திப்பாய்' என்று கூறினாள்.. நான் என்னுடைய வலிகளைப்  புறக்கணித்து, என்னை சரிசெய்துகொண்டேன். ஏனென்றால், நான் இங்கு (டெல்லி பல்கலைகழகம்) வரவேண்டும் என்று நினைத்தேன்.

நான் மற்றோரு இளவரசன், கோகுல் ராஜ், ஷங்கர் ஆகவிரும்பவில்லை. முக்கியமாக..என்னுடைய ’க்ரஷ்’ எல்லாருமே, 'இந்த உலகத்தில் உனக்கு சிறந்த பெண் கிடைப்பாள்' என்று கூறியிருக்கிறார்கள். இப்போது, என் கனவுலகத்தில் (டெல்லி பல்கலைகழகம்) நுழைந்திருக்கிறேன்”, என நீள்கிறது அவரது பதிவு. 

’செல்லம்மா என் உயிர்’ 

செல்லம்மா


முத்துக்கிருஷ்ணன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீது மிகுந்த அன்புகொண்டவராக  இருந்திருக்கிறார் . அவரின் பெரும்பாலான பதிவுகள் அவரைச் சுற்றியிருந்த உறவுகள், நண்பர்கள் பற்றியே இருந்தன. குறிப்பாக, தனக்கும்,  தனது பாட்டி செல்லம்மாவும் இருந்த அன்பை கதைப்போல் எழுதிய ஒரு பதிவு! 

சேலத்தில் இவர் படித்த பள்ளியிலேயே, செல்லம்மா துப்புரவு வேலை பார்த்ததும், அவர் தனது கணவருக்கு புதிதாக சமாதி கட்டியதும், டெல்லியில் இருந்து சேலம் செல்ல போதிய பணம் இல்லாததால், செல்லம்மா இறந்தபோது ஊருக்குச் செல்லமுடியாததைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.

அதன் கடைசி வரிகளாக, “நான் இங்கு தாஜ்மகால் முன்பும் அமர்ந்திருக்கிறேன்; காதலி இல்லாமல்...ஆனால், என் நினைவு முழுவதிலும் செல்லம்மா ஆயாதான் நிறைந்திருக்கிறார். செல்லம்மா என் உயிர்”, என்று உருக்கமாக  எழுதியிருக்கிறார், முத்துக்கிருஷ்ணன்!

உயிர்களின் மீது தீரா காதலையும், நேசத்தையும், அன்பையும் வைத்திருந்த ஒரு ஜீவனால் தன் கழுத்தைத் தானே இறுக்கிக் கொள்கிற வலியை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா.. முத்துக்கிருஷ்ணன் மரணத்தின் வெளிச்சம் நிச்சயம் வெளிப்பட வேண்டும்

- ஷோபனா எம்.ஆர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close