Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மம்தாவை விமர்சித்தவரின் தலைக்கு ரூ 22 லட்சம்! மேலும் முற்றுகிறது பி.ஜே.பி - திரிணாமுல் மோதல்!!

பி.ஜே.பி-க்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல்

மேற்குவங்க மாநிலத்தில் பி.ஜே.பி-க்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான மோதல், பி.ஜே.பி-யின் இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷ்னே-யின் சர்ச்சைக்குரிய அறிவிப்பால் மேலும் முற்றியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி, இந்துத்துவா அமைப்புகள் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். போலீஸாரின் தடியடி குறித்து கருத்துக்கூறிய, பாரதிய ஜனதா யுவமோர்ச்சா அமைப்பின் தலைவர் யோகேஷ் வர்ஷ்னே, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இந்து அமைப்புகள் நடத்தும் பேரணிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. அப்படியே பேரணி நடத்தினாலும் தடியடி நடத்திக் கலைப்பதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையைத் துண்டித்துக் கொண்டு வருபவருக்கு நான் 11 லட்சம் ரூபாய் தருவேன்" என்று அறிவித்தார். யோகேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மேற்குவங்க மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

இந்தப் பிரச்னை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமல்லாது, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரிக்கட்சிகளின் உறுப்பினர்களும் மம்தா பானர்ஜிக்கு எதிரான யோகேஷின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் இப்பிரச்னையை எழுப்பிப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேண்டு சேகர் ராய், "மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 'பேய்' என பி.ஜே.பி. யுவமோர்ச்சா தலைவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், 1990-ம் ஆண்டில் மம்தா பானர்ஜியைக் கொல்ல சதி நடைபெற்றது. இடதுசாரிகள் ஆட்சியின்போது நடைபெற்ற பல்வேறு பேரணிகள், ஆர்பாட்டங்களின்போது அவரை அடித்து, தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால், இப்போது பி.ஜே.பி மேற்குவங்க மாநில தலைவர் திலீப் கோஷ் உள்பட அந்தக் கட்சியின் தலைவர்கள் மோசமான வார்த்தைகளால் மம்தா பானர்ஜியை விமர்சிக்கிறார்கள்" என்றார்.

"தற்போது, 'மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் அளிப்பேன்' என்று தெரிவிக்கும் ஒருவரை இன்னமும் கைது செய்யாமல் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "யோகேஷ் வர்ஷ்னே-யின் இதுபோன்ற பேச்சுகளைக் கண்டிக்கிறேன். இப்பிரச்னையில் அவருக்கு எதிராக உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், "யோகேஷூக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அறிஞர்களும் மம்தா பானர்ஜிக்கு எதிரான கருத்துகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

தனது தலைக்கு 11 லட்சம் ரூபாய் அளிப்பதாக பி.ஜே.பி இளைஞர் அணித் தலைவர் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு கூறியதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டம் தொம்கால் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, "நான் தொடர்ந்து இதுபோன்ற வார்த்தைகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறேன். எனக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிப்பதன் மூலம், எங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். என்னைப் பொறுத்தவரை துர்கா பூஜையிலும் கலந்துகொள்கிறேன். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். தேவாலயத்திற்கும் செல்கிறேன். யார் என்னைத் தடுக்க முடியும்? நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தவறாகச் சித்தரியுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை; அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்வேன்" என்றார்.

மம்தா பானர்ஜி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு நுர்-உர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "மம்தா பானர்ஜி எங்களின் மரியாதைக்குரிய தலைவர். அவரை ஒரு சகோதரியாகக் கருதுகிறேன். பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யினர் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் அவரை விமர்சிப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். மம்தா பானர்ஜி தலைக்கு 11 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய யோகேஷ் வர்ஷ்னே-வின் தலையைக் கொண்டுவருபவருக்கு 22 லட்சம் அளிக்க நான் தயார்" என்றார் அவர். 

பிரபல எழுத்தாளர் நவநீத தேவ் சென், "இதுபோன்ற ஆட்சேபகரமான கருத்துகளை ஒருவர் எப்படித் தெரிவிக்க முடியும்? அப்படிப் பேசிய யோகேஷ் வர்ஷ்னேவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பி.ஜே.பி. இளைஞர் பிரிவுத் தலைவரின் இந்தக் கருத்து ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்றும், இதுபோன்ற மத அடிப்படைவாதத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் மேற்குவங்க மாநிலத்தின் பிரபல நாடகக் கலைஞர் தேபேஷ் சட்டோபாத்யாய தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு பேரணிகள், ஆர்ப்பாட்டங்களின் போது இந்து அமைப்புகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து குறைகூறி வருகின்றன. ஆனால், இதை முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனினும் இந்து அமைப்புகளுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான மோதல் முடிந்தபாடில்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

-சி.வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close