Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பச்சைத் துண்டு போட்டிருக்கிறதால பாகிஸ்தான்காரங்கனு நினைச்சுடாதீங்க மோடிஜி!’ - பிரதமருக்கு ஒரு கடிதம்

ராஜாதி ராச, ராஜ மார்த்தாண்ட, டிஜிட்டல் குலோத்துங்க மோடிக்கு....

வணக்கம். ஸாரி, ஸாரி, உங்களுக்கு 'நமஸ்தே' சொன்னாத்தானே பிடிக்கும்! நமஸ்தே.

மோடி

உங்க பக்கத்துலயே சிவப்பா, பயங்கரமா தருண் விஜய்னு ஒருத்தர் இருப்பார். அவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் எங்களோட திருக்குறள், தமிழ் இலக்கியங்கள் தெரியும். அவருக்குப் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'கிற குறள் தெரியுமோ, தெரியாதோ (தெரிஞ்சா எங்களை ஏன் கறுப்புன்னு சொல்லப்போறார்) இன்னொரு குறள் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை.

அதாவது சுற்றி வரும் இந்த பூமியே விவசாயத்தின் பின்னால்தான் இருக்குங்கிறது அர்த்தம். உலகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா விவசாயம்...? விவசாயிகள்...?

நீங்க கொஞ்சநாளா வெளிநாடு போகாமல், இந்தியாவில்தான் இருக்கீங்கங்கிற தைரியத்தில் எங்க ஊர் விவசாயிகள் இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் போராட்டம் எல்லாம் நடத்தி உங்களைப் பார்க்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா பச்சைத் துண்டு போட்டிருக்கிறதால் அவங்களைப் பாகிஸ்தான்காரங்கனு நினைச்சிட்டீங்களோ என்னவோ, நீங்க அவங்களைப் பார்க்கவே அனுமதிக்கலை. இத்தனைக்கும் எங்க ஊரில் ரெண்டு பிரிவாப் பிரிஞ்சு சண்டை போட்டுக்கிட்டிருக்கிற அம்மா கட்சிக்காரங்களான தம்பித்துரையையும் மைத்ரேயனையும்கூட சந்திச்சிருக்கீங்க. ஆனா விவசாயிகளைச் சந்திக்கலை. கண்டிப்பா அவங்க பச்சைத் துண்டைப் பார்த்து மிரண்டு, 'பாகிஸ்தான்காரங்க'னு பயந்திருப்பீங்க. ஆனா ராமர் சத்தியமா, ஹெச்.ராஜா சத்தியமா அவங்க பாகிஸ்தான்காரங்க இல்லை; இந்திய விவசாயிகள்தான்.

'இந்திய விவசாயிகள்'னு அழுத்திச் சொல்றதுக்குக் காரணம் இருக்கு. எங்க ஊர் மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளுறப்போ 'தமிழக மீனவர்கள் மரணம்'னு 'இந்திய' சேனல்களில் செய்தி சொல்வாங்க. அதுமாதிரி கதை ஆகிடக்கூடாதுன்னுதான் 'இந்திய விவசாயிகள்'னு அழுத்திச் சொல்றேன்.

காந்தின்னு ஒருத்தர் இருந்தது உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஆமாங்க, நீங்க புதுசா அடிச்ச ரெண்டாயிரம் ரூபா நோட்டுலகூட ரோஸ் கலர்ல அவர் போட்டோதான் போட்டிருக்கு. அவர் ஏன் சட்டையே போடறதில்லை, தெரியுமா? எங்க தமிழ்நாட்டில் இருக்கும் மதுரைக்கு வந்தப்போ, 'தமிழக விவசாயிகள் சட்டைகூட போட முடியாத நிலைமையில் இருக்காங்களே'னு வருத்தப்பட்டு, அன்னையில் இருந்து சட்டை போடறதையே விட்டுட்டார்.

இப்போ டெல்லியில் விவசாயிகள் பிணமாக நடித்துப் போராட்டம், பாதி மீசை மழித்துப் போராட்டம், மண்சோறு சாப்பிடும் போராட்டம்னு பல போராட்டங்களை நடத்திட்டாங்க. அவ்வளவு ஏன், உங்க பிரதமர் அலுவலகம் பக்கத்தில மூணு விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்கூட நடத்திட்டாங்க. ஆனா ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை ட்வீட் பண்ணிச் சொல்ற நீங்க, விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுக்கவேயில்லை.

காந்தி காலத்தில் அரை நிர்வாணமா இருந்த விவசாயிகள் மோடி காலத்தில் முழு நிர்வாணமா மாறினதுதான் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா, மேக் இன் இந்தியாவா மோடி ஜி?

மோடி விவசாயிகள் போராட்டம்

எங்க சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. தலைவனும் தலைவியும் காதல் செய்யும்போது, "இந்த மரத்துக்கு முன்னால் காதல் செய்ய வேணாம்"னு தலைவி சொல்வா. தலைவன் காரணம் கேட்கும்போது, "இது நான் பிறக்கிறதுக்கு முன்னால் என் அம்மா நட்ட செடி. எனக்கு இந்த மரம் சகோதரி முறை. ரெண்டுபேருமே ஒண்ணா வளர்ந்தோம். என் அக்கா முன்னால் காதல் செய்யக் கூச்சமா இருக்கு"னு தலைவி சொல்வா.

இப்படி மரம், செடி, கொடி, மண், நிலம்னு எல்லாத்தையும் சக உயிர்களாப் பார்த்து வளர்ந்தது எங்க கலாசாரம். நிலங்களையே ஐந்து திணைகளாப் பிரிச்சு இலக்கியங்கள் வடிச்சிருக்கோம். ஆனா இதெல்லாம் உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. பொழைக்கிறதுக்கு எவ்வளவோ வழியிருந்தாலும் இன்னமும் மண்ணையும் விவசாயத்தையும் விவசாயிகள் கட்டி அழறதுக்கு இதுதான் காரணம்.

மோடி ஜி, நீங்க ஒருதடவை விஞ்ஞானிகள் மாநாட்டில் பேசினீங்க. ''நாங்கதான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடிச்சோம். மனித உடம்பில் யானை தலையை வெச்சு பிள்ளையார் உருவானதுதான் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி. புராண காலத்திலேயே விமானங்கள் இருந்திருக்கு; ராக்கெட் விட்டிருக்கோம்"னு எல்லாம் நீங்க பேசினதைக் கேட்டு செத்துப்போன ஐன்ஸ்டீன்கூட சிலிர்த்துட்டார்னு சொன்னாங்க. இந்தப் புராண விஞ்ஞான அறிவு மூலம் விவசாயிகளோ விவசாயமோ இல்லாம உணவுப்பொருட்களை உற்பத்தி பண்ண முடியாது ஜி!

வெளிநாட்டு கம்பெனிகளை எல்லாம் வரிசையா உள்ளே விட்டுட்டு, 'மேக் இன் இண்டியா'னு சொல்வீங்க. ஆனா உண்மையிலேயே 'மேக் இன் இண்டியா'வான விவசாயத்தின் பிரச்னைகளையே கண்டுக்கிறதில்லை. போராடுறது தமிழக விவசாயிகளா இருந்தாலும் இந்தியா முழுக்கவே விவசாயிகளோட நிலை இதுதான்.

அவங்க கேட்கிறது எல்லாம் என்ன, அதிகபட்சக் கோரிக்கையே 'கடன்களைத் தள்ளுபடி பண்ணுங்க'னுதான். ஆனா உங்க அரசு, 'அதெல்லாம் பண்ண முடியாது'னு சொல்லிடுச்சு. விஜய் மல்லையாவா இருந்தா கடனை வாங்கிட்டு கம்பி நீட்டிட்டு வெளிநாடு ஓடிடலாம். ஆனா விவசாயிகள் என்ன பண்ணுவாங்க பாவம்!

உலக அரசியல் வரலாற்றில் முதன்முறையா உங்க சட்டையில உங்க பேரை எழுதி ஊர்வலம் வந்தீங்க. அந்த சட்டையை லட்சக்கணக்கில் ஏலமும் விட்டீங்க. ஆனா இருந்த கோவணத்தையும் கழட்டி நிர்வாணப் போராட்டம் நடத்தும் விவசாயிகளோட பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேளுங்க. 'மன் கி பாத்'னு நீங்க ரேடியோவில்தான் மக்கள்கிட்ட பேசுவீங்களா? மக்களே உங்ககிட்ட நேரடியாப் பேச வந்தா பார்க்கவே மாட்டீங்களா?

மறுபடியும் சொல்றேன் ஜி, பச்சைத் துண்டு போட்டிருக்கிறதால் அவங்களை பாகிஸ்தான்காரங்கனு நினைச்சுடாதீங்க!

- இப்படிக்கு
நானும் இந்தியன்தான்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close