Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் ஒரு விலை... ஞாயிற்றுக்கிழமை லீவாம்..! - பெட்ரோல் பங்க் பரபர

பெட்ரோல் பங்க்

ரு காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது எப்போதாவது ஒருமுறை நடக்கும். இதற்கு, பெட்ரோலிய நிறுவனங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். அந்த நடைமுறைக்கே, எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும். ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது முடிவு செய்யப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்து கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பி.ஜே.பி, தற்போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், விலை ஏற்றத்தை விரைவாக அறிவிக்கும் பெட்ரோலிய நிறுவனங்கள், விலை குறைப்பை மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் அறிவிப்பது இல்லை. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுக்காகக் காத்திருந்ததாகக் கூறும் பெட்ரோலிய நிறுவனங்கள், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பெட்ரோல் விலையில் 3.77 ரூபாயும், டீசல் விலையில் 2.91 ரூபாயும் குறைத்தன. பெட்ரோலிய நிறுவனங்கள் விலை மாற்றியமைக்கப்படுவதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற, இறக்கத்தைக் காரணமாகக் காட்டுகின்றன. ஆனால், அதே விலைக்கு வாங்கும் மற்ற நாடுகளில் இந்தியா அளவுக்குப் பெட்ரோல், டீசல் விலை இல்லை. 

பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம்.

மாதந்தோறும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்வதற்குப் பதில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தினசரி  விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவிலும் பெட்ரோலிய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கொண்டுவர பெட்ரோலிய நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்குத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சோதனை முயற்சியாகப் புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் மட்டுமே நாட்டின் 95 சதவிகித பெட்ரோல் பங்க்-கள் உள்ளன. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பெட்ரோல் பங்க்-களை இந்த மூன்று நிறுவனங்களும் வைத்துள்ளன. இந்த நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்-களில் சோதனை ரீதியாகத் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "முதலில் இந்தியாவின் ஐந்து நகரங்களில், எண்ணெய் நிறுவனங்கள் சோதனை முறையில் இதை அமல்படுத்தும். அதன்பிறகு, நாடு முழுவதும் இதை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பதை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி.அசோக் கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்-களில், தினமும் சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருள்களை விற்பனை செய்வது என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தினசரி பெட்ரோலிய பொருள்களின் விலையை மாற்றுவது என்பது சாத்தியமான ஒன்றுதான். ஆனால், இதை எப்படிச் செயல்படுத்துவது என்று முதலில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியுள்ளது. பரிசோதனை முயற்சி முடிந்தபிறகு, நாடுமுழுவதும் அறிமுகம் செய்யப்படும். இந்த சோதனை முயற்சி ஒரு மாதத்தில் தொடங்கும்" என்றார். 

பெட்ரோல் டீசல் பங்க்

இதன்படி, புதுச்சேரி, சண்டிகர், விசாகப்பட்டினம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் ஆகிய நகரங்களில் சோதனை முறையில் இது அமல்படுத்தப்படுகிறது. வருகிற மே 1-ம் தேதியில் இருந்தே இதை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்-களை மூடவும், தினசரி வேலைநேரத்தைக் குறைக்கப்போவதாகவும் 'கன்சார்டியம் ஆஃப் இந்தியன் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன்' அறிவித்துள்ளது. 

இதுகுறித்து. தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் கே.பி.முரளியிடம் கேட்டோம். "தினசரி பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர், இதுபோன்று முயற்சி மேற்கொள்ள உள்ளதாக, அதுவும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அரசு ஆணையாக வெளியிட்டால் மட்டுமே, இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள், இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பேசமுடியும். மே 1-ம் தேதியில் இருந்து ஐந்து நகரங்களில் இந்த முறை அமலாகிறது என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல்தான், ஒருவரி தகவலை வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுகிறது என்று செய்தி வெளியிடுகிறார்கள். இதனால் தேவையற்ற பதற்றம்தான் உருவாகிறது. எங்கள் அமைப்பில் இதுதொடர்பாகப் பேசி வருகிறோம். விரைவில் அதுபற்றி மக்களின் சந்தேகத்தைப் போக்கும் அறிவிப்பை வெளியிடுவோம்" என்றார்.

புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரிடம் பேசுகையில், "இதுவரை எங்களுக்கு அப்படி ஒரு தகவல் வரவில்லை. ஆனால், பேப்பரில் பார்த்தோம். எப்படி விலையை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தினசரி மாறும் விலையை நினைவில் வைத்து ஊழியர்கள் பெட்ரோல், டீசலைப் போட வேண்டும். வாடிக்கையாளர்கள் எல்லோரும் இதைப் புரிந்து கொள்வது கடினம்தான். தினசரி மாற்றம் என்பது, எல்லாப் பங்க்-களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஹிந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை ஒரேமாதிரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இதனால், அருகருகே உள்ள கடைகளில் கூடப் பெட்ரோல், டீசலின் விலையில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்கு விலையை நிர்ணயிப்பார்கள், கையிருப்பை எப்படிக் கணக்கு செய்யப் போகிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு கடைநிலையில் உள்ள எங்களுக்குத்தான் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்" என்றார்.

- பா.பிரவீன் குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close