Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் அவசியமா?

விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விராட்

ந்தியாவின் பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும் விமானந்தாங்கி கப்பலைத் தாக்கி அழிக்கும் நோக்கில், பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வரும். அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்தியாவின் விமானந்தாங்கி கப்பல் எப்படித் தப்பியது, பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி அழிக்கப்பட்டது என்பதை விளக்குவதுதான் 'காஸி அட்டாக்' என்ற திரைப்படம். கடலில் மிகவும் கம்பீரமாகப் பயணிப்பது விமானந்தாங்கி கப்பல். தற்போது, இந்தியாவுக்கு விமானந்தாங்கி கப்பல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தரைப்படை, விமானப்படையால் எதிரியின் குறிப்பிட்ட எல்லை வரைதான் சென்று தாக்குதல் நடத்த முடியும். அதிகபட்சம் ஏவுகணை மூலம், கண்டம்விட்டுக் கண்டத்தின்மீது தாக்குதல் நடத்த முடியும். விமானங்கள் மூலம் அதிகத் தூரம் பயணிக்க முடியும். ஆனால், இதற்கு அதிக எரிபொருள் தேவை. அதிக எரிபொருளைச் சுமந்து சென்றால், ஆயுதங்களைச் சுமந்து கொண்டு அதிகத் தூரம் பயணிக்க முடியாது. இந்தக் குறைபாட்டைப் போக்கக் கூடியதுதான் விமானந்தாங்கி கப்பல். இந்தக் கப்பலில் விமான ஓடுபாதை இருக்கும். இதனால், சர்வ சாதாரணமாகப் போர் விமானங்கள் ஏறி, இறங்கிக் குறிப்பிட்ட இலக்கின் மீது தாக்குதல் நடத்த முடியும்.

இன்றைக்கு, 10 நாடுகள்தான் விமானந்தாங்கிக் கப்பலை வைத்திருக்கின்றன. விமானந்தாங்கி கப்பலை வைத்து, இயக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் தங்களிடம் இருந்த விமானந்தாங்கி கப்பலை எல்லாம் காயலான் கடைக்கு அனுப்பி விட்டன. சில நாடுகள் இப்போதுதான் விமானந்தாங்கி கப்பலைக் கட்ட ஆரம்பித்துள்ளன. மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்டுள்ள இந்தியாவிடம் தற்போது ஒரே ஒரு விமானந்தாங்கி கப்பல்தான் உள்ளது.

முன்பு, இந்தியாவிடம் ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் விராட் என இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் இருந்தன. 1997-ம் ஆண்டில் கடற்படையில் இருந்து விக்ராந்த் ஓய்வு பெற்றது. இதற்குப் பதிலாக, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற கப்பல் வாங்கப்பட்டது. ஆனால், ரஷ்யா, குறித்த காலத்தில் அந்தக் கப்பலை டெலிவரி செய்யாமல் இழுத்தடித்தது. கடைசியில், ஒப்பத்தத்தைக் காட்டிலும் அதிகப் பணத்தைச் செலுத்தி, அந்தக் கப்பலை இந்தியா வாங்கியது. இதனால், இந்தியாவின் விமானந்தாங்கிக் கப்பலின் பலம் இரண்டானது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ் விராட், கடந்த மாதம் ஓய்வு பெறவே இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலின் எண்ணிக்கை மீண்டும் ஒன்றாகக் குறைந்தது.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை பலத்தை அதிகரிக்க இன்னொரு விமானந்தாங்கி கப்பல் அவசியம் என்ற நிலையில், முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே விமானந்தாங்கி கப்பல் கட்டப்பட்டு வருகிறது. கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்தப்பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தக் கப்பலுக்கு, 'ஐ.என்.எஸ் விக்ராந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, அடுத்த ஆண்டு இந்திய கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதவிர, இன்னும் கூடுதலாக ஒரு விமானந்தாங்கி கப்பல் இருப்பது இந்தியாவுக்கு நல்லது என்று இந்திய கப்பல் படை கருதுகிறது. இதையொட்டி, இந்தக் கப்பல் கட்டுமானத்துக்குப் பூர்வாங்க பணிகளைத் தொடங்க, கப்பல் படை 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதுவரை இந்தக் கப்பல் கட்டுமானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 

பாகிஸ்தான், சீனா என அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் உள்ள சூழலில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யக் குறைந்தது மூன்று விமானந்தாங்கி கப்பல்களாவது தேவை. மிக நீளமான கடற்கரைப் பகுதியைக் கொண்டது இந்தியா. மேலும் கிழக்கில் அந்தமான் தீவுகள், மேற்கில் லட்சத்தீவுகள் என்று தீவுக் கூட்டங்கள் நிறைய உள்ளன. இதனால், கிழக்குப் பகுதிக்கு ஒரு விமானந்தாங்கி கப்பல், மேற்குப் பகுதிக்கு ஒரு விமானந்தாங்கி கப்பல் இருப்பது அவசியம். இந்த இரண்டு கப்பல்களில் ஏதாவது ஒன்றுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், சமாளிக்க எப்போதும் தயார் நிலையில் ஒரு விமானந்தாங்கி கப்பல் இருக்க வேண்டியது அவசியம். எனவே, கூடுதலாக ஒரு விமானந்தாங்கி கப்பலைக் கட்ட வேண்டும் என்ற வரைவுத் திட்டத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாகக் கப்பல்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பல்

இதுகுறித்து போர்க் கப்பல் தயாரிப்பு மற்றும் கையகப்படுத்துதல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் டி.எம். தேஷ்பாண்டே கூறுகையில், "இந்தியாவுக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது அரசுதான். தற்போது, என்ன மாதிரியான கப்பலை வடிவமைப்பது, எரிபொருளாக எதைப் பயன்படுத்துவது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது கப்பலைக் கட்டுவது தொடர்பாகக் கப்பற்படை மற்றும் அரசுத் தரப்பில் இதுவரை இணக்கமான சூழலே நிலவுகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் புதிய கப்பல் கட்ட அரசு நிதி ஒதுக்கும் என்று நம்புகிறேன்" என்றார். 

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இரண்டாவது விமானந்தாங்கி கப்பல், அணுசக்தியில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் எடை மட்டும் 65 ஆயிரம் டன்னாக இருக்கும். இது 2025-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, விசாகபட்டினம் கப்பல் கட்டும் தளத்தில், அணு சக்தியில் இயங்கும் நீர் மூழ்கிக்கப்பலை இந்தியா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- பா.பிரவீன் குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close