Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் ராணுவ பட்ஜெட்... மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் இந்தியா!

இந்தியா


ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில், இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க உள்ளது இந்தியா. இது ராணுவத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் செய்யும் செலவு, அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைக் காட்டிலும் சீனா, பல மடங்கு அதிக தொகையை ராணுவத்துக்கு ஒதுக்குகிறது. பாகிஸ்தானும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துவருகிறது. மேலும், இந்தியாவுக்கும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்னையும் 69 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த இரண்டு நாடுகளும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு என்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிக அளவில் ராணுவத்துக்குச் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது, இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை அடையும் நிலையில் உள்ளது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரூ.3,59,854 கோடி ரூபாயை (53 பில்லியன் அமெரிக்க டாலர்) அருண் ஜெட்லி ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்தார். நாட்டின் ஜி.டி.பி-யில் இது, 2.25 சதவிகிதம். கடந்த ஆண்டு ஒதுக்கீடு 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டைக் காட்டிலும் 14,748 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதிகரித்துள்ள விலைவாசி காரணமாக இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும் அதிருப்தி வெளியானது. 

இந்த ஆண்டு, ராணுவத்துக்கு 53 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், இது முடிவானது அல்ல... மேலும், பென்ஷன், எல்லைப் பாதுகாப்புப் படை, அணுவாயுதங்கள், அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்குச் செலவிடப்படும் தொகை இதில் அடங்காது. இவற்றை எல்லாம் சேர்த்தால் ராணுவ ஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கும். இதைக் கணக்கிட்டால், இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, அதிக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு வந்துவிடும். 

ஒவ்வொரு நாடுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிடும் ஸ்டாக்ஹோல்ம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ), இந்தியாவின் ராணுவ ஒதுக்கீடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதை ஆய்வுசெய்து வருகிறது. இந்தியா தனக்குத் தேவையான ஆயுதங்களை பெருமளவில் ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. இந்தியாவின் ராணுவ இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 68 சதவிகிதம். இதற்கு அடுத்தப்படியாகத்தான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. 

ஆயுதங்கள் வாங்கும்போது, அதற்கான தொழில்நுட்பத்தையும் வழங்கப் பல மேலைநாடுகள் முன்வருவது இல்லை. ஆனால், ரஷ்யா இந்தியாவுக்கு இந்தத் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றத்துக்கு ஆதரவு வழங்குகிறது. இதனால், இந்தியா எப்போதும் ரஷ்யாவையே நம்பியிருக்கிறது. 

உலக அளவில் ராணுவத்துக்கு, அதிக செலவிடும் நாடு அமெரிக்கா. அது, 596 பில்லியன் டாலரைச் செலவிடுகிறது. அதிக அளவில் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது. ஆனால், அதன் டாப் ஐந்து ஏற்றுமதி பட்டியலில்கூட இந்தியா இடம்பெறவில்லை. ''அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கான ராணுவ ஏற்றுமதியில் மாற்றம் ஏற்படும். அதுவரையில், ரஷ்யாவே இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும்'' என்கிறது எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. 

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடாகச் சீனா உள்ளது. இது, 215 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குச் செலவிடுகிறது. பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 9.5 பில்லியன் டாலர். அது அந்த நாட்டின் ஜி.டி.பி-யில் 3.4 சதவிகிதம் ஆகும். 

- பா.பிரவீன் குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close