Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘காஷ்மீர் சூப்பர் 40’ - இந்திய ராணுவத்தின் இந்த அசத்தல் சேவை பற்றி தெரியுமா?

தினசரிகளைப் புரட்டிப் பார்த்தாலே காஷ்மீர் இளைஞர்கள் கல்லெறியும் காட்சிகள் அவற்றில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். கடந்த ஓராண்டு காலமாக நடந்துவரும் கல்லெறி சம்பவங்கள், இன்னும் ஓயவில்லை. இதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களால் உயிரிழந்த வீரர்களின் தலையை வெட்டி, உடலைச் சின்னாபின்னமாக்கிக் குதறியிருக்கிறார்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர். இத்தகைய ரணகளச் சம்பவங்களுக்கு மத்தியில் உயிரைப் பணயம்வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தினர், பல நல்ல செயல்களையும் செய்துவருகிறார்கள்.

இந்திய ராணுவம்

அவற்றில் ஒன்றுதான் ஶ்ரீநகரில் அமைந்துள்ள 'காஷ்மீர் சூப்பர் 40' என்ற ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு. இதில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான ஓராண்டுகால இலவசப் பயிற்சி வழங்குகிறது இந்திய ராணுவம். இந்த ஆண்டு பயிற்சிபெற்ற 40 பேரில், 26 மாணவர்களும் 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முன்பு இதுபோல் பெரிய எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு, தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள், வடக்கு காஷ்மீரைச் சேர்ந்த 10 மாணவர்கள், கார்கில், லடாக் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேரும், ஜம்மு பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு முதல்முறையாக ஐந்து பெண்கள் பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் இருவர் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தேர்ச்சியின் மூலம், தேசிய அளவில் ஐஐடி முதன்மை நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் ஒன்றாக உள்ளது 'காஷ்மீர் சூப்பர் 40' பயிற்சி மையம். ஐஐடி நுழைவுத்தேர்வைத் தவிர, இதர பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுகளிலும் `காஷ்மீர் சூப்பர் 40' பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளின் மூலம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள மாணவர்களின் ஐஐடி கனவு நனவாகிவருகிறது. 

இந்த மையம், 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தினரால் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்குத் தேவையான வசதிகள், உணவு, உறைவிடம் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு, பல்வேறு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுவருகிறது. 2013-14-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவனமான பவர்கிரிட் இந்தியா நிறுவனம் 30 லட்சம் ரூபாயும், 2014-15ம் ஆண்டில் ரூரல் எலெக்ட்ரிஃபிக்கேஷன் நிறுவனம் 50 லட்சம் ரூபாயும், 2015-16-ம் ஆண்டு டாடா நிறுவனம் 50 லட்சம் ரூபாயும், 2016-17ம் ஆண்டு பெட்ரோநெட் நிறுவனம் 89 லட்சம் ரூபாயும் சமூக மேம்பாட்டுக்கான நிதியாக வழங்கியுள்ளது.

வரும் ஆண்டில் ஐம்பது மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்திருக்கிறது இந்த மையம். பள்ளிக் குழந்தைகளுக்காக ராணுவ குட்வில் பள்ளிகள், இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான தொழில் பயிற்சி மையங்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கான மேம்பாட்டு மையங்கள் என, மக்களின் மனநிலையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல பணிகளைச் செய்துவருகிறது இந்திய ராணுவம். இதைத் தவிர, ராணுவத்தில் காஷ்மீர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துக்கொள்கிறது. கல்லெறியும் இளைஞர்களுக்குக் கல்வி கொடுத்தாலும் இன்னமும் கல்லெறியும் சம்பவங்கள் மட்டும் குறைந்தப்பாடியில்லை.

`இந்தியத் திருநாட்டைப் பாதுகாப்பது மட்டுமல்ல, நாட்டின் தரத்தை உயர்த்தும் நமது கடமையே' எனப் பணியாற்றிவரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close