Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய நகரங்களின் பெயரை மாற்றிச் சீனா அடாவடி! என்ன செய்யப்போகிறது இந்தியா?

சீனா இந்தியா எல்லை

மோடி பிரதமரானால் பாகிஸ்தான், சீனா நம்மைக் கண்டு அஞ்சும் என்று வாய்கிழியப் பேசினார்கள். இன்றைக்கு, நம்முடைய ராணுவ முகாமுக்குள் வந்து தாக்குதல் நடத்தும் அளவுக்குப் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தைரியம் வந்திருப்பதும், நம்முடைய பகுதிகளின் பெயரைச் சீன மயமாக்கும் வகையில் பெயரை மாற்றிச் சீனா அறிவித்திருப்பதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும், வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவித்துவிட்டு அமைதி காத்துக்கொண்டிருக்கிறோம். 

இந்த மாதம் முதல் வாரத்தில், திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாச்சல பிரதேசம் சென்றதில் இருந்து பிரச்னை தீவிரமாகியுள்ளது. 'அருணாச்சல பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை நீடிக்கிறது. அதனால், அருணாச்சல பிரதேசத்துக்குள் தலாய் லாமா செல்வதை அனுமதிக்க முடியாது' என்றது சீனா. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசம் தொடர்பாகச் சீனாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை. அது, இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதில் உறுதியாக உள்ளது. இந்தோ - சீனா போரின்போது சீனா கைப்பற்றிய பகுதிகள் தொடர்பாகத்தான் இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

தலாய் லாமா அருணாச்சலபிரதேசம் பயணம்!

தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்தின் தவாங் நகருக்குச் சென்றுவந்ததில் இருந்தே, சீனா புகைந்துகொண்டிருக்கிறது; இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம்காட்டி வருகிறது. இந்தியா - சீனா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தின் ஐந்து நகரங்களின் பெயரை மாற்றி அறிவித்துள்ளது சீனா. எப்படி இந்தித்திணிப்பு நடக்கிறதோ... அதுபோல, சீனாவில் எங்கும் சீன மொழித் திணிப்பு நடக்கிறது. அதன் ஒருபகுதியாக அருணாச்சல பிரதேசத்தின் நகரங்களின் பெயர்கள் மாற்றப்படுவதாகச் சீனா அறிவித்துள்ளது. இதற்கு, அது கூறும் காரணம், இந்தியா அருணாச்சல பிரதேசம் என்று கூறும் பகுதியானது, எங்களைப் பொறுத்தவரை தெற்கு திபெத். அது எங்களுக்குச் சொந்தமான பகுதி. அதனால், சீன மொழியில் பெயரை வைக்கிறோம்' என்பதுதான். 

தலாய் லாமா வருகையைக் கண்டித்து, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த, எட்டு - பத்து நாட்களில் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது, அதன் கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

ஆனால், ''தலாய் லாமா பயணத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லு காங். அதேநேரத்தில், ''பிரச்னைக்குரிய பகுதிகளில் எங்களுக்கு உள்ள உரிமையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் பெயர் மாற்றம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி புதிய பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தப் பெயருக்கு எந்தப் பெயர் என்ற அறிவிப்பை சீனா வெளியிடவில்லை. இதன்படி, வோஜாய்னிங்கிங், மிலா ரி, கயோடெங்கார்போ ரி, மெயின் காக்கா, பூமோ லா மற்றும் நாம்கபுப் ரி என்ற பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தவாங் மாவட்ட நுழைவாயில்!

எந்த நகருக்கு என்ன பெயர் என்று தெரியாததால், தற்போதுள்ள நகரங்களில் சிலவற்றுக்கு இந்தப் பெயர்களைப் பொருத்திப் பார்த்ததில், மூன்று நகரங்களின் பெயர்கள் பொருந்தி வந்திருக்கின்றன. மற்ற மூன்று நகரங்கள் எவை என்று தெரியவில்லை. 

அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான நம்கா சு-வுக்கு நாம்கபுப் ரி என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள பும்லா என்ற நகரத்துக்குப் பூமோ லா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான், இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான சந்திப்பு நடப்பது வழக்கம். இந்திய விமானப்படை ஓடுதளம் உள்ள மென்சுக்கா நகருக்கு மெயின்காக்கா என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு இதுவரை இந்திய தரப்பில் இருந்து கண்டனம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய நகரங்களின் பெயரைச் சீனா மாற்றினால், நாம் இனி சீனாவின் தலைநகர் பீஜிங்கை பீஜைப்பூர் என்று அழைப்போம் என்று ட்விட்டரில் ஒருவர் கொந்தளித்திருக்கிறார். மற்றொருவரோ, அருணாச்சல பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்று சீனா அழைத்தால், இனி நாம் திபெத்தை வடக்கு அருணாச்சல பிரதேசம் என்று அழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். 56 இன்ச் மார்பளவு கொண்ட மோடி என்ன செய்யப்போகிறார்? இதுதான் இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் எழுத்திருக்கும் பில்லியன் டாலர் கேள்வி.

- பா.பிரவீன் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close