Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்கள் மீதான சீனாவின் உளவியல் போர்! ஏன், எதற்கு, எப்படி?

இந்தியர்கள் மீது சீனா உளவியல் போர்

ந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காணாமல், பெயர் மாற்றம், எல்லையில் ராணுவம் குவிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் உளவியல் போரில் சீனா ஈடுபடுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறு நகரங்களின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது சீனா. மேலும், பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று கூறியதோடு, இந்தப் பகுதிகளை இனி, புதிய பெயரில்தான் அழைக்க வேண்டும் என்று கூகுள் உள்ளிட்ட இணைய வரைபட, தேடுதல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது சீனா. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனாலும் சீனா தொடர்ந்து பிரச்னையைக் கிளறிக்கொண்டே இருக்கிறது.

சீன அரசு ஆதரவு குளோபல் டைம்ஸ் பத்திரிகையில், "இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், இந்தியாவோ, பிரச்னைக்கு உரிய பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வது, ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. அனைத்துக்கும் மேலாக, தெற்கு திபெத்தை அருணாச்சலபிரதேசம் என்று அறிவித்து, இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாக 1987-ல் இணைத்துக்கொண்டுள்ளது.

சீனாவுக்கு எதிரான கருவியாக தலாய் லாமாவை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு யார் பெரியவர், யார் வலிமையானவர் என்பது தீர்வைத் தராது. அப்படி இல்லையெனில், சமரச மேசையில் உட்கார்ந்து இந்தியாவுடன் பேச வேண்டிய தேவை சீனாவுக்கு இருக்காது. எனவே, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. வெறுமனே, தலாய் லாமாவை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இந்தியாவுக்கு வந்துவிடாது. தொடர்ந்து இந்தியா இப்படி விளையாடிக் கொண்டிருந்தால், அது இந்தியாவுக்குத்தான் பாதகமாக அமையும்" என்று மிரட்டல் விடுப்பது போன்ற தலையங்கத்தை வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து எல்லைப் பிரச்னையைக் கிளப்பிக்கொண்டிருப்பதன் மூலம் இந்தியர்களுடன் உளவியல் போரில் சீனா மேற்கொள்வதாக போர் வியூக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "இந்தியாவுடன் சீனா ஏற்கனவே ஒருமுறை போரில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய சூழலில், இருநாட்டு ராணுவமுமே மிகவும் வலிமையாக உள்ளன. மீண்டும் போர் ஏற்பட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. எனவே, இந்திய மக்களை மனதளவில் தைரியம் இழக்கச் செய்யும் நடவடிக்கையாகச் சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம் இதை உறுதி செய்கிறது. சீனாவின் உளவியல் போரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு, தங்கள் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மக்களை மனதளவில் வலிமையானவர்களாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்" என்றனர்.

சீன ராணுவம்


இதற்கிடையே இந்த விவகாரத்தில், அருணாச்சலப்பிரதேச அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அருணாச்சலப்பிரதேச பி.ஜே.பி தலைவர் டாபீர் கூறுகையில், "அருணாச்சலப்பிரதேசத்தைச் சீனா உரிமை கோர எந்தவித ஆதாரமோ, உரிமையோ இல்லை. 1959-ம் ஆண்டில், திபெத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தது சீனாதான். அருணாச்சலப்பிரதேசம் திபெத் ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை என்று, திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவே பல முறை கூறி விட்டார். எனவே, அருணாச்சலப்பிரதேச நகரங்களின் பெயரை மாற்ற சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு காலத்தில், சீனா நம்முடைய அண்டை நாடாக இல்லை. நமது அண்டை நாடாகத் திபெத் தான் இருந்தது. திபெத் உடனான எல்லைப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், 1914-ல் சிம்லா உடன்பாடு எட்டப்பட்டது. இதில், பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் அப்போதிருந்த இந்தியா மற்றும் திபெத், சீனப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்" என்றார்.

அருணாச்சலப்பிரதேச தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் லாலா கூறுகையில், "சீனத் தலைநகரான பீஜிங்கிற்கு, மும்பை என்று பெயர் மாற்றம் செய்துவிட்டு, 'அது இந்திய நகரம், இந்தியாவுக்குத்தான் சொந்தம்' என்று இந்தியா கூறினால் சீனா ஏற்றுக்கொள்ளுமா? அதுபோன்ற நடவடிக்கையாகத்தான், இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை நாங்கள் பார்க்கிறோம்" என்கிறார்.

அருணாச்சலப்பிரதேச காங்கிரஸ் தலைவர் டாக்கம் சஞ்சய் கூறுகையில், "அருணாச்சலப்பிரதேச இனக் குழுக்கள் அனைத்தும், தங்கள் மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் கருதுகின்றன. சில இனக் குழுக்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கூடப் பங்கேற்றுள்ளன. எனவே, சீனாவின் கருத்துக்கு இங்கு எந்த ஆதரவும் இல்லை. அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில், சீனா தேவையின்றி மூக்கை நுழைக்கின்றது" என்றார்.

இரு தரப்பில் இருந்தும் கடுமையான சொற்கள் வந்து விழ ஆரம்பித்து விட்டன. வார்த்தைப் போர் நிஜப் போராக மாறுவதைத் தவிர்க்க, இந்தியா - சீனா அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வேண்டியது அவசியம். வலிமையான பிரதமர் இருந்தால், சீனா வாலாட்டாது என்ற கருத்து இப்போது பொய்யாகிப் போய்விட்டது. எனவே, இன்னும் மவுனம் காக்காமல், அமைதிப் பேச்சுக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். காலத்தைத் தவறவிட்டால், விளைவுகள் இரு தரப்புக்குமே பாதகமாகவே அமையும்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close