Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா - ரஷ்யா - சீன ராணுவ அமைச்சர்கள் சந்திப்பு ரத்தானது... காரணம் என்ன?

இந்தியா - சீனா பாதுகாப்பு துறை

ந்தியா, ரஷ்யா, சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, மூன்று நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவை மேம்படுத்த ரஷ்யா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மறுப்புச் சொல்லிவிட்டது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நட்பு நெருக்கம் அடைந்து கொண்டே செல்கிறது. இதை மனதில் கொண்டு, இந்தியா - சீனா உறவை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மத்தியிலான அமைப்பு ஒன்று சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

இதேபோன்ற ஒத்துழைப்பை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அளவிலும் ஏற்படுத்த ரஷ்யா முயற்சி மேற்கொண்டது. இதற்கு இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே யோசித்தன. எனினும் இந்தியாவைப் பொறுத்தவரை, பலகட்ட ஆலோசனைகள், கலந்துரையாடலுக்குப் பிறகு சீனாவுடன் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டது. அதேபோல், சீனாவும் பலத்த யோசனைக்குப் பிறகே அதற்கு ஒப்புக் கொண்டது. இரண்டு நாடுகளும் நெருங்கி வரவே, ஏப்ரல் 25-ம் தேதி, மூன்று நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்புக்கு ரஷ்யா ஏற்பாடு செய்தது. இதற்காக, பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வரும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 

ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று ரஷ்யாவிடம் தற்போது சீனா தெரிவித்துள்ளளது. இதை ரஷ்யா, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற தகவலை கடந்த வாரமே சீனா தெரிவித்து விட்டதாம்.

தலாய் லாமா

சமீபத்தில் அருணாச்சலப்பிரதேசத்துக்குத் திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா பயணம் மேற்கொண்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அருணாச்சலப்பிரதேசத்தைத் தன்னுடைய பகுதியாகச் சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அதனால், திபெத்தில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்த தலாய்லாமா அருணாச்சலப்பிரதேசம் செல்வதற்கு சீனா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. தலாய் லாமாவின் இந்தப் பயணத்தால், இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக அந்நாடு தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தியா, ரஷ்யா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கவிருந்த மாநாட்டை சீனா புறக்கணித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநாட்டைப் புறக்கணித்த தகவலை இதுவரை சீனா, இந்தியாவிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ரஷ்யாவிடம் தெரிவித்து விட்டதால், இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டியத் தேவையில்லை என்று சீனா கருதியிருக்கக்கூடும். ரஷ்யாவிடம் இருந்தே பெரும்பான்மையான ராணுவத் தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நட்புறவு சிறப்பான முறையில் தொடர்கிறது.

அமெரிக்காவுடனும் இந்தியா நெருக்கம் கொண்டிருக்கிறது. தற்போது திட்டமிடப்பட்ட ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு போலவே, அமெரிக்கா - இந்தியா - ஜப்பான் மற்றும் அமெரிக்கா - இந்தியா - ஆஸ்திரேலியா அமைச்சர்கள் அளவிலான அமைப்பு ஏற்கெனவே செயல்படுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. அதனால்கூட, ரஷ்யாவின் இந்த முயற்சியைச் சீனா தவிர்த்திருக்கலாம் என்று ராணுவ வியூக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அதேபோல், இந்தியாவுக்கும், சீனாவுக்குமான உறவைப் பொறுத்தவரை சமீபகாலமாகச் சுமூகமாக இல்லை. அணு தாது விநியோக குழுவில் இந்தியா உறுப்பினர் ஆவதை சீனா தடுத்தது. அதேபோல், காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் சபையின் கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்காகத் தடுத்தது சீனா. தற்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நிலையிலான கூட்டமைப்புக்கு சீனா மறுப்பு தெரிவித்திருப்பதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

- பா.பிரவீன் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close